புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு கும்ப ராசி பலன்கள்

கும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு கும்பம் ராசிபலன்கள்

காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, 2023 புத்தாண்டு பிறப்பதால் சாதுர்ய மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். சூரியனும், புதனும் சாதகமாக லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சாதகமாகும்.

2023 புத்தாண்டு 
கும்ப ராசி பலன்கள்

குரு பகவான் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக் கும். உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதியர்க்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் பணம் திரட்டி புது வீடு கட்டிக் குடி புகுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். அரசாங்கத்தாலும், அரசியல் வாதிகளாலும் ஆதாயம் உண்டு. நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவான் 23.4.23 முதல் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களில் அலைச்சலும் சிரமமும் இருக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வசதி, செல்வாக்கைக் கண்டு தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.

8.10.23 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்; வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

2023 புத்தாண்டு 
கும்ப ராசி பலன்கள்

ஆண்டு தொடக்கத்தில் விரயச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை மனசை வாட்டும். ஆன்மிக வாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். எல்லோருக்கும் நீங்கள் நல்லது செய்தாலும் கெட்ட பெயரே மிஞ்சும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனி பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஜன்மச் சனியாக அமர்வதால், வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத்தடை வந்து நீங்கும். வறட்டு கௌரவத்திற்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். என்றாலும் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கடன் தர வேண்டாம். வாடிக்கை யாளர்களை அன்பாக நடத்துங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். அரிசி, பூ, எலெக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஏப்ரல் மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் மரியாதை கூடும். மே மாதம் முதல் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். பதவி உயர்வு, சம்பள பாக்கியைப் போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களால் மனஉளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் முன்னேற்றம் தருவதாகவும், மத்தியப் பகுதியில் இருந்து அலைச்சலும் ஆதாயமும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: குருவருள் நலம் சேர்க்கும். மகான்கள் சித்த புருஷர்களின் ஜீவ சமாதித் தலங்களுக்குச் சென்று, வழிபட்டு வாருங்கள். வாரம் ஒருமுறை யேனும் பசுக்களுக்கு உணவு கொடுங்கள்; பிரச்னைகள் அனைத்தும் விலகும்.