Published:Updated:

வாழ்வே வரம்!

இனி எல்லாம் சந்தோஷம்!ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

வாழ்வே வரம்!

இனி எல்லாம் சந்தோஷம்!ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

னிதனின் வாழ்க்கைச் சக்கரம் எத்தனையோ மேடு-பள்ளங்களில் ஏறி இறங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. உச்சத்தைத் தொடும்போது, 'என் உழைப்புக்குக் கிடைத்த பரிசு’ என மகிழும் நாம், பள்ளத்தில் வீழ்ந்து தவிக்கும் தருணங்களில்... 'கிரக தோஷம் இப்படி பாடாய்ப் படுத்துதே’ என மிக எளிதாக ஜாதகத்தின் மீதும், கிரகங்களின் மீதும் பழிபோட்டுவிடுகிறோம்.

உண்மையில், நமது வீழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் நாமேதான். பழம்பெரும் ஜோதிஷ நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? பூர்வஜென்ம வாசனையே இந்தப் பிறவியின் பலா பலன்களுக்குக் காரணம் என்கின்றன. ஆக, முற்பிறப்பில் செய்த பாவ- புண்ணியங்களுக்குத் தகுந்த பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்பவே, ஒருவனின் பிறப்பு காலத்துடன் இணைகிறது. அப்போதைய கிரகங்களின் நிலைகள்... அவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய பலன்களை தரத் தகுந்தவாறு அமைந்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். பூர்வ ஜென்மத்தில் பெற்றோரை சரியாக கவனிக்காதவன், முதிய வயதில் அவர்களை முறையாகப் பேணாத வன், மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவான், என்கின்றன ஜோதிட நூல்கள். ஆக, அவன் பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம். இப்படியே மற்ற கிரகங்களும் அமைந்து அவனுக்கான கர்மவினை கணக்கினைப் பூர்த்தி செய்யும். அவன் முற்பிறப்பில் புண்ணியம் செய்திருந்தால் அதற்கேற்ற சுபநிலையில் கிரகங்கள் அமைந்திருக்கும் தருணத்தில், அவனது பிறப்பு நிகழும்.

வாழ்வே வரம்!

எனில், 'தோஷ ஜாதகத்துடன் பிறக்கும் ஒருவன் அதிலிருந்து மீள வழியே இல்லையா? பரிகாரம் கிடையாதா? சகல தோஷங்களையும் அவன் அனுபவித்தே தீர வேண்டுமா?’ எனும் கேள்விகள் எழலாம்.

விதியை மதியால் வெல்லலாம்! பெரும் கடற்பரப்பில் திசைதெரியாமல் அல்லாடுபவன்தான் கவலைக்கு உரியவன். திசைமானியோடு உரிய திசை அறிந்து பயணிப்பவன், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை அல்லவா? திசை தெரிந்துவிட்டால், பயணிக்கவேண்டிய பாதை எது, அதில் என்னென்ன தடைகள் உண்டு என்பது எளிதில் புலப்பட்டுவிடும். அதற்குத் தயாராக  அவன் தன் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டு தொடர்வான்.

வாழ்க்கைப் பயணத்துக்கும் ஒரு திசைகாட்டி உண்டு. அதுதான் ஜனன ஜாதகம். என்னென்ன காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை முன்னரே அறியலாம். அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம். ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருந்தால் அவன் ஞானாசிரியனாகத் திகழ்வான். சந்திர பலம் அமையப்பெற்ற ஜாதகக்காரன் கலைஞனாகவோ, மனதத்துவ நிபுணனாகவோ திகழலாம். செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் ராணுவத்தில் இணைய வாய்ப்பு உண்டு. இப்படி, ஜாதக நிலையை அறிந்து அதற்கேற்ப வாழ்வை, செய்யும் தொழிலை ஏற்றுக் கொண்டால் எல்லாமே வெற்றிதான். இதுபோன்றே கிரக தோஷ நிலைகளும்!

வாழ்வே வரம்!

என்ன காரணத்தால் இந்த தோஷத்துக்கு ஆளானோம் என்பதைத் தெளிந்துணர்ந்து, அதற்குக் காரணமான பூர்வஜென்ம குற்றம் - குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும்.

சரி! இந்த தோஷத்துக்கு இந்த தெய்வத்தை வழிபடவேண்டும், இன் னின்ன சாந்தி பரிகாரங்கள் செய்யவேண்டும் என்கிறார்களே... அப்படிச் செய்துவிட்டால் போதுமா? தோஷங்கள் காணாமல் போய்விடுமா? அப்படி இல்லை. தோஷங்களால் ஏற்படும் பாதிப்பைத் தாங்கிக்கொள்ள, எளிதில் சமாளிக்க, அந்த தருணங்களில் வாழ்க்கை தடம்புரண்டுவிடாமல் இருக்க தெய்வ அனுக்கிரகம் தேவை.

'பதறிய காரியம் சிதறும்’ என்பார்கள். துன்பம் வரும் நேரத்தில் நம் மனம் குழப்ப நிலையில் இருக்கும். உள்ளமும் உடலும் ஒரு கோட்டில் இணையாது அல்லலுறும். இதுபோன்ற சூழலில் நாம் ஒரு செயலில் இறங்கினால் அது செம்மையுறாது. அப்போது நமக்குத் தேவை வழிபாடு. ஹோமங்களால், தெய்வப் பரிகாரங்களால் ஓர் ஆறுதல் கிடைக்கும். ஓரிடத்தில் குவியும் மனம் மெள்ள மெள்ள அமைதி பெறும். துன்பத்துக்குக் காரணம் என்ன என்று யோசிக்கும். பிறகென்ன... மனமது செம்மையானால் அனைத்தும் நலமாகவே நடக்கும்.

எல்லாம் சரி! ஜாதகத்தில் தோஷம் உண்டா இல்லையா என்பதை எப்படி அறிவது? தோஷ ஜாதகம் எனில், அதற்கான நிவர்த்தி என்ன? எந்தெந்த தோஷத்துக்கு எந்தெந்த தெய்வங்களை வழிபட வேண்டும்? தோஷங்களைக் கடந்து வாழ்வை சந்தோஷமாக்க வழி உண்டா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்களை, சந்தோஷம் மட்டுமே நிறைந்த வாழ்வைப் பெறுவதற்கான உபாயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தத் தொடர்!

முதலில் செவ்வாய் தோஷத்தை அறிவோம்.

முன்னதாக செவ்வாய் பகவானுடன் அறிமுகமாகிக் கொள்வோம். அங்காரகன், மங்கல நாயகன் என ஞான நூல்கள் போற்றும் கிரகமூர்த்தி இவர். சூரியனுக்குத் தெற்கில் திரிகோண மண்டலத்தில் தென்முகமாக வீற்றிருப்பவர். இவரின் அதிபதி முருகக்கடவுள். சூரியன், சந்திரன், வியாழன் மூவரும் இவருக்கு நட்பு கிரகங்கள். புதனுக்கு இவர் பகை. மகரம் உச்ச வீடு; கடகம் நீச வீடு. இவருக்கு உகந்த நிறம் சிவப்பு. உலோகம்- செம்பு. இவரைப் பூஜிக்க உகந்த மலர்- செண்பகப்பூ. நமது உடலில் கைகளும், தோளும் செவ்வாயின் சாந்நித்தியம் பெற்றவை.

இந்த கிரக மூர்த்தியின் அனுக்கிரகம் உள்ள ஒருவரை, 'கடன்காரன்’ என்று எவரும் இகழ முடியாது. ஆமாம்! கடன் இல்லாத வாழ்வை தரும் தெய்வம் இவர். அதுமட்டுமா? சகோதர-சகோதரிகள் நல்லவிதமாக அமையவும், மங்கல காரியங்கள் தொய்வின்றி நிகழவும், வீடு, மனை, தொழில் முதலானவை பழுதின்றித் திகழவும் இவரது அனுக்கிரகமே காரணம்!

அங்காரகனின் அருட்கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெறுவது எப்படி?

- சந்தோஷம் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism