சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆரூடம் அறிவோம் - 2

ஜோதிட புராணம்!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

புராணங்களும் சாஸ்திரங்களும் தோன்றியதற்கான வரலாறு ஒன்று உண்டு. வேதங்கள் தோன்றிய காலத்தை 'வேத காலம்’ என்றும், இதிகாச சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தை 'இதிகாச காலம்’ என்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோன்று, ஜோதிட சாஸ்திரத்துக்கும் ஒரு சரித்திரம் உள்ளது.

ஜோதிட சாஸ்திரம் என்று பொதுவாகச் சொன்னால், அது உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் தோன்றி, பழக்கத்தில் இருக்கும் ஜோதிட சாஸ்திரம் பற்றிய விவரங்களைக் குறிக்கும். எனவே, குறிப்பாக 'இந்து ஜோதிட சாஸ்திரம்’ என்று எடுத்துக்கொண்டு, இந்து சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் தோன்றி, இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜோதிட சம்பிரதாயம் பற்றிய வரலாற்றை இங்கே பார்ப்போம்.

ஆரூடம் அறிவோம் - 2

இந்து சம்பிரதாய அல்லது சாஸ்திரப் படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்கள், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகள்... இந்த பன்னிரு ராசிகளிலும் ஒன்பது கிரகங்களின் சுழற்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்து ஜோதிட சாஸ்திரத் தின் வரலாற்றை முதலில் பார்ப்போம்.

திரேதா யுகத்தில் வேதம் தோன்றி வழக்கத்தில் வந்த காலத்திலேயே இந்து ஜோதிட சாஸ்திரம் தோன்றியுள்ளது. சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு மஹரிஷியே இந்து ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கியவர் என்கின்றன புராணங்கள். பிரம்மா சிருஷ்டியை ஆரம்பித்தபோது, தனக்கு உதவி செய்ய பிரஜாபதிகளை உருவாக்கினார். அவர்களில் ஒருவர்தான் பிருகு மஹரிஷி. இவர் உருவாக்கிய ஜோதிட சாஸ்திரம் 'பிருகு ஸம்ஹிதை’ எனப்படுகிறது. இதுவே இந்து ஜோதிட சாஸ்திரத்தின் மூலாதார நூல்.

பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவர் என்று போற்றப்படும் பிருகு மகரிஷி, மனித வாழ்வை வளம் பெறச் செய்ய, ஒருவரின் ஜாதகக் குறிப்பு மூலம் அவர்களின் குணாதிசயங்கள், வாழ்வின் ஏற்றத்தாழ்வு பற்றிய விவரங்கள், எதிர்காலம் ஆகியவற்றைக் கண்டறியும் இந்த சாஸ்திரத்தை உலகுக்குத் தந்தார். இவர், இந்த ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கக் காரணமான புராணச் சம்பவம் ஒன்று உண்டு.

ஸ்கந்த புராணத்தின்படி சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, சரஸ்வதி நதிக்கரையில் மகரிஷிகளும் தேவர்களும் உலக நன்மை கருதி மஹா யாகம் ஒன்று நடத்தினார்கள். அதில் பிருகுவும் கலந்துகொண்டார். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யாருக்கு பூர்ணாஹுதியும் முதல் மரியாதையும் சமர்ப்பிப்பது என்ற கேள்வி எழ... மும்மூர்த்திகளில் எல்லா வகையிலும் உயர்ந்தவருக்கே பூர்ணாஹுதி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ஆரூடம் அறிவோம் - 2

மும்மூர்த்திகளில் சிறந்தவர் யார் என்பதைப் பரீட்சித்து முடிவு செய்யும் பொறுப்பை பிருகு ஏற்றுக்கொண்டார். முதலில், பிரம்மலோகம் சென்றார் பிருகு. அங்கே நிஷ்டையில் இருந்த பிரம்மா, முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. 'மானஸ புத்திரனே வா!’ என்று அழைக்க வில்லை. இதனால் கோபம் கொண்ட பிருகு, காரண- காரியங்களைப் பற்றிச் சிந்திக்காமல் பிரம்மனுக்குச் சாபம் தந்தார். 'கலியுகத்தில் உமக்கு ஆலயங்கள் இருக்காது. எவரும் உமக்கு நித்ய பூஜைகள் செய்ய மாட்டார்கள்’ என்பதே அவர் தந்த சாபம். இன்றும் இது நடைமுறையில் இருப்பது பலரும் அறிந்த உண்மை. (இதற்கு சிவபெருமானின் அடி-முடி தேடிய கதையையும் காரணமாகக் கூறுவர்.) புஷ்கர் என்ற இடம் தவிர, வேறு எங்கும் பிரம்மனுக்குப் பிரசித்தமான ஆலயங்கள் கிடையாது.

அடுத்து, திருக்கயிலாயம் சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவபெருமான் ஆனந்த தாண்டவத்தில் ஈடுபட்டிருந்ததால், முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. நந்திதேவரும் முனிவரைத் தடுத்து, சற்றுக் காலம் தாழ்த்தி சிவ தரிசனம் செய்யுமாறு வேண்டினார். சிவனார் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்ததாகக் கருதி, அவருக்கும் சாபம் தந்தார் பிருகு. ''கலியுகத்தில் உம்மை அருவுருவமான லிங்க வடிவில் மட்டுமே வழிபடுவார்கள்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்து, வைகுண்டத்துக்குச் சென்றார் பிருகு. ஸ்ரீமகாவிஷ்ணு யோக நித்திரையில் இருந்தார். அவரை வணங்கிய பிருகு முனிவர், விழித்தெழுந்து தனக்கு ஆசி வழங்குமாறு விஷ்ணுவை வேண்டினார். ஆனால், விஷ்ணு எழுந்திருக்கவில்லை. கோபம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவைத் தன் காலால் மார்பில் உதைத்தார். திடுக்கிட்டு விழித்த ஸ்ரீமகாவிஷ்ணு நடந்ததை அறிந்து கோபம் அடையாமல், முனிவரின் பாதங்களைப் பற்றி வருடினார். தாமதமாக எழுந்ததற்காக முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தன் மார்பில் உதைத்ததால் முனிவரின் பாதம் வலிக்கிறதா என்று பரிவோடு கேட்டு, மீண்டும் அவர் கால்களைத் தொட்டு, அதில் இருந்த அகங்காரக் கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டார். முனிவரின் அகங்காரம் அழிந்தது. ''காலால் உதைத்தவனுக்கும் கருணை காட்டிய நீங்களே மும்மூர்த்திகளில் மிகவும் உயர்ந்தவர்!'' என்று ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போற்றிப் பாராட்டினார் பிருகு மஹரிஷி. ''உமக்கே யாகத்தில் முதல் பூர்ணாஹுதி'' எனக் கூறி மகிழ்ந்தார்.

இந்தச் சம்பவம் இத்துடன் முடிந்துவிட வில்லை. மகாவிஷ்ணுவின் மார்பில் நிலையாக வீற்றிருக்கும் செல்வத்தின் நாயகி ஸ்ரீமகாலட்சுமி, பிருகு முனிவரின் செய்கையால் கடும் கோபம் அடைந்தாள். முனிவரின் மீது மட்டுமல்ல, அவரை மன்னித்து மரியாதை செய்த மகாவிஷ்ணுவின் மீதும் அவளின் கோபம் வெளிப்பட்டது.

திருமகளின் இந்தக் கோபமே, பிருகு சம்ஹிதை எனும் மிக அற்புதமான ஜோதிட சாஸ்திரம் நமக்குக் கிடைக்கவும் காரணமானது!

- தொடரும்