Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆருடம் அறிவோம்!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்!

ஆருடம் அறிவோம்!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

ன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாயோ அது உனது முதல் பரிமாணம்.

உன்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்களோ, அது உனது இரண்டாவது பரிமாணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உண்மையில் நீ யாராக இருக்கிறாயோ அதுதான் உனது மூன்றாவது பரிமாணம்.

முதல் இரண்டு பரிமாணங்களும் ஓரளவு நமக்குத் தெரிந்தவையே. ஆனால், மூன்றாவது பரிமாணம் நமக்குத் தெரியாதது. அந்த மூன்றாவது பரிமாணத்தை நமக்குத் தெரிய வைப்பவையே ஜோதிடம், கைரேகை போன்ற சாஸ்திரங்கள்!

'உன்னைப் பற்றிய உண்மையான பரிமாணத்தைத் தெரிந்து கொள். அப்போது, உனது எதிர்காலம் பற்றிய உண்மைகள் உனக்கே தெரியும்’ என்பது உபநிடதங்களில் விளக்கப்படும் தத்துவம்.

இத்தகைய சிறப்பு மிக்க ஜோதிட சாஸ்திரத்தின் வரலாறு என்ன? நமது புராண-இதிகாசங்களில் ஜோதிடம், ஆரூடம் பற்றி என்னென்ன உண்மைகள் காணப்படுகின்றன? ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞானமா அல்லது மெய்ஞ்ஞானமா? ஜோதிட அறிவால் ஆத்ம சுத்தியும் தன்னம்பிக்கையும் வளர வாய்ப்பு உண்டா?

இதுபோன்று நம் மனத்தில் எழும் பல கேள்விகளுக்கு எல்லாம் விடைதேடும் முயற்சிதான் இந்தத் தொடர். அத்துடன், ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கையை உண்டாக்கவும், அதன் தத்துவங்களை அறியவும், அதன் மூலம் ஏமாற்றங்களையும் துயரங்களையும் தவிர்த்து நம்பிக்கையோடு எதிர்காலத்தை எதிர்கொள்ளவும் இந்தத் தொடர் உதவும். அத்துடன், அற்புதமான ஜோதிட சாஸ்திரம் குறித்த சந்தேகங்களுக்கும் இந்தத் தொடரில் பதில் காண முடியும்!

ஜோதிட புராணம்!

ந்து தர்மசாஸ்திரங்களில், வேத காலம் முதற்கொண்டே ஜோதிட சாஸ்திரம் நடைமுறையில் இருந்திருக்கிறது. முண்டக உபநிடதம் போன்ற உபநிடதங்களிலும் ஜோதிடம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஜோதிட சாஸ்திரம் வகுத்துள்ள பரிகார முறைகள், பூஜைகள் போன்றவை வேத முறைகளை அனுசரித்தே செய்யப்படுகின்றன. ராமாயண, மகாபாரத காலத்திலும் ஜோதிட சாஸ்திரம் பெரிதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாக்கியம் இல்லாத தசரதனின் ஜாதகத்தையும் அவருடைய மனைவியர் ஜாதகங்களையும ஆராய்ந்த பின்னரே, புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தப்பட்டு, அதன் பலனை தசரதன் பெற்றார் என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.  

அதே போன்று, நாள்- நட்சத்திரம் பார்த்து வசிஷ்ட மஹரிஷியால் நிர்ணயிக்கப்பட்ட முகூர்த்தத்தில், ஸ்ரீராமனுக்கு ஏன் பட்டாபிஷேகம் நடக்கவில்லை என்ற கேள்விக்கும் ராமாயணத்தில் விளக்கம் உண்டு.

ஜோதிட ஆரூட சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவன். அவன் குறித்துக் கொடுத்த நாளில்தான் துரியோதனன் களப்பலி நிகழ்த்தி, போருக்கான ஏற்பாடுகளைத் துவக்கினான்.

ஆனாலும், அவன் தோல்வியைத் தழுவினான். அப்படியெனில் சகாதேவன் கணித்த சாஸ்திரம் பொய்யா? இதுபோன்ற கேள்விகளுக்கு மகாபாரதத்தில் சாஸ்திர ரீதியான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

நமது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் ஜோதிட, ஆரூட சாஸ்திரங்களைப் பதினெண் சித்தர்களும் நன்கு தெரிந்துகொண்டு மக்களுக்கு வழிகாட்டிய வரலாறு இருக்கிறது.

நோய் தீர்க்கும் சித்த வைத்தியத்தைக் கண்டறிந்து உலகுக்குச் சொன்ன இவர்களே, பஞ்சாங்கம் பார்த்து நாள்- நட்சத்திரம் கண்டறிந்து, நல்ல வேளை பார்த்து மருந்துண்ண ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளனர்.

அன்று சித்தர்களாலும் ஞானிகளாலும் எழுதி வைக்கப்பட்ட நாடி ஜோதிடம், இன்றும் மனிதர்களுக்குத் துன்பமின்றி வாழும் வழிமுறைகளைக் காட்டி வருவதைப் பலரும் அறிவர்.

ஆக, ஜோதிடம் ஓர் உலக சாஸ்திரம். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் ஜோதிட நம்பிக்கை இருந்துள்ளது என்பதற்கு ரோம நாட்டுச் சரித்திரம் ஒரு எடுத்துக்காட்டு.

ரோம் நாட்டின் ஏக சக்ராதிபதியாகத் திகழ்ந்தவன் ஜூலியஸ் சீஸர்.

ஒருநாள், ஆலோசனை மண்டபத்தில் அவன் நுழையும்போது, எதிர்காலம் பற்றிக் குறிசொல்லும் ஜோதிடர் ஒருவர், ''சீஸர்! மார்ச் 15-ஆம் நாள் நீ இந்த மன்றத்தில் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைவாய்!'' என்றார்.

சீஸர் அதை நம்பாமல், ஜோதிடரைக் கேலி செய்தான். ஆனால், ஜோதிடர் சொன்னது போலவே, அதே தேதியில் சீஸர் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தான்.

ரோமாபுரி மற்றும் கிரேக்க நாகரிகத்தின் ஆரம்பக் காலத்தில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஜோதிட சாஸ்திரத்தின் பல உண்மைகள், நம் நாட்டு வேதகால ஜோதிடத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

புண்ணிய பாரதத்தில் மிகவும் பழைமையான பிருஹத் ஸம்ஹிதை அல்லது யவன ஜாதகா என்ற நூல், ஜோதிடத்தை வான சாஸ்திரத்தின் அடிப்படையில் வகுத்துக் காட்டியுள்ளது. வசிஷ்டர் முதல் வராகமிஹிரர் வரை ஜோதிட சாஸ்திர அறிவின் மகத்துவம் தெளிவாக்கப்படுகிறது.

ஆர்யபட்டாவின் ஆர்ய சித்தாந்தமும், வராகமிஹிரரின் பஞ்ச சித்தாந்தமும் ஜோதிட சாஸ்திரத்தின் மூல நூல்கள். ஜோதிடம் மூலம் விண்ணிலுள்ள கோள்களின் சுழற்சியை அவர்கள் கண்டறிந்தனர்.

அதனால்தான் இன்றும் வான சாஸ்திர நிபுணர்கள் பல்வேறு உபகரணங்களையும் விஞ்ஞான முறைகளையும் கொண்டு கண்டறியும் அமாவாசை, பௌர்ணமி, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போன்றவற்றை, பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஜோதிட சாஸ்திர முறையில் கண்டறிந்து பஞ்சாங்கத்தில் குறிப்பிடுகின்றனர்.

இதில், விஞ்ஞானிகளின் கணிப்புக்கும், ஜோதிடர்களின் கணிப்புக்கும் எள்ளளவுகூட மாறுபாடோ முரண்பாடோ ஏற்படுவதில்லை. மழை, புயல் வரும் நாட்களையும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த விபரங்களையும்கூடப் பஞ்சாங்கத்தில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரமும் அறிவியலும் ஒன்றையன்று சார்ந்தே வளர்ந்துள்ளன. இதுகுறித்த பல உண்மைகளையும், ஜோதிட சாஸ்திரத்தின் பெருமைகளையும் இன்னும் விரிவாக- விளக்கமாக அடுத்தடுத்த இதழ்களில் காண்போம்.

- இன்னும் வரும்...

ஜோதிட புராணம்!

டி.எஸ்.நாராயணஸ்வாமி என்பதன் விரிவாக்கம்- திருநெல்வேலி சுப்ரமணி நாராயணஸ்வாமி. கல்வியாளர், மேடைப் பேச்சாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் உண்டு இவருக்கு. சென்னைத் தொலைக்காட்சியின் இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

புராண- இதிகாச கதைகளில், பலரும் அறிந்திராத நுணுக்கங்களை எளிமையாக விவரிக்கும் 'தெரிந்த புராணம் தெரியாத கதை!’ தொடர் புதிய பரிமாணத்துடன் சக்தி விகடனில் வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்து தர்மசரித்திர ஆய்வுகள் மட்டுமின்றி, ஜோதிடம், ஆருடம், பஞ்சாங்குலி எனும் கைரேகை மற்றும் வாஸ்து சாஸ்திரம் குறித்தும் பல்வேறு மொழிகளில் இருந்து ஆராய்ச்சிகள் செய்துள்ளார் நாராயணஸ்வாமி. அதில் கிடைத்த ஜோதிட உண்மைகளையும் விளக்கங்களையும் விசேஷத் தகவல்களையும் இந்தத் தொடர் மூலம் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism