Election bannerElection banner
Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்
##~##

'கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் எதிர்கொள்ளும் தடைகளும் சிரமங்களும் அதிகம். எனினும், நேரம் காலம் கூடிவந்துவிட்டால்... அது கல்யாணமோ, சொந்த வீடோ எப்பேர்ப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றிகொள்ளும் வல்லமை வாய்த்துவிடுகிறது. ஆனால், சிலருக்கு இந்த சுப நிகழ்வுகளுக்கான தருணம் கூடிவருவதிலேயே சிக்கல். குறிப்பாக, கல்யாணம் என்பது அவர்களுக்கு கானல்நீராகவே அமைந்து போகிறது. ஏன் அப்படி? திருமணம் தாமதப்படுவதற்கான கிரக நிலைகள் என்னென்ன?

பன்னிரு பாவங்களுக்கும் தனித்தனி கிரக அமைப்புகள் இருந்தாலும், குறிப்பிட்ட கிரக நிலைகள் சிலவற்றை அறிவோம்.

* 7-க்கு உடையவன், 12-ல் விரயமாகும்போதும், 7-ஆம் பாவத்தில் சனி, சூரியன், ராகு, கேது ஆகியோர் தனியாக அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

* 3, 6, 7, 8, 9 மற்றும் 12-ல் அசுபர்கள் அமர்ந்தாலும் திருமணம் தாமதமாகும்.

* சனி பகவான் மேஷத்தில் பலம் இழந்தாலும், விரயம் (12-ல்) ஆனாலும் தாமதமாகும்.

* ஒருவரது ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் எந்த இடத்தில் சேர்ந்து இருந்தாலும் தாமத திருமணம்தான்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

* குரு பகவான் மேஷம், விருச்சிகம், கும்பத்தில் அமர்ந்திருந்தால் 28 வயதுக்கு மேல்தான் திருமணம் நடக்கும்.

* பூராட நட்சத்திரத்தில் பூப்படைந்த பெண்ணுக்கு திருமண யோகம் அரிது என்பர். உரிய பரிகாரத்தால் பலன் காணலாம்.

* ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 10, 11-ல் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் எல்லா தோஷங்களும் மறைந்து திருமணம் நல்ல படியாக நடந்துவிடும் என்று ஜோதிட விதி ஒன்று கூறுகிறது.

இப்படியான காரணங்களால் உண்டாகும் தோஷங்களும், தடைகளும், கெடுபலன்களும் நீங்கி, கல்யாண பாக்கியம் எளிதில் கைகூட மிக அற்புதமான வழிபாடுகளை சொல்லி வைத்துள்ளனர், நம் முன்னோர். அதில் ஒன்றுதான் வாழைமலர் வழிபாடு!

வாழைமலர் பூஜை:

பூஜையறையில், நுனி பாகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நுனிவாழை இலை விரித்துப்போட வேண்டும். அதில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது மோதிரவிரலால் ஸ்வஸ்திகம் அல்லது திருநாமம் வரையவும். பிறகு, பஞ்சவர்ண நூல் சுற்றிய (3 லிட்டர் கொள்ளளவு கொண்ட) மண் கலசத்தை தீர்த்தத்தால் நிரப்பி, மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம் தூள் இட்டு, கலசத்தின் மீது முற்றிய வாழை மலரை இதழ்கள் விரிந்து இருக்கும்படி வைக்கவேண்டும். அதற்கும் வாசனை மலர், சந்தன-குங்குமத் திலகமிட வேண்டும். பிறகு, கலசத்துக்கு எதிரில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, அவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து ஒரு வெற்றிலையின் மீது வைக்கவும்.

தொடர்ந்து, பெரிய தட்டு ஒன்றின் மீது 16 தென்னங்குச்சிகளில் பஞ்சு அல்லது திரிவிலையை சுற்றிவைத்து,  நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய் கலவையில் அவற்றை நனைத்து தீபம் ஏற்றத் தயாராக வைக்கவேண்டும். அல்லது 5 முகக் குத்துவிளக்கை இரண்டு பக்கங்களிலும் ஏற்றிவைக்கலாம். இனி, பூஜையை ஆரம்பிக்கலாம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

முதலில், வழக்கம்போல் விநாயகர் பூஜை.

ஆனை முகத்தவனே அருகம்புல் நாயகனே
வீணை சரஸ்வதிக்கு வித்தகனாய் வந்தவனே
வாழை மலர் முன்பு வாசமுடன் அமர்ந்தோனே
வாழ்வை பெறும் பூசை வெற்றிதர அருள்வாயே

- என்றபடி மலர்கள் சமர்ப்பித்து, விநாயகரைத் தியானித்து வணங்க வேண்டும். திருமணத் தடையுள்ள ஆண்-பெண் அமர்ந்து இதைச் செய்தல் அவசியம். அடுத்ததாக அன்றைய திதி, வாரம், நட்சத்திர விவரங்களைச் சொல்லி, கையில் மலர் மற்றும் மஞ்சள் அரிசியை எடுத்துக்கொண்டு, மம அதிசீக்கிர விவாக பராப்தியர்த்தம் களத்திர தோஷ நிவாரணார்த்தம் என்று பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்யவேண்டும். பிறகு ஸ்ரீதுர்காதேவி துதி, ஸ்ரீலட்சுமி துதி, ஸ்ரீமகாவிஷ்ணு துதி, ஸ்ரீஸ்வயம்வர கலாதேவியின் துதி ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அல்லது, கீழ்க்காணும் துதியை 7 முறை சொல்லலாம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

விறல் மாறன் ஐந்து மலர்வானி சிந்த
மிகவானில் இந்து வெயில் காய
மிதவாடை வந்து தழல் போல ஒன்ற
வினை மாதர் தத்தம் வசை கூறக்
குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீரக்
குளிமாலையின் கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மஹிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியானா!
ஆண்கள், கந்தர்வராஜ மந்திரமான...
ஓம் காமேஸ்வராய வித்மஹே பூவித
                  சீக்ராய தீமஹி
தந்தோ கந்தர்வராஜ; ப்ரசோதயாத்

என்று 32 தடவை சொல்லி வணங்கலாம். மேலும்,

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையோன் நுடையாய் மருகல்
புலருந்த் தனையும் துயிலான் புடைபோத்
தலரும் படுமோ அடியானிவனே  

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

எனும் இந்தப் பாடலையும் 5 முறை படித்து, ஆத்ம பிரதட்சிணம் செய்து, தேங்காய் மற்றும் மூவகை கனிகளை தாம்பூலத்துடன் படைத்து, குலதெய்வம், குரு, பித்ருக்களை நினைத்து மலரிட்டு வணங்கிய பிறகு, 'ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே திரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே’ என்று சொல்லி தீபக்குச்சிகள் 16-யும் ஏற்றுக. பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி மஞ்சள்- குங்குமம் பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, கலசநீரை வீடு முழுவதும் தெளிக்கலாம். பின்னர், ஒரு மணைப் பலகையில் பெண்ணை அமர வைத்து மங்கல வாசகங்கள் சொல்லி அபிஷேகம் செய்துவிட்டு, மடி ஆடை உடுத்தச் செய்யவேண்டும். தொடர்ந்து, மீண்டும் பூஜையறைக்குச் சென்று வணங்கி குங்குமப் பிரசாதம் எடுத்துக்கொண்டு, சிறிது பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கிவிட்டு, வீட்டுப் பெரியவர்களிடமும் வாழ்த்து பெற வேண்டும்.

இந்த வழிபாட்டால் கிடைக்கும் இறையருளாலும் பெரியோர் ஆசியாலும் விரைவில் கல்யாணம் கூடிவரும்.

வழிபடுவோம்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு