சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்வே வரம்!

இனி எல்லாம் சந்தோஷம்!ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

செவ்வாய் தோஷம்

##~##

'எத்தனை வரன் வந்தாலும் தட்டிக்கிட்டே போகுது. கேட்டால் செவ்வாய் தோஷம்னு சொல்லி, ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துடறாங்க'' என்று கவலைப்படும் பெற்றோர் ஏராளம்.

நவக்கிரகங்களில் சூரியன் மற்றும் குருவுக்கு அடுத்தபடியான முழுமையான ஆண் கிரகம் செவ்வாய்தான். அங்காரகன் என்று இவரை ஆசையோடு அழைப்பர். பூமிகாரகன் எனும் நிலங்களுக்கு அதிபதி இவர்தான். உடலில் ஓடும் ரத்தம் இவருக்குரியது. அதனாலேயே ரத்த பந்தமான சகோதரத்துக்கும் உரியவராக இருக்கிறார். நிறங்களில் சிவப்பாக இருக்கிறார். சாம்ராஜ்ஜியங்களை உருவாக்குவதும், உருக்குலைய வைப்பதுமே இவரின் முக்கியப் பணி. செவ்வாயின் சின்னம் முக்கோணம். அதனாலேயே, முக்கோண ஆயுதங்களான ஈட்டியிலும் அம்பிலும் இவர் நிலைபெற்று இயங்குகிறார். ஆயுதம் ஏந்தும் காவலும் ராணுவமும் இவரின் இரு

வாழ்வே வரம்!

கண்கள். ரோஷத்தையும் ஆக்ரோஷத்தையும் கொடுப்பவர் செவ்வாய்.  கூடவே சபதமும், சவாலும் இவருக்குப் பிடித்தமானது. வீரமும் தீரமும் இவரின் உயிர்நாடி. பழிக்குப் பழி தீர்த்தலில் வேகமாக வெளிப்படுவார்.

விரோதத்தையும் குரோதத்தையும் தோற்றுவிப்பவரும் இவரே. ஆளுமையிலும் அதிகாரத்திலும் திருப்தி காண்பவர். மறியல், கண்டனம், ஆர்ப்பாட்டமெல்லாம் செவ்வாயின் செல்ல விளையாட்டுக்களே! தன்மானம், இன உணர்வு போன்ற உணர்வுகளைத் தட்டியெழுப்பி மறுமலர்ச்சி காண்பவர். பொதுவுடைமை பேசும் பெரியவரும் இவர்தான். மஞ்சு விரட்டு முதல் ஆகாய சாகசங்கள் வரை எல்லா வீர விளையாட்டுக்களிலும் பொழுதினைப் போக்குவார். மரங்களில் கருங்காலி, விலங்குகளில் ஆட்டுக்கடா, பறவைகளில் அன்னம், தானியங்களில் துவரை ஆகியவற்றில் இவரது சாந்நித்தியம் நிறைந்திருக்கும். ஆணின் மர்ம ஸ்தானத்தில் வீர்யமாக உறைகிறார். இவையே செவ்வாயின் காரகத்துவங்கள்.

வாழ்வே வரம்!

இப்படி மண்ணின் மீதும், மனிதர்களின் மீதும் ஓயாது ஆட்சி செலுத்தும் செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால், உங்களை எவரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது. இவரை ஆள்பவரே முருகப்பெருமான்தான். அவரை வழிபட்டால், அங்காரகனின் பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்றுவிடலாம்.

சரி! இந்த செவ்வாய் பகவான் எந்தெந்த நிலைகளில் நமக்குத் தோஷத்தைத் தருவார்? எப்போதெல்லாம் சந்தோஷத்தை வாரி வழங்குவார்? வாருங்கள், தெரிந்துகொள்வோம்.

பொதுவாக, தோஷம் என்பது என்ன? இந்த வார்த்தையைக் கேட்டாலே எல்லோரும் பெரிதும் கலங்கிவிடுகின்றனர். தோஷம் என்றால் இயல்பு நிலையிலிருந்து மாறுபடுதல் என்று பொருள். இங்கு, மாறுபடுதல் என்பது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செவ்வாய் தன்னை வெளிப்படுத்துவதையே குறிக்கும்.

வாழ்வே வரம்!

கம்பியில் சீராக மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கிறது. மின்சாதனங்கள் பழுதடையாமல் இயங்குகின்றன. சட்டென்று வோல்டேஜ் கூடினாலோ குறைந்தாலோ, மின்சாதனங்களின் இயக்கம் மாறுபடும்; அவை பழுதடையவும் வாய்ப்பு உண்டு, இல்லையா? அதே விஷயத்தைதான் ஜாதகத்தில் 'தோஷம்’ என்கிறார்கள். கிரகங்களின் கதிர்வீச்சுகளில் ஏற்படும் மாற்றங்களாலேயே தோஷம் ஏற்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தால் ஏற்படும்போது செவ்வாய் தோஷம் என்கிறோம்.

சரி, ஏன் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உண்டாகிறது? ஏன் ஒருவர் செவ்வாய் தோஷத்துடனேயே பிறக்கிறார்?

என்னுடைய பால்ய கால நண்பர் ஒருவர், தன்னுடைய அண்ணன் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருந்தார். எதுவாக இருந்தாலும் அண்ணனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டே செய்வார். புது தொழில் துவங்குவது, சொத்து வாங்கு வது எல்லாமும்... தனித்தனியே இல்லாமல் இருவரது பெயரிலும் பதிவு செய்யப்படும். அவ்வளவு ஒற்றுமை. நண்பரிடம் நலம் விசாரித்தபோது, அவருடைய அண்ணனைப் பற்றியும் கேட்டேன். அவ்வளவுதான்... மனிதர் புலம்பித் தள்ளிவிட்டார்!

தன்னையும் தன் குடும்பத்தையும் அண்ணன் நட்டாற்றில் விட்டுவிட்டதாகத் தெரிவித்தார். 'இப்போது பலகோடி சொத்துக்கள் சேர்ந்திருக்கிறது என்றால், அதில் என்னுடைய உழைப்புதான் அதிகம். ஆனால், முழுமையாக நம்பியிருந்த என்னை அண்ணன் நன்றாக ஏமாற்றிவிட்டார். இப்போது நான் இருக்கும் வீடு மட்டும்தான் எனக்குச் சொந்தம்'' என்று அவர் வருத்தத்துடன் விவரித்தார்.

''என்னுடைய மொத்த உழைப்பையும் குடும்பத்துக்காக கொட்டியிருக்கேன், சார்! இப்படி என்னை உறிஞ்சி, சக்கையா தூக்கிப் போட்டுட்டாரே!'' என்று என்னிடம் குமுறினார்.

வாழ்வே வரம்!

எனக்கு அவருடைய அண்ணனும் நல்ல பழக்கம். அவரிடம் பேசிப் பார்த்தேன், ஒன்றும் பிரயோஜனமில்லை. வருடங்கள் உருண்டோடின.

ஒருநாள், அந்த நண்பரின் அண்ணன் என் அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு இரண்டு பையன்கள்; இரண்டு பெண்கள். அவர்களின் ஜாதகங்களை என்னிடம் காண்பித்தார். அவற்றைப் பார்த்ததும், நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் நான்கு வாரிசுகளுக்கும் செவ்வாய் எட்டில் மறைந்திருந்தது. இது தோஷம் அல்லவா? இந்தத் தகவலை அவரிடம் சொன்னேன்.

''பெரியவனுக்கு ரத்தம் உறையாத ஒரு குறைபாடு இருக்கு. சின்னவனுக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கு. ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக்கிட்டிருக்கேன். பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணத்தை முடிக்கணும்'' என்று கவலையோடு பேசினார் அவர்.  

கத்தரிக்காய் சாப்பிட்டால் நமைச்சல் எடுக்கும். உருளைக்கிழங்கு உண்டால் வாயுத் தொந்தரவு. வினை விதைத்தால், வினைதானே விளையும்? அடுத்தவர் சொத்தையும் உழைப்பையும் சுரண்டினால், வாரிசுகளுக்குத்தான் தோஷங்கள் சேருகின்றன. அடுத்தவரை ஏமாற்றவேண்டும் என்கிற நச்சு எண்ணம் ஜீன்களில் சென்று பதிகிறது. அந்தப் பதிவு, அடுத்த தலைமுறையின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தோடு பிறக்க வைக்கிறது. ஒளவைப்பாட்டி இதை, ''பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்'' என்று அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருக்கிறாள். கிராமத்திலும்கூட, 'வஞ்சித்தார் வாழ்ந்தாலும் வஞ்சித்தார் வாரிசுகள் வாழ்வது அரிது’ என்று போகிறபோக்கில் சொல்லி வைத்துவிட்டுப் போனார்கள். 'அப்பா செய்த பாவம் பிள்ளைகள் தலையில் விடிவதா? இது நியாயமா?’ என்று இதை ஏற்கக் கஷ்டமாக இருந்தாலும், உண்மை நிலவரம் அப்படித்தான் இருக்கிறது.

வாழ்வே வரம்!

உடனே, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எல்லோரும் தங்களை மகா பாவிகள் என்று எண்ணி, மனம் குமையவேண்டாம். மேலே சொன்னது மிகக் கடுமையான செவ்வாய் தோஷத்துக்கான உதாரணம்; அவ்வளவே! செவ்வாய் தோஷம் ஒரு செயலின் ஒரு விளைவு. இதையே இந்து மதம் 'கர்மா’ என்கிறது. ஜோதிடத்தில் பூர்வ புண்ணியம் என்றும், கர்ம வினை என்றும் இந்த விஷயத்தை மிக விரிவாக அலசுகிறது. இதனால்தான் ஒருவரின் ஜாதகத்தை வைத்து, அவரின் வாரிசுகள் எப்படியிருப்பார்கள் என்று ஜோதிடர்களால் சொல்ல முடிகிறது.

''ஐயா... என் பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு. ஆனா, எனக்குத் தெரிஞ்சு நான் யாரையும் ஏமாத்தினது இல்லை. அப்படியிருக்கும்போது, என் வாரிசுக்கு எப்படி செவ்வாய் தோஷம் வரும்? நான் பண்ணாத பாவத்துக்கோ அல்லது அப்படியே நான் தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது பாவம் பண்ணியிருந்தாலும், அதற்காக என் மகன் எப்படி தண்டனை அனுபவிக்கலாம்?'' என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.

இதற்கான பதிலையும், செவ்வாய் தோஷம் எந்தெந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், குறிப்பாக திருமணத்துக்கு மட்டும் ஏன் செவ்வாய் தோஷத்தைப் பார்க்கிறார்கள் என்பதையும், இந்தச் சிக்கலை எளிதாகக் தீர்ப்பது எப்படி, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையும் அடுத்த இதழில் காண்போம்.

- சந்தோஷம் தொடரும்...

அட்டை மற்றும் படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்