குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆரூடம் அறிவோம் - 3

ஜோதிட புராணம்!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் பிருகு முனிவர் எட்டி உதைத்ததையும், ஆனாலும் அதற்காகக் கோபித்துக்கொள்ளாமல் முனிவரின் பாதம் நோகுமே என்று ஸ்ரீவிஷ்ணு பிருகு முனிவரின் கால்களை இதமாகப் பிடித்து விட்டதையும் கண்ட திருமகள் கடும் கோபம் கொண்டாள் என்று பார்த்தோம் அல்லவா?

அதன் விளைவாக, பிருகு முனிவருக்குச் சாபம் கிடைத்தது.

''வேதங்களைக் கற்றதால் அகந்தையும் ஆணவமும் மிகுந்து, மும்மூர்த்திகளையே அவமதித்துவிட்டீர்! இனி, உமது வம்சத்தில் வரும் எவரிடமும் செல்வம் சேராது. நான் அவர்களை நாடி, அவர்கள் வீட்டுக்கு வர மாட்டேன்!'' என்று சபித்தாள் ஸ்ரீமகாலட்சுமி.

ஆரூடம் அறிவோம் - 3

பிருகு முனிவர் திருமகளின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். பின்னர், அன்னையும் அருள்கூர்ந்து அவருக்குச் சாப விமோசனம் தந்தாள்.

''உமது அகந்தையையும் வித்யாகர்வத்தையும் அறவே விடுத்து, பூவுலக மாந்தர்கள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் ஒரு சாஸ்திரத்தை உருவாக்குவீராக! அதை, உமது சந்ததியினர் உலகுக்குப் பரப்பட்டும். விஷ்ணுவையே சிரத்தாபக்தியுடன் வழிபட்டு, இந்த சாஸ்திரத்தால் மக்களுக்கு அவர்கள் நன்மை செய்தால், அவர்கள் இல்லங்களுக்கு வந்து நான் அருள்புரிவேன். அங்கே வித்தையோடு சகல செல்வங்களும் பரிமளிக்கும்'' என்று அருள்புரிந்தாள் மகாலட்சுமி.

பிருகு முனிவர் அகமகிழ்ந்தார். அவர், பல ஆண்டுகள் தவம் புரிந்து, விண்ணிலுள்ள கோள்களை எல்லாம் ஆராய்ந்து, அதனை மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையோடு இணைத்து, தன்னைப் பற்றியும் தன் எதிர்காலம் பற்றியும் ஒருவன் அறிந்துகொள்ள உதவும் மிக அற்புதமான ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கினார். மஹாகணபதியையும், மகாலட்சுமியையும், மகாவிஷ்ணுவையும், சரஸ்வதிதேவியையும் துதித்து அருள் பெற்று இந்த சாஸ்திரத்தை உருவாக்கினார் பிருகு முனிவர். அதுவே பிருகு சம்ஹிதை.

தன் காலத்தில் வாழ்ந்த பல்வேறு மனிதர்களின் பிறந்த நாள், நேரம், நட்சத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களின் ஜாதகங்களைக் கணித்து, அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டு இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் பிருகு  முனிவர். இந்த சாஸ்திரத்தின் மொத்தக் குறிப்புகளும் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை.

முகலாயர்கள் படையெடுத்த காலத்தில், இந்த சாஸ்திரத்தின் ஆதார ஏடுகள் அழிக்கப்பட்டன. பிரிட்டிஷார் காலத்தில் சில பகுதிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பழைமையான நாலந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டபோது, பிருகு முனிவரின் ஆராய்ச்சிக் குறிப்புகளும், அவர் சேகரித்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான ஜாதக நமூனாக்களும் அழிந்துவிட்டன.

பிருகு முனிவரின் சீடர்களும், அவரின் சந்ததியினரான ஜோதிட அந்தணர்கள் சிலரும் சேகரித்து வைத்திருந்த ஏடுகள் அல்லது நகல்களின் அடிப்படையில் பிருகு ஸம்ஹிதை நமக்குக் கிடைத்துள்ளது.

ஆரூடம் அறிவோம் - 3

இன்றைய இந்தியாவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பால்லியா எனும் இடத்தில் மஹரிஷி பிருகு ஆஸ்ரமம் உள்ளது. இங்கே பிருகு ஸம்ஹிதை சம்பந்தமான ஏடுகளும், ஆராய்ச்சி நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் என்னுமிடத்தில், பிருகு ஸம்ஹிதை பற்றிய ஏடுகளும், சம்பந்தப்பட்ட ஜோதிட சாஸ்திர அரிய நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்து ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சியும், பிருகு முனிவரின் சாஸ்திரத்தைப் பரப்பும் பணிகளும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பிருகு முனிவருக்கு மகாலட்சுமி தந்த சாப விமோசனத்தால்தான் இந்த அரிய சாஸ்திரம் உலகுக்குக் கிடைத்துள்ளது. எனவே, ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றவர்களும், அதனால் பொருளீட்டி வாழ்பவர்களும் அகந்தையோ ஆணவமோ கொள்ளக்கூடாது.

''இந்த ஜாதக பலன்படி இவரது எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்துச் சொன்னேன். அதன்படிதான் எல்லாம் நடந்தது என்று பெருமை பேசக்கூடாது. பொருள் ஆதாயம் தேடி பொய்யான பலன்களைச் சொல்லக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களிடம் லட்சுமிகடாட்சம் தங்காது. அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் சந்ததியும் இந்த பாவத்தைச் சுமக்க நேரிடும்'' என்று பிருகு முனிவரே கூறியுள்ளார்.

- தொடரும்...