Published:Updated:

துலாம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும்.

துலாம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும்.

Published:Updated:
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பேதம் இல்லாமல் அனைவரிடமும் ஒரே தன்மையில் பழகும் துலாராசி நேயர்களே... துன்பங்கள் வரும்போதெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்பவர்கள் நீங்கள் தான். அப்படிப்பட்ட உங்களுக்கு வரும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு எப்படி அமையப் போகிறது என்பதைக் காணலாம்.

ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும். முகத்தில் தேஜஸ் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அழகு, இளமைக் கூடும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

சுக்கிரனும், புதனும் தனுசு ராசியில் வீற்றிருக்கும் நேரத்தில் 2023-ம் புத்தாண்டு பிறப்பதால் பணம் நிறைய வரும். புதிய மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

6 மற்றும் 7-ம் வீட்டில் குருபகவான்

22.4.2023 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீடான மீனத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் எப்போதும் மனதில் ஒரு கவலை இருந்தவண்ணம் இருக்கும். வேலை தொடர்பான டென்ஷன் வந்து வந்து போகும். ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து சரியாகும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும். என்றாலும் கடனில் ஒரு பகுதியை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

குருபகவான்
குருபகவான்

23.4.2023 முதல் குருபகவான் 7-ம் வீடான மேஷத்தில் அமர்வது பல நல்ல பலன்களைத் தரும். வாழ்வில் அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாகக் குறையும். நல்ல திருப்பங்கள் உண்டாகும். உற்சாகமாகப் பணிசெய்வீர்கள். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பழைய சொந்தங்கள் தேடி வரும். சகோதரர் உதவுவார். குருவின் பார்வை ராசிக்குக் கிடைப்பதால் தங்க நகை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

ராகு - கேது சஞ்சாரம் சாதகமா?

8.10.2023 வரை ராசியிலேயே கேதுவும் 7-ம் வீட்டில் ராகுவும் சஞ்சரிப்பதால் தலைவலி, தலைசுற்றல்,செரிமானக் கோளாறு போன்ற சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் வந்த வண்ணம் இருக்கும். 9.10.2023 முதல் ராசியை விட்டுக் கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். முகம் மலர்ந்து காணப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ராகு கேது
ராகு கேது

சனிபகவான் சாதகமா?

சுகஸ்தானமான 4-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் பயணங்களின் போது பாதுகாப்பு தேவை. வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். தேவையற்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 5 ம் வீடான கும்பத்தில் அதிசாரமாகப் பெயர்ச்சி ஆவதால் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அதேவேளை இதுவரை இருந்த குழப்பங்கள் விலகிப் புதிய நம்பிக்கை உண்டாகும்.

வியாபாரம்: பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள்.

உத்தியோகம்: சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். சக ஊழியர்களிடம் நீக்குபோக்காக நடந்துகொள்ளுங்கள். இடமாற்றங்கள் வரும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.

சனிபகவான்
சனிபகவான்
மொத்தத்தில் 2023-ம் ஆண்டின் முற்பகுதி தொடக்கதில் சில சவால்களை முன்வைத்தாலும் பிற்பகுதி தன்னம்பிக்கையை வளர்த்து சாதிக்க வைக்கும்.