மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

மார்ச் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை
'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மேஷம்: மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து செயல்படும் நீங்கள், சிறந்த உளவியல் நிபுணர்கள்.

ராசிநாதன் செவ்வாயும், சூரியனும் லாப வீட்டில் நிற்பதால், பணவரவு அதிகரிக்கும். கணவர் உங்களை மதிப்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. புது வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில், புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், மேலதிகாரியின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் காலமிது.          

ராசி பலன்கள்

ரிஷபம்: பணம் சம்பாதிப்பதைவிட, சவால்க¬ளைச் சந்திப்பதற்கு முக்கியத்துவம் தருபவர்கள் நீங்கள்.

10-ல் செவ்வாய் சாதகமாக இருப்பதால்... உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் மூத்த அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளையிது.

ராசி பலன்கள்

மிதுனம்: கொடுத்து சிவந்த கைகளை உடையவர்கள் நீங்கள்.

ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சூரியனும், செவ்வாயும் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். 2-ம் தேதி முதல் 3-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் கவனம் தேவை. 4-ல் சனி தொடர்வதால், சோர்வு ஏற்பட்டு விலகும். வியாபாரத் தில் ரகசியங்கள் கசிவதைத் தகுந்த நடவடிக்கை மூலம் தடுப்பீர்கள். உத்யோகத்தில்  வேலைச்சுமை அதிகரிக்கும்.

உங்கள் பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டிய தருணமிது.

ராசி பலன்கள்

கடகம்: விட்டுக் கொடுக்கும் மனசு கொண்ட நீங்கள், எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள்.

சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால்... சோர்வு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் 8-ல் மறைந்திருப்பதால், வீண் டென்ஷன் வந்து நீங்கும். 3-ம் தேதி காலை 11 மணி முதல் 5-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

சிக்கனம் தேவைப்படும் நேரமிது.    

ராசி பலன்கள்

சிம்மம்: தன்னம்பிக்கை கொண்ட நீங்கள், நெருக்கடி நேரத்திலும் நெறிதவறாதவர்கள்.

ராசிநாதன் சூரியனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால், அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உதவி செய்வார்கள். ஆனால், நெருப்பு கிரகங்கள் உங்கள் ராசியைப் பார்ப்பதால்... காரிய தாமதம் ஏற்படும். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால், கணவர் கோபப்படலாம். 6-ம் தேதி முதல் 8-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், ஒய்வின்றி உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

நாவடக்கம் தேவைப்படும் காலமிது.    

ராசி பலன்கள்

கன்னி: அதிகம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள்.

உங்கள் ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால், தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவர் பாசமழை பொழிவார்.  வீடு கட்டும் பணி முழுமையடையும். 8-ம் தேதி காலை 10 மணி முதல் 10-ம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில், புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.

சாதித்துக் காட்டும் தருணமிது.

ராசி பலன்கள்

துலாம்: சங்கடத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்தும் நீங்கள், நல்லது செய்தே நலிந்தவர்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 4-ம் வீட்டில் இருப்பதால், பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்பதால், சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். ராகு வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. 10-ம் தேதி இரவு 8 மணி 12-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், சில காரியங்களைப் போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.  

ராசி பலன்கள்

விருச்சிகம்: மற்றவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் நீங்கள், மனதுக்கு பிடித்தவர்களுக்காக எதையும் செய்வீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வீண் பழி வந்து செல்லும். 13-ம் தேதி இரவு 8 மணி முதல் 15-ம் தேதி வரை  சந்திராஷ்டமம் நடப்பதால், வாக்குவாதங்களைத் தவிருங்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் காலமிது.  

ராசி பலன்கள்

தனுசு: அனுபவபூர்வமாக பிரச்னைகளை அணுகி தீர்வு காண்பதில் வல்லவர்கள் நீங்கள்.

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் நல்லபடியாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சுக்கிரன் 2-ல் நிற்பதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால், அவ்வப்போது வீண் டென்ஷன், மன இறுக்கம் வந்து விலகும். வியாபாரத்தில், புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சரிசெய்வீர்கள்.

வெற்றிக்கனியை சுவைக்கும் தருணமிது.  

ராசி பலன்கள்

மகரம்: தவறுகளை சகித்துக் கொள்ளாமல் தட்டிக் கேட்பவர்கள் நீங்கள்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்விக சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சூரியனின் போக்கு சரியில்லாததால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள்.

பழைய பிரச்னைகள் தீரும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: இலவசமாக கிடைப்பதை ஏற்க மறுக்கும் நீங்கள், சுய உழைப்பால் போராடி முன்னேறுபவர்கள்.

குரு வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 12-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். ராசிக்குள் சூரியனும், செவ்வாயும் நிற்பதால்... உடல் உபாதை வந்து நீங்கும். அஷ்டமத்துச் சனி இருப்பதால்... வீண் சந்தேகமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

உடல் நலனில் அக்கறைக் காட்ட வேண்டிய காலமிது.

ராசி பலன்கள்

மீனம்: சண்டைக்காரர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள்.

புதன் ராசிக்குள் நிற்பதால், கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்.  பள்ளிப் பருவத் தோழிகளை சந்திப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். 12-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால்... முன்கோபம், வீண் அலைச்சல் வந்து செல்லும். கணவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினால், அதை பெரிதாக்க வேண்டாம். உறவினர்கள், தோழிகளுடன் விரிசல் வரலாம். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில், சக ஊழியர்கள் உதவுவார்கள்.

வீண் சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டிய தருணமிது.