புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு தனுசு ராசிபலன்

தனுசு
பிரீமியம் ஸ்டோரி
News
தனுசு

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு தனுசு ராசிபலன்கள்

அன்புக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் 2023 புத்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

2023 புத்தாண்டு தனுசு ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புது சொத்து வாங்குவீர்கள்.

22.4.22 வரையிலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும். தாயாருக்குக் கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். புதியவர்களை நம்பிப் பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்களை சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம்.

குரு பகவான் 23.4.23 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே தொடர் வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

2023 புத்தாண்டு தனுசு ராசிபலன்

மகளுக்குத் திருமணம் கூடிவரும். சிலர், சொந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். சொத்துப் பிரச்னை களுக்கு அதிரடி தீர்வு காண்பீர்கள். வேலை தேடும் அன்பர்களுக்குக் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

8.10.23 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் பக்குவம் வாய்க்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

9.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.

புத்தாண்டின் தொடக்கத்தில் பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வேலைப் பளு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அதேநேரம், மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 3-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், உங்களின் புகழ்- கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும்.

வியாபாரம் செழிக்கும். வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியால் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில், உங்க ளுடைய தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டு கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். பதவி உயரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சிலருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாகவும், ஆசையை நிறைவேற்றுவதாகவும், மன அமைதியைத் தருவதா கவும் அமையும்.

பரிகாரம்: பிரதோஷ வழிபாடு சந்தோஷம் தரும். அதேபோல், அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி சமர்ப்பித்து பெருமாளையும் தாயாரையும் வணங்கி வாருங்கள்; வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்.