Published:Updated:

ராசிபலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை

வெற்றிப் பயணம் தொடரும்

ராசிபலன்கள்
##~##

மேஷம்: ஆதரவாகவும், ஆதாரத்துடனும் பேசுபவர்களே! குரு வலுவாக 2-ல் இருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை, கைக்கு வரும். கணவர் உங்களிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வார். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களிடையே மதிப்பு கூடும். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ல் ஆட்சி பெற்று அமர்வதால் பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். 24-ம் தேதி முதல் 26-ம் தேதி காலை 10.30 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

நிதானத்தால் நினைப்பது நடக்கும்

ராசிபலன்கள்

ரிஷபம்: உள்மனம் சொல்வதை மறுக்காமல் ஏற்பவர்களே! உங்கள் சுகாதிபதி சூரியன் 17-ம் தேதி முதல் வலுவடைவதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். செவ்வாய் 6-ல் நிற்பதால் கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து நீங்கும். 26-ம் தேதி காலை 10.30 மணி முதல் 28-ம் தேதி மதியம் 2 மணி வரை விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.

மாறுபட்ட அணுகுமுறை முன்னேற்றம் தரும்

ராசிபலன்கள்

மிதுனம்: கொடுத்து சிவந்த கைகளை உடையவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் தடைகள் இருந்தாலும் ஓய மாட்டீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவரின் புதிய முயற்சிகள் பலிதமாகும். தள்ளிப் போன அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். செவ்வாய் 5-ல் நிற்பதால் மனக்குழப்பம், முன்கோபம் வந்து செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 28-ம் தேதி மதியம் 2 மணி முதல் எதிலும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்து பேசினாலும், அன்பாக நடந்து கொள்வார்.

சவால்களை சமாளிக்கும் தருணம்

ராசிபலன்கள்

கடகம்: சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் உள்ளவர்களே! செவ்வாய் 4-ல் கேந்திரபலம் பெற்றிருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 17-ம் தேதி முதல் ராசியை விட்டு சூரியன் விலகுவதால் கண் எரிச்சல், முன்கோபம் வந்து விலகும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் பிரச்னை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

பிரபலங்களின் உதவியால் முன்னேறலாம்

ராசிபலன்கள்

சிம்மம்: மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்களே! 17-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவர் நீங்கள் சொல்வதை ஏற்பார். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். 2-ல் சனி தொடர்வதால் பணப்பற்றாக்குறை, வீண் வாக்குவாதம், டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும், அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.  

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

ராசிபலன்கள்

கன்னி: இதயம் அழுது கொண்டிருந்தாலும், உதட்டில் புன்னகையை உதிர்ப்பவர்களே! குரு வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவருடன் உரிமையாக பேசி கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மீட்பீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். ராசிக்குள் சனியும், 2-ல் செவ்வாயும் நிற்பதால் பேச்சால் பிரச்னை, வீண் செலவு, முதுகு, கழுத்து வலி வந்து போகும். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

சுற்றியிருப்பவர்களை புரிந்து கொள்ளுங்கள்

ராசிபலன்கள்

துலாம்: வசதி, வாய்ப்புகள் வந்தபின்னும், பழசை மறவாதவர்களே! சூரியன் வலுவான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் கிடைக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்டு பாசமழை பொழிவார். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வழக்கு சாதகமாகும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வீண் விரயம், ஏமாற்றம், எதிலும் ஆர்வமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  

எதிலும் ஏற்றம்தான்

ராசிபலன்கள்

விருச்சிகம்: ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்ந்தவர்களே! ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகமாகும். ஆனால், குரு சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். கணவர் குழைந்து குழைந்து பேசுவார். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 15-ம் தேதி மதியம் 1 மணி வரை கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். .  

சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்

ராசிபலன்கள்

தனுசு: நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்பதாலும் மாறுபட்ட அணுகுமுறையாலும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். கணவரின் அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் நல்ல மாற்றம் வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 15-ம் தேதி மதியம் 1 மணி முதல் 17-ம் தேதி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

தேவை மனநிம்மதி

ராசிபலன்கள்

மகரம்: எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே! புதன் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். ஓரளவு பணவரவு உண்டு. உறவினர், தோழிகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சனையை தீர்க்க புது வழி பிறக்கும். கணவர் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. 18, 19 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வேண்டாமே வீண் பதற்றம்

ராசிபலன்கள்

கும்பம்: நட்பு வட்டத்தை விரிவுப்படுத்திக் கொள்பவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 4-ல் குருவும், 8-ல் சனியும் தொடர்வதால் பல வருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். 20, 21 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

திட்டமிட்டு செயல்படுங்கள்

ராசிபலன்கள்

மீனம்: விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் நடுநிலையாக பழகுபவர்களே! 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். கணவருடன் கலந்தாலோசித்து வீண் செலவுகளை குறைப்பீர்கள். 8-ல் செவ்வாய் நிற்பதால் வீண் டென்ஷன், சிறுசிறு நெருப்புக் காயங்கள், சொத்து சிக்கல்கள் வந்து செல்லும். 22, 23 ஆகிய தேதிகளில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு