Published:Updated:

நட்சத்திர பலன்கள் - ஏப்ரல்-2 முதல் 15 வரை

’ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

##~##

ந்த இதழில் இருந்து உங்களுக்காக நட்சத்திர பலன்கள்!

ஏப்ரல் 2 முதல் 15 வரையிலுமான காலகட்டத்தில்... மேஷத்தில் கேது, ரிஷபத்தில் குரு, துலாம் ராசியில் சனி மற்றும் ராகுவும், மீனத்தில் சுக்கிரனும் கோலோச்சுகிறார்கள். ரிஷபத்தில் குரு இருப்பது, பூசம், அனுஷ நட்சத்திரக் காரர்களுக்கு விசேஷ பலன்களைத் தரும். இந்த காலத்தில் திருமணம் முதலான சுபகாரியங்கள், ஆபரணங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது ஆகியன இனிதே நிறைவேறும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி... மற்ற நட்சத்திரக்காரர்களுக்கு?!

அவரவருக்கான பலன்களைத் தொடர்ந்து படியுங்களேன்!

அசுவனி

உங்கள் நட்சத்திராதிபதி கேது சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், குடும்பத்தில் அமைதி உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வழக்கில் நல்ல திருப்பம் வரும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் அலைச்சல் உண்டு. கேதுவை சனி பார்ப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தம்பதிக்குள் கருத்து மோதல்கள் எழும். 11-ஆம் தேதி முதல் சுக்கிரன் உங்களுக்கு சாதகமாவதால் தங்க ஆபரணம் சேரும். பிள்ளைகளால் செலவும் அலைச்சலும் உண்டு. அரசியலில் செல்வாக்கு கூடும். கன்னிப்பெண்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் கூடும். உத்தியோகத்தில், அதிகாரியின் ஆதரவு உண்டு. கலைத் துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

பரணி

நட்சத்திர பலன்கள் - ஏப்ரல்-2 முதல் 15 வரை

உங்கள் நட்சத்திர நாயகன் சுக்கிரன் வலுவடைந்திருப்பதால், ஆசைகள் நிறைவேறும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ரசனைக்கேற்ற வீடு, மனை அமையும். வீடு பராமரிப்பு குறித்த முயற்சிகள் பலிதமாகும். வங்கி லோன் கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ் கூடும். கன்னிப் பெண்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரிகள் புது ஏஜென்சி எடுப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பிரபலங்களால் ஆதாயம் உண்டு.

கிருத்திகை

உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன் சாதகமாக செல்வதால் எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும்.  மதிப்பு- மரியாதை கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கமாவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடிவடையும். தாய்வழி சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு, கட்சி ரீதியாக முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். கலைத் துறையினருக்கு அயல் நாட்டு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும்.

ரோகிணி

உங்களின் நட்சத்திராதிபதி சந்திரன் சாதகமாக இருப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். பூர்வீகச் சொத்தை ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். உங்களைப் புறக்கணித்த உறவினர்கள் வலியவந்து பேசுவர். அரசாங்க விஷயம் தடைப்பட்டு நிறைவேறும். உங்கள் நட்சத்திரத்திலேயே குரு செல்வதால் லேசாக தலைச்சுற்றல், வாந்தி வந்து நீங்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியில் சொல்லவேண்டாம். கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வியாபாரிகள் புது யுக்திகளை கையாளுவர். உத்தியோகத்தில், சிலநேரம் வேலைப்பளு கூடும். கலைத் துறையினருக்கு வருமானம் உயர வழி பிறக்கும்.

மிருகசீரிடம்

உங்கள் நட்சத்திர நாயகன் செவ்வாய்க்கு சாதகமாக சூரியன் செல்வதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்துப் பிரச்னை சுமூகமாக முடியும். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வேலை கிடைக்கும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். அரசியல்வாதிகள், ஆதாரபூர்வமான பேச்சால் எதிர்க்கட்சியினரை வியப்பில் ஆழ்த்துவீர்கள். கன்னிப் பெண்களுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். வியாபாரிகள், பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வர். உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினரின் படைப்பாற்றல் பலரையும் வியக்கவைக்கும்.

திருவாதிரை

உங்களுக்கு சாதகமான வீடுகளில் புதன் செல்வதால் புகழ் கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். என்றாலும், உங்களின் நட்சத்திர நாயகனான ராகுவுடன் சனியும் நிற்பதால் காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன், தோல் நோய் வரக்கூடும். அரசியல்வாதிகள் வீண் பேச்சைத் தவிர்க்கவும். கன்னிப் பெண்களுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில், மேலதிகாரியின் மதிப்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். கலைத் துறையினர், அயராத உழைப்பால் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

பூனர்பூசம்

உங்களின் நட்சத்திர நாயகன் குரு வலுவாக இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து வாங்குவது, விற்பதில் பிரச்னைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். வழக்கு சாதகமாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசியல்வாதிகள், மற்றவர்களது விமர்சனத்தைப் பொருட்படுத்த வேண்டாம். கன்னிப்பெண்களின் புதிய முயற்சியை பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரிகள் எதிர்ப்புகள், போட்டிகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டு. அமைதியான சூழ்நிலை உருவாகும். கலைத் துறையினரின் கலைத்திறன் வளரும்.

பூசம்

சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலை கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவர். எவருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பெரிய பொறுப்புகளை ஏற்காதீர்கள். அரசியல்வாதிகள், எவரையும் குறைகூற வேண்டாம். கன்னிப்பெண்களுக்கு மகிழ்வான சம்பவங்கள் நிகழும். வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பங்குதாரர்களுடன் விட்டுக்கொடுத்து போகவும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைத் துறையினர், விழாக்களுக்கு தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவார்கள்.

ஆயில்யம்

செவ்வாயும் குருவும் உங்களுக்கு சாதகமாக செல்வதால் அந்தஸ்து உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. தங்கைக்கு நல்ல வரன் அமையும். பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடிவடையும். சிலருக்கு புது வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையின் அன்புக்கு பாத்திரமாவார்கள். கன்னிப்பெண்ககளின் நீண்டநாள் ஆசையை பெற்றோர் நிறைவேற்றுவர். வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவது, புது ஏஜென்சி எடுப்பது, புது கிளைகள் தொடங்குவது இவையெல்லாம் சாதகமாகும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மரியாதை கூடும்.

மகம்

உங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தில் சனி செல்வதால் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகம், பண வரவு உண்டு. எதிர்த்த வர்கள் அடங்குவர். உங்கள் ராசிநாதன் சூரியன் மறைந்து இருந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் வீடு விற்பது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். குரு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும். 10-ஆம் தேதி வரை செவ்வாய் மறைந்திருப்பதால் அலைச்சலும், வீண் செலவு களும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். வியாபாரிகளுக்கு கமிஷன் வகைகளால் லாபம் வரும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் இருக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  

பூரம்

உங்களின் நட்சத்திர நாயகன் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் சவாலில் வெற்றி காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு வாங்க முயற்சிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. என்றாலும் வேலைச்சுமை, சிற்சில வீண் பழிகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு  மதிப்பு கூடும். கன்னிப் பெண்களுக்கு உயர்கல்வியில் நாட்டம் பிறக்கும். வியாபாரிகள் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வார்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு, திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்.

உத்திரம்

உங்களுக்கு சாதகமாக சுக்கிரன் இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் போக்கு சரியில்லாததால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சொத்து விவகாரங் களில் தாய் பத்திரத்தைச் சரிபார்க்கவும். அரசியல் வாதிகள், கட்சி தலைமைக்கு நெருக்கமாவர். கன்னிப் பெண்கள் பெற்றோரை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வியாபாரிகளுக்கு பற்று- வரவு உயரும். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர் களிடம் நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவார்கள்.

அஸ்தம்

உங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தில் சுக்கிரன் செல்வதால் சாதிப்பீர்கள். கைமாற்று கடனை அடைப்பீர்கள். புது சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சனியும் ராகுவும் சரியில்லாததால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குவது நல்லது. கன்னிப்பெண்களே, பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வர். வியாபாரிகள் அதிரடி சலுகைகளால் லாபம் ஈட்டுவார்கள். உத்தியோகத்தில், புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத் துறையினரின் யதார்த்த படைப்புகளுக்கு, பாராட்டுகள் குவியும்.

சித்திரை

செவ்வாய் சாதகமாக இருப்பதால் நட்புவட்டம் விரியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கூடாப்பழக்க வழக்கம் உள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். சொத்துப் பிரச்னைகளுக்கு புது தீர்வு கிடைக்கும்.ஏழரைச்சனி நடைபெறுவதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பார்கள். கன்னிப்பெண்கள், புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு பாக்கிகள் எளிதில் வசூலாகும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொண்டு முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பர். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு, வேறு சிலர் உரிமை கொண்டாடுவர்!

சுவாதி

உங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தில் செவ்வாய் செல்வதால், ஆசைப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். வேலை கிடைக்கும். பங்குச்சந்தை மூலமாக பணம் வரும். அரசுக் காரியங்கள் சாதகமாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சனியின் போக்கு சரியில்லாததால் கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்துவீர்கள். மற்றவர்கள் பிரச்னை யில் தலையிட வேண்டாம். அரசியல்வாதிகளே, கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் கமிஷன், உணவு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். கலைத் துறையினர் புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

விசாகம்

சந்திரன் சாதகமாக இருப்பதால் சமயோசிதமாக செயல்பட்டு ஜெயம் காண்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். சகோதரர்களும் உதவுவர். உங்களின் நட்சத்திரத்திலேயே ராகு செல்வதால், சிலர் உங்களை வம்புக்கு இழுப்பர்; கண்டுகொள்ள வேண்டாம். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் ஏற்கும். கன்னிப்பெண்களுக்கு, புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து, முடிவு எடுங்கள். உத்தியோகத்தில், திறமையை, அறிவுத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிட்டும். கலைத் துறையினர், வதந்திகளையும் தாண்டி முன்னேறுவார்கள்.

அனுஷம்

புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட காரியங்கள் யாவும் நல்லவிதமாக முடிவடையும். வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். அரசு காரியங்களில் இழுபறி நிலை நீங்கும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டு. சகோதரிக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகள், கட்சி மேல் மட்டத்துக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். கன்னிப்பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரிகள்,  சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் திறமையை உணர்ந்துக் கொள்வர். கலைத் துறையினருக்கு பழைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும்.

கேட்டை

உங்களுக்கு சாதகமாக கேது இருப்பதால் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பலவீனத்தை மாற்றிக்கொள்வீர்கள். வி.ஐ.பி-கள் உதவிகரமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வி சம்பந்தப் பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில், உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவர். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.

மூலம்

சந்திரன் உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசிதமாகப் பேசி சாதிப்பீர்கள். உறவினர்- நண்பர்கள் வரவால் வீடு களைகட்டும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டு. பழைய கடன் மனத்தை வாட்டும். உங்கள் ராசிநாதன் குரு மறைந்து இருப்பதால் பணப்பற்றாக்குறை இருக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு, கோஷ்டிப் பூசலால் மன இறுக்கம் வந்து நீங்கும். கன்னிப் பெண்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். வியாபாரிகள், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவர். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வேற்று மொழியினரின் ஆதரவு கிடைக்கும்.

பூராடம்

சுக்கிரன் பலம் பெற்றிருப்பதால் உங்களின் ரசனை மாறும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் தொடரும். தம்பதிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு மறைந்திருப்பதால், இனம் தெரியாத பயம், கவலை வந்து போகும். அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவர். கன்னிப் பெண்களுக்கு சாதிக்கும் எண்ணம் வரும். வியாபாரிகள் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பர். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கும்.

உத்திராடம்

உங்களின் நட்சத்திராதிபதி சூரியன் பலம் பெற்றிருப்பதால் புது திட்டங்கள் நிறைவேறும். பயம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சாதகமாகும். புது பதவிகள் தேடி வரும். சகோதரியால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கன்னிப் பெண்கள், புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவார்கள். வியாபாரிகள் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில், மின்னல் வேகத்தில் பல பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

திருவோணம்

முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பணவரவு கூடும். வி.ஐ.பி-களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். வீடு விற்பது, வாங்குவது சுமுகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வங்கிக் கடனுதவி கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள், போராட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். கன்னிப்பெண்கள், புது வேலையில் அமர்வார்கள். வியாபாரிகளுக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில், கடின உழைப்பால் அதிகாரியின் மனத்தில் இடம் பிடிப்பீர்கள். இடமாற்றம் உண்டு. கலைத் துறையினருக்கு வருமானம் கூடும்.

அவிட்டம்

உங்களின் நட்சத்திர நாயகன் செவ்வாய் வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்தை பெறுவதில் இருந்துவந்த தடைகள் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். அரசியல்வாதிகள், தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டியது வரும். கன்னிப் பெண்களுக்கு, திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில், புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடனான மனக்கசப்புகள் விலகும். கலைத் துறையினரை மூத்த கலைஞர்கள் பாராட்டுவார்கள்.

சதயம்

உங்களுக்கு சாதகமாக சுக்கிரன் இருப்பதால் அதிரடி முன்னேற்றம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட வகையில் யோசித்து முடிவெடுப்பீர்கள். வீடு மாறும் அமைப்பு உண்டாகும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அந்த முடிவால் உங்களுக்கு நல்லது நடக்கும். அரசியல்வாதிகள், கோஷ்டிபூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது. கன்னிப்பெண்கள், பெற்றோரை ஆலோசித்து, வருங்காலம் குறித்து முடிவெடுப்பார்கள். வியாபாரத்தில், மக்களின் ரசனைக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில், தொந்தரவு கொடுத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றியடைவார்கள்.

பூரட்டாதி

உங்களின் நட்சத்திர நாயகன் குரு பலம் பெற்று இருப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் கூடும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புது வேலைக்கான முயற்சியில் நல்ல பலன் உண்டு. தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் இருக்கும். அரசியல்வாதிகள், தொகுதியில் கவனம் செலுத்தவும். கன்னிப்பெண்கள், கூடா பழக்கவழக்கம் கொண்ட நண்பர்களிடம் இருந்து விலகுவார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம்- பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

உத்திரட்டாதி

உங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தில் சுக்கிரன் செல்வதால், மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். ஓரளவு பணவரவு அதிகரிக்கும். கல்யாண விஷயங்கள் சுமுகமாக முடியும். நட்பால் ஆதாயம் அடைவீர்கள். உங்களின் நட்சத்திர நாயகனான சனியுடன் ராகுவும் நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், இழப்புகளை நினைத்து வருந்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மறைமுக எதிர்ப்புகள் உண்டு. கன்னிப் பெண்களின் எதிர்பார்ப்புகள் தாமதமாக நிறைவேறும். வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் அறிவுரையை தட்டாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத் துறையினருக்கு சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும்.

ரேவதி

உங்களுக்கு சாதகமான வீடுகளில் சந்திரன் இருப்பதால் தடைகள், ஏமாற்றங்கள் வந்தாலும் ஓயமாட்டீர்கள். வி.ஐ.பி-களின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப் போகவும். சில நேரங்களில் மன வாட்டத்துடன் காணப்படுவீர்கள். அரசியல்வாதிகள், தலைமையால் அலைக்கழிக்கப்படுவார்கள். கன்னிப்பெண்கள், பிறரது ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில், பற்று- வரவு சுமார்தான். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில், எவ்வளவு உழைத்தும் நல்ல பெயர் இல்லை என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.