குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

வாழ்வே வரம்!

வாழ்வே வரம்!

வாழ்வே வரம்!
##~##

பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், பெற்றோர் செய்யும் பாவங்களும் பிள்ளைகளின் ஜாதகத்தில் தோஷங்கள் விளையக் காரணமாகின்றன என்று சென்ற இதழில் பார்த்தோம்.

''அது எப்படி? எனக்குத் தெரிந்து நான் ஒரு பாவமும் செய்யவில்லை. அப்படியே நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் பாவம் பண்ணியிருந்தாலும், என் பிள்ளைகள் எப்படி தண்டனை அனுபவிக்கலாம்?'' என்று சிலர் கேட்கலாம்.

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. 'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா’ என்பார்கள். என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும் இல்லையா?! சர்க்கரை நோய் பரம்பரையாகத் தொடரும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அப்படியே, ஜீன்கள் மூன்று தலைமுறைக்கு ஒருவரின் உருவ அமைப்பையும் குணங்களையும் கடத்துகின்றன என்கிறது விஞ்ஞானம். இங்கும் அப்படித்தான். முந்தைய தலைமுறையின் தவறும் கர்மவினைகளும் நம்மை வந்தடையும். எவராலும் கணிக்க முடியாத காலதேவனின் கணிப்பில் இதுவும் ஒன்று.

குறிப்பாக சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும்போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்.

வாழ்வே வரம்!

2-ல் செவ்வாய்: தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். அதில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேச்சு வெளிப்படும். அதனால் பிரச்னைகள் எழும். குடும்பத்துக்கு உரிய இடமாகவும் இது வருவதால், குடும்ப ஒற்றுமையைக் கெடுப்பதாகவும் அமையும். மனைவியிடமும், மனைவி வழி உறவுகளிடமும் பேச்சாலேயே பிரச்னையை உண்டாக்குவார்.

4-ல் செவ்வாய்: 4-ஆம் இடம் என்பது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், கடுமையான பிடிவாதம் இருக்கும். அதுவே மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக்கும்.

7-ல் செவ்வாய்: ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை மட்டுமல்லாது, கூட்டு வியாபாரத்தை விவரிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக்கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது.

பொதுவாகவே ரத்தம், விந்து, வீர்யம், மர்ம ஸ்தானத்துக்கு உரியவராகச் செவ்வாய் வருகிறார். மர்ம ஸ்தானத்தின் இயல்பு மற்றும் இயக்க நிலைகளை நிர்ணயிக்கும் பங்கு செவ்வாய்க்கு உண்டு. எனவேதான் திருமணத்தின்போது அத்தனை முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தோஷத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அறிவுப் பசி, உடற்பசியோடு வயிற்றுப்பசியும் கூடுதலாகவே இருக்கும். இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய்: எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். நிலையாமைக்கு உரியது 8-ஆம் இடம் என்பதால், வாழ்வில் ஸ்திரத் தன்மை இருக்காது.

12-ல் செவ்வாய்: இந்த இடம் அயன, சயன, சுக ஸ்தானத்துக்கு உரியது. இதில் செவ்வாய் அமரும்போது, நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேசவிடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

இனி, எந்தெந்த ராசிக்கு செவ்வாய் தோஷ பாதிப்பு எப்படி- எந்த அளவுக்கு அமையும் என்பதைப் பார்ப்போம்.

மிதுன ராசிக்கு சங்கடங்களைத் தரும் சத்ரு ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருகிறார். கன்னி ராசிக்கு அவர் அஷ்டமாதிபதி. மகரத்துக்கு பாதகாதிபதி. கும்ப ராசிக்காரர்களுக்கு முடக்கிப் போடும் பகையாளிகளாகத் திகழ்பவர். ஆகவே, இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் செவ்வாயின் நிலையைப் பார்க்க வேண்டும்.

மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கும், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் அதிபதி. அனுஷ நட்சத்திரத்தை எந்த தோஷமும் பாதிக்காது. ஆகவே, இவர்களுக்கெல்லாம் தோஷம் ஒன்றும் செய்யாது என்றொரு கருத்து உண்டு. ஆனால் உண்மை அப்படி அல்ல! எந்த நட்சத்திரக்காரராக இருந்தாலும், செவ்வாய் தோஷம் இருப்பின், அது தன் வேலையைக் காட்டத்தான் செய்யும்.

சரி... இந்தத் தோஷத்துக்குப் பரிகாரம்தான் என்ன?

செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது.  

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள (நிலம், சகோதரர்கள் முதலான...) விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும். முடிந்த வரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகளையும் பெற்றோரையும் ஏமாற்றி அபகரிக்க முயற்சிக்காதீர்கள். முதல் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டிய கட்டிடமாக வாங்குவது சிறப்பு.

நிறுவனத்தை நடத்துபவராக இருந்தால், தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பே கூலியைத் தந்துவிடுங்கள். ஊர்க்காவல் முதல் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் நன்று. ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை செம்மையுறும்!

- சந்தோஷம் தொடரும்...