திருக்கதைகள்
Published:Updated:

`2023 சனிப்பெயர்ச்சி நீங்கள் தயாரா?'

ஶ்ரீசனிபகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசனிபகவான்

ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

மனித வாழ்க்கை விதியின்படி அமைகிறது. நவகிரகங்கள் அந்த விதியை செயல்படுத்துகின்றன. ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால அளவில் பன்னிரு ராசிகளிலும் சஞ்சரித்துப் பலன் கொடுக்கின்றன. இதனால் ஒவ்வொருவரது வாழ்விலும் நன்மைகளும் தீமைகளும் மாறிமாறி நடைபெறும்.

அனைத்து கிரகங்களும் பெயர்ச்சி உண்டு என்றாலும் ஆண்டு கிரகங்கள் எனப்படும் சனி, ராகு - கேது, குரு ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதிலும் சனிப்பெயர்ச்சி அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகும். வரும் 2023-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதுகுறித்த எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத்தொடங்கிவிட்டது. காரணம். சனிபகவான் பெயர்ச்சிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வருங் காலத்துக்கான பலன்களை அறிகுறியாகக் காட்டிவிடுவாரே!

அந்த வகையில் வரும் 2023 சனிப் பெயர்ச்சி எப்பொது, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் அமையும் என்பது குறித்து ஜோதிடர் பாரதி தரின் விளக்கங்கள் உங்களுக்காக

சனிப்பெயர்ச்சி எப்போது?

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி 2023 ஜனவரி 17-ம் தேதியும், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 19-ம் தேதியும் சனிப் பெயர்ச்சி நிகழும் என்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள். எது எப்படி இருந்தாலும் 2023 -ல் சனிப்பெயர்ச்சி நிச்சயம்.

தற்போது சனிபகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். அடுத்த ஆண்டு அவர் கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். கும்பமும் சனிபகவானின் சொந்த வீடு. எனவே அங்கும் அவர் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பார். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். துன்பங்கள் முற்றி லும் நீங்கி நல் வாழ்வு பிறக்கும். சில ராசிக்காரர்கள் முன்னைவிட ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இந்த வகையில் அடுத்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் பலன் பெறப் போகும் ராசிகள் எவை, பரிகாரமும் வழிபாடும் தேவையான ராசிகள் என்னென்ன, மத்திமப் பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார், யார் அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.

பாதிப்புகள் விலகப்போகும் ராசிகள்

தற்போது தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நிகழவுள்ள சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் ஆதிக்கத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் அவர்கள் சந்தித்துவந்த பல சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பெரும் பிரச்னைகளைச் சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்துவந்த தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் மாற்றம் பெரும் ஏற்றத்தைத் தரும். இனி, அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அனைத்தையும் புதிதாகத் தொடங்குவது போன்ற உணர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். திருமணம் தடைப்பட்டவர்களுக்குத் திருமணம் கூடிவரும். குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

மகர ராசியினருக்கு ஜன்மச் சனியாக சஞ்சரித்து வந்த சனி பகவான் 2023-ம் ஆண்டு 2-ம் இடத்தில் அடி எடுத்துவைக்கிறார். அனைத்தும் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத நிலையில் தவித்துவந்த மகர ராசிக்காரர்களுக்கு, அடுத்த ஆண்டின் சனிப் பெயர்ச்சி பெரும் ஆசுவாசத்தைத் தரும். கெடுபலன்கள் குறையும். நம் எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். வேலை வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற தன்மை விலகும். திருமணம் கூடிவரும். அனைத்து விஷயங்களிலும் சிறு நிதானம் தேவை என்றாலும் பயப்படத் தேவையில்லை.

நிதானம் தேவைப்படும் ராசிகள்

ரிஷப ராசிக்கு 10-ம் இடத்தில் அமரும் சனிபகவான் மிதமான பலன்களைத் தருவார். இந்தக் காலகட்டத்தில் அனைத்திலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றிகள் கிடைக்கும்.

கடக ராசிக்காரர்கள் ஏற்கெனவே கண்ட சனியினால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். அடுத்த பெயர்ச்சியில் அவர்களுக்குச் சனி பகவான் 8-ம் இடத்தில் அஷ்டமச் சனியாக அமர்கிறார். ஆகவே, கவனமும் நிதானமும் அவசியத் தேவை. முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். வெற்றிபெறுவதற்காக தவறான பாதைகளை ஒருபோதும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நிதானமாகச் செயல்பட்டால் அஷ்டம சனியின் பாதிப்புகளிலிருந்து விலகி நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

சிம்மராசிக்காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குகிறது. எனவே மனநிலையில் சிறு தடுமாற்றங்கள் இருக்கும். எனினும் குருபகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருப்பதால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 4-ல் அமர்வதால் எதிலும் நிதானம் தேவை. கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் அவசியம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

கும்ப ராசிக்கு 2023-ம் ஆண்டு சனிபகவான் ஜன்மச் சனியாக வந்து அமர இருக்கிறார். கும்ப ராசி சனிபகவானின் சொந்த வீடு என்பதால், பெரும் தீமைகள் நடைபெறாது என்றாலும் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம். புதிய கடன்களை வாங்கும்போது, நன்கு ஆலோசித்து வாங்குவது நல்லது. வியாபாரத்தில் மிகவும் அக்கறை அவசியம். திருமண முயற்சிகளை மேற்கொள்ளும்போது நன்கு விசாரித்துச் செய்வது நல்லது.

மீன ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏழரைச் சனி ஆரம்பிக்க இருக்கிறது. எனவே அவசர அவசரமாகவும் உணர்ச்சிவயப்பட்டும் முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக் கல் வாங்கலில் மிகவும் கவனம் தேவை. முன்யோசனை இன்றி முதலீடுகள் செய்யவேண்டாம்.

நற்பலன்கள் யாருக்கு?

மேஷ ராசிக்காரர்களுக்கு 11 ல் அமரும் சனி புதிய திருப்பங்களைத் தருவார். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். திருமணத் தடைகள் நீங்கி நல்ல பலன்கள் பெருகும்.

மிதுன ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியினால் மிகுந்த பலன்களைப் பெற இருக்கிறார்கள். இதுவரை அஷ்டமச் சனியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிப் பல விதத்திலும் சிரமப்பட்டு வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு, அடுத்து நிகழவுள்ள பெயர்ச்சியால் சனி பகவான் 9-ல் அமர்வது பெரிய விடுதலையைத் தரும். தொட்டது துலங்கும். அனைத்து நன்மைகளும் நடைபெறும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். பணியிடத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும் 2023-ல் நல்ல காலம் தொடங்க இருக்கிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு 4-ல் அர்த்திராஷ்டமச் சனியாக அமர்ந்து பலன் தரும் சனிபகவான் அடுத்த பெயர்ச்சியில் 5-ல் அமர்கிறார். இந்த நிலை மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். கன்னி ராசிக்காரர்களுக்குச் சனிபகவான் 6-ல் அமர்வதும் மிகுந்த நற்பலன்களைத் தரும்.

இப்படி சனிப்பெயர்ச்சி என்பது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தையும் சில ராசிகளுக்கு மிதமான பலன்களையும் வழங்க இருக்கிறது. சனிபகவான் நம் கர்மவினைகளை எல்லாம் தீர்க்கும் மூர்த்தி. ஆகவே, சனிப்பெயர்ச்சி குறித்து எவ்வித அச்சமும் தேவை இல்லை. பக்திபூர்வமாக இறைவழிபாடும் உரிய பரிகாரங்களும் செய்வோம்; மன வல்லமையையும் நிம்மதியையும் மகிழ்வையும் அருளும்படி சனிபகவானை வேண்டிப் பணிவோம்; நடப்பதெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

தொகுப்பு: இல.சைலபதி