

ராகுவின் பலன்கள்: 2.12.12 முதல் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார் ராகு. 5-ஆம் இடம் ராகுவுக்கு உகந்ததல்ல என்றாலும், உங்கள் யோகாதிபதி சுக்கிரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார்.
சச்சரவு எழுந்தாலும், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் நீடிக்கும். புத்தி ஸ்தானமான 5-ல் ராகு அமர்வதால், மற்றவர்களை சந்தேகத்துடன் பார்ப்பீர்கள். முடிவுகளில் தெளிவில்லாத நிலை, இனம்புரியாத கவலைகள் ஏற்படலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். சொத்து தாமதமாகவோ குறைவாகவோ வந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
##~## |
வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை நவீனமாக்குவீர்கள். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் வந்து அமர்கிறார். பணம் சேரும்; கடன் அடைபடும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும். வேலையில் இருந்தாலும் சிறு முதலீட்டில் வியாபாரம் துவங்கவும் முயற்சிப்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பை சரியாகப் பயன்படுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வீடு கட்டும் பணி பூர்த்தியாகி புது வீட்டில் குடிபுகுவீர்கள்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும். கௌரவ பதவியில் அமர்வீர்கள். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் - விரயாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. ரசனைக்கு ஏற்ற வீடு- வாகனம் அமையும். கேது, தமது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், வழக்கு நெருக்கடிகள் நீங்கும். சொந்த தொழில் தொடங்குவீர்கள்.
புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில்... ராகு உங்களை பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.