ஸ்பெஷல் 2
ரெகுலர்
Published:Updated:

ராசி பலன்கள்

ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

 நினைப்பது நிறைவேறும்!

ராசி பலன்கள்

மேஷம்: முற்போக்குவாதிகளே! சூரியன் 3-ல் நிற்பதால் விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் பணவரவு உண்டு. கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். 23-ந் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், 6-ம் வீட்டில் நுழைவதால் பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். நிழல் கிரகங்களான ராகு, கேது சரியில்லாததால் வீண் விரயம், ஏமாற்றம், கவலைகள் வந்து செல்லும். 30-ந் தேதி மாலை 4 மணி முதல் 2-ம் தேதி மாலை 6 மணி வரை கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்குச் சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

தேவை, சகிப்புதன்மை!

ராசி பலன்கள்

ரிஷபம்: கலா ரசிகர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதையும் செய்து முடிக்காமல் ஓய மாட்டீர்கள். பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ராசிக்குள் குருவும், கேதுவும் நிற்பதால் கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். கணவர் சில நேரங்களில் முணுமுணுப்பார். 23-ந் தேதி முதல் செவ் வாய் 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். 2-ந் தேதி மாலை 6 மணி முதல் 3-ம் தேதி வரை நிதானமாக செயல்படுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

திட்டமிடல் அவசியம்!

ராசி பலன்கள்

மிதுனம்: வாரி வழங்கும் வள்ளல்களே! ராசிநாதன் புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்கள் சுமைகளைப் பகிர்ந்து கொள்வார். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். 12-ல் குருவும், கேதுவும் நிற்பதால் அடுத்தடுத்து செலவுகள், எதிர்ப்புகள் வந்து செல்லும். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 23-ந் தேதி முதல் செவ்வாய் 4-ல் நுழைவதால் மருத்துவச் செலவுகள், கடன் தொந்தரவுகள் வந்து விலகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள்.

செல்வம், செல்வாக்கு கூடும்!

ராசி பலன்கள்

கடகம்: சிரிக்க பேசி சிந்திக்க வைப்பவர்களே! 23-ந் தேதி முதல் செவ்வாய் 3-ம் வீட்டில் நுழைவதால் எதிர்பார்ப்புகள் எளிதாகும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளை பாராட்டுவார். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். ராசிக்கு 12-ல் சூரியன் மறைந்திருப்பதால், வேலைச் சுமை, தூக்கமின்மை, அலைச்சல் வந்து போகும். அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  

தடைகள் உடையும்!

ராசி பலன்கள்

சிம்மம்: எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாதவர்களே! ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நிற்பதால் ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். 23-ந் தேதி முதல் ராசியை விட்டு செவ்வாய் விலகுவதால், சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 10-ல் நீடிப்பதால் எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம், வீண் பழி வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

தன்னம்பிக்கை மிளிரும்!

ராசி பலன்கள்

கன்னி: எதையும் திட்டமிட்டு செய்பவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எதையும் சாதிப்பீர்கள். யதார்த்தமான பேச்சால் கவருவீர்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். கணவர் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். 23-ந் தேதி முதல் ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் முன்கோபம், சகோதர வகையில் செலவுகள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.                

வேண்டும், விடாமுயற்சி!

ராசி பலன்கள்

துலாம்: நன்றி மறவாதவர்களே! புதன் சாதகமாக இருப்பதால் தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். 23-ந் தேதி முதல் செவ்வாய் 12-ல் மறைவதால் வீண் டென்ஷன், திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்து செல்லும். கணவர் கடுகடுத்தாலும் நீங்கள் கனிவாகப் பேசுவது நல்லது. வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். 8-ல் குரு, கேது, சுக்ரன் நிற்பதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுக பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.  

திறமைகள் வெளிப்படும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: தடம் மாறாதவர்களே! குருவும், சுக்ரனும் வலுவாக இருப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. 20 மற்றும் 21 ஆகிய தினங்களில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 23-ந் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால், அதிகார பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

சாதிக்க தடையில்லை!

ராசி பலன்கள்

தனுசு: எதையும் ஆழமாக ஆராய்பவர்களே! 23-ந் தேதி முதல் செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்வதால் புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களால் பயனடைவீர்கள். சூரியன் 7-ம் வீட்டிலும், சுக்ரனும், குருவும் 6-ம் வீட்டிலும் நிற்பதால், கணவர் அவ்வப்போது உங்களைக் குறை கூறுவார். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகும். 22, 23 ஆகிய நாட்களில் எதிர்பார்ப்புகள் தாமதமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் உயரதிகாரி வெறுப்பாக பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

உற்சாகம் பொங்கும்!

ராசி பலன்கள்

மகரம்: சமாதானத்தை விரும்புபவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். 21-ந் தேதி முதல் புதன் 7-ல் அமர்வதால், சொந்த - பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். 23-ந் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைவதால், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கணவரின் அலட்சியம், கோபம் மாறும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். 24-ம் தேதி முதல் 26-ந் தேதி காலை 10 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செழிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.  

பதற்றம் வேண்டாம்!

ராசி பலன்கள்

கும்பம்: நல்லது செய்தே நலிந்தவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 23-ந் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால் முன் கோபம், சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். கணவர் உங்களை அடிக்கடி குழப்புவார். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். பூர்விக சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். உறவினர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 26-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ம் தேதி மதியம் 1.30 மணி வரை பேச்சில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.

ஆசைகள் நிறைவேறும்!

ராசி பலன்கள்

மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புகழை வளர்த்துக் கொள்வீர்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 23-ந் தேதி முதல் செவ்வாய் 7-ல் நிற்கும் சனியுடன் இணைவதால் அசதி, சோர்வு, ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவருக்கு கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. 28-ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 30-ந் தேதி மாலை 4 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.