ரெகுலர்
Published:Updated:

ராசிபலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் பிப்ரவரி 13 முதல் 26 வரை

 பொன்னும், பொருளும் பெருகும்!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கலங்காதவர்களே! முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் உச்சத்தில் இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். என்றாலும்... சனி, ராகு, கேதுவின் போக்கு சரியில்லாததால்  உடல் நலக் கோளாறு,  வருங்காலம் குறித்த பயம், தோல்வி மனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு உயரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு.

புகழ், கௌரவம் உயரும்!

ராசிபலன்கள்

ரிஷபம்: நினைத்ததை முடிக்கும் மனோசக்தி கொண்டவர்களே! சூரியன், புதன், செவ்வாய் வலுவாக 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் ஒரு படி உயரும். புது வேலை அமையும். வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால்... முன்கோபம், டென்ஷனால் சிலரின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். என்றாலும், சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்க வாய்ப்பு உண்டு.  

மனவலிமை, தோற்றப் பொலிவு கூடும்!

ராசிபலன்கள்

மிதுனம்: மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! ராசிநாதன் புதனும், லாபாதிபதி செவ்வாயும் சாதகமாக இருப்பதால், மனவலிமை அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். சிறுகச் சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்விக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழிகளை சந்திப்பீர்கள். 5-ல் சனியும், ராகுவும் தொடர்வதால்... அவ்வப்போது குழப்பம், தடுமாற்றம் வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

எதிர்பாராத பணவரவு!

ராசிபலன்கள்

கடகம்: 'ஒற்றுமையே உயர்வு தரும்’ என்பதை உணர்ந்தவர்களே! குரு வலுவாக இருப்பதால், இடையூறுகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். எதிர்பார்த்திருந்த தொகை வராவிட்டாலும், எதிர்பாராத வகையில் ஓரளவு பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். செவ்வாயும், சூரியனும் 8-ல் மறைந்திருப்பதால், மன இறுக்கம், வீண் டென்ஷன், வேலைச்சுமை வந்து செல்லும். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும்.

வாகன யோகம்!

ராசிபலன்கள்

சிம்மம்: நம்பிக்கையுடன் போராடி முதலிடம் பிடிப்பவர்களே! சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால், பெரிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள்.  21-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். 22-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்வதால், வாழ்க்கைத் துணைவருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள். 13, 14 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள்.

கேட்டது கிடைக்கும்!

ராசிபலன்கள்

கன்னி: தன் உழைப்பால் மற்றவர்களை வாழ வைப்பவர்களே! சூரியனும், செவ்வாயும் 6-ம் வீட்டில் நிற்பதால், நினைத்தது நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 22-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் நுழைவதால்... உடல் உபாதை வந்து நீங்கும். சாலைகளை கடக்கும்போது கூடுதல் கவனம் தேவை. உறவினரால் மறைமுக தொந்தரவுகள் ஏற்படலாம். 15-ம் தேதி முதல் 17-ம் தேதி மாலை 5 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடு செய்ய வேண்டாம். வரவு சுமார்தான். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சமங்களை சொல்லித் தருவார்.    

புதிய நட்பால் பூரிப்பு!

ராசிபலன்கள்

துலாம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புத்திசாலித்தனமாக செயல்பட்டு சவால்களை சமாளிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், பிறரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சூரியனும், செவ்வாயும் 5-ல் நிற்பதால், சில சமயம் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். 17-ம் தேதி மாலை 5 மணி முதல் 19-ம் தேதி வரை யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் தருவீர்கள்.    

அதிகார மையம் கைகொடுக்கும் ! 

ராசிபலன்கள்

விருச்சிகம்: கடுமையாகப் பேசினாலும், அடிமனதில் நேசம் நிறைந்தவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால்... எதிர்பார்த்த பணம் வரும். அதிகார மையத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசு வேலைகள் உடனே முடியும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ராசிநாதன் செவ்வாயின் போக்கு சரியில்லாததால்... உடல் உபாதை வந்து நீங்கும். 20-ம் தேதி முதல்,22-ம் தேதி மாலை 4 மணி வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

புது டிசைனில் நகை!

ராசிபலன்கள்

தனுசு: விருப்பு, வெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். ராசிநாதன் குருபகவான் 6-ல் தொடர்வதால், உங்களைப் பற்றிய விமர்சனங்கள் தலைதூக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். 22-ம் தேதி மாலை 4 மணி முதல், 24-ம் தேதி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்.  

பிள்ளைகளால் மனம் குளிரும்!    

ராசிபலன்கள்

மகரம்: தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! சூரியன் உங்கள் ராசியை விட்டு விலகியதால்... முன்கோபம் விலகும். யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சிலர் உங்களை விமர்சித்து பேசினாலும் நீங்கள் அமைதி காப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை முழுமையாக நம்பி ஏமாந்துவிட வேண்டாம். எச்சரிக்கையோடு இருங்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதலாக இருக்கும்.

பணப்புழக்கம் சுமார்!

ராசிபலன்கள்

கும்பம்: ஆர்ப்பாட்டமில்லாமல் சாதித்துக் காட்டுபவர்களே! ராசிக்குள் செவ்வாயும், சூரியனும் நிற்பதால்...  உடல் நலக் கோளாறு வந்து நீங்கும்.  வேலைச்சுமை அதிகரிக்கும். பயன்படுத்த முடியாமல் போன நல்ல வாய்ப்புகளை நினைத்து கலங்குவீர்கள். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். 22-ம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால், ஓரளவு பணவரவு உண்டு. பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். வியாபாரத்தில் கமிஷன், துணி வகைகளால் லாபம் உண்டு. வேலையாட்களால் நிம்மதி குறையும். உத்யோகத்தில் சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும்.

செலவுகள் திகைக்க வைக்கும்!

ராசிபலன்கள்

மீனம்: பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். அதிகமாக உழைத்து காரியம் சாதிக்க வேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். முக்கிய கிரகங்களின் போக்கு சரியில்லாததால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். செலவுகள் மிகவும் அதிகரிக்கும். உறவினர் களிடம் கோபப்பட வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும்.