Published:Updated:

வாழ்வே வரம் - 4

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன் இனி எல்லாம் சந்தோஷம்!

வாழ்வே வரம் - 4

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன் இனி எல்லாம் சந்தோஷம்!

Published:Updated:
வாழ்வே வரம் - 4

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றொரு முதுமொழி உண்டு. எண்ணின் முக்கியத்துவத்தை, மொழியின் சிறப்பை, அதனால் விளைந்த அட்சரங்களின் உயர்வை விளக்கும் சொல் வழக்கு இது. ஒருவனது வாழ்க்கைக் கணக்கிலும் அவனது பிறவி  எண் அல்லது விதி எண்ணுக்கு முக்கிய பங்குண்டு.

பிறவி எண் என்பது பிறந்த தேதியின் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவர் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருட எண்களை கூட்டி வரும் கூட்டுத்தொகை ஆகும். உதாரணத்துக்கு 6-2-1976 என்பது ஒருவரது பிறந்த நாள் எனில், அவரது பிறவி எண்-6; விதி எண் 4 (6+2+1+9+7+6= 31; 3+1=4).

இப்படியாக ஒவ்வொருவருக்கும் உரியதாகத் திகழும் குறிப்பிட்ட எண்கள், கிரகங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. எண் ஒன்று சூரியனுக்குரியது;

##~##

2- சந்திரன், 3- குரு, 4 - ராகு, 5- புதன், 6 - சுக்கிரன், 7- கேது, 8 - சனி, 9- செவ்வாய்க்கு உரியது.

கிரகப் பெயர்ச்சிகளும், செயல்பாடுகளும் இந்த எண்களை, எண்களுக்கு உரியவர்களை நிச்சயம் பாதிக்கும். இதன் அடிப்படையில் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி எந்தெந்த எண்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என அறிவோம்.

ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். அதாவது, 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு பகவான், 5-ஆம் எண்ணுக்கு அதிபதியான புதன் வீட்டுக்கு மாறுகிறார். இருவருக்கும் இடையே நேரடியான பகை இல்லையெனினும், பனிப்போர் உண்டு. எனவே பொதுப்பலன்கள் என்று பார்த்தோமானால், நன்மையும் தீமையும் கலந்த பலன்களே விளையும். அதுவும் போக 1-1-2013 வருடப்பிறப்பு. இந்த வருடத்தின் பிறவி எண் ஒன்று; விதி எண் 8. ஒன்றும் எட்டும் சேரக்கூடாது என்பார்கள். எனவே, உலகம் முழுக்க வன்முறைகள் அதிகமாகவே இருக்கும். எதிர்பாராத குழப்பங்களும், பிரச்னைகளும் இருக்கும். எனினும், மக்களின் வளர்ச்சியும் வளமும் சீராக இருக்கும்.

வாழ்வே வரம் - 4

எண்-1

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், அல்லது விதி எண் ஒன்று உடையவர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்லதையே தரப் போகிறது. பதவி வாய்ப்புகள், வழக்கில் வெற்றி என அடுத்தடுத்து நன்மைகளே தொடரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்வுகளால் வீடு களைகட்டும்.

எண்-2

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 2 உடையவர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சுபச்செலவுகளை அதிகரிக்கச் செய்யும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. செய்யும் தொழிலிலும், பணியிலும் வேகமான வளர்ச்சி உண்டு. எனினும், இந்த எண்காரர்கள் தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

எண்-3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 3 உடையவர்களுக்கு சுமாரான பலன்தான். வீட்டில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் எழும். தம்பதிகளுக்கு இடையே விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகம், வியாபார நிமித்தமாக கணவன் - மனைவி பிரிய நேரிடும். இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் இந்த எண்காரர்கள், எவருக்காகவும் வங்கி லோனுக்கு உத்தரவாதக் கையெழுத்து போடுவது கூடாது. ஏலச்சீட்டிலும் சேர வேண்டாம்.

எண்-4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 4 உடையவர்களுக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணிகள் பூர்த்தியாகும். வருமானம் உயர்த்துவார் குரு பகவான். மகளுக்குத் திருமணம் இனிதே நடந்தேறும்.

எண்-5

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 5 உடையவர்கள், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய விஷயங்களில் கால் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள். பிள்ளைகளை விட்டுப்பிடிக்க வேண்டும். எதிர் வீட்டுக்காரர் தன் பிள்ளையை அந்த கோர்ஸில் சேர்த்திருக்கிறார்; அண்ணன் மகன் இந்த கோர்ஸில் இணையப்போகிறான்... நாமும் நம் பிள்ளையை குறிப்பிட்ட கோர்ஸில் சேர்க்கலாம் என்று உங்களின் விருப்பங்களை பிள்ளைகளிடம் திணிக்காமல், அவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர்த்து படிக்க வையுங்கள். மூச்சுத் திணறல், சளிப் பிரச்னைக்கு சரியான மருத்துவ சிகிச்சை செய்துகொள்ளுங்கள்.

வாழ்வே வரம் - 4

எண்-6

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 6 உடையவர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சியில் அனைத்து யோகங்களும் கிட்டப்போகின்றன. இவர்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு விஷயமும் வெற்றியில் முடியும். தொட்டது துலங்கும். குருவருளோடு திருவருளும் பெருகும்; லட்சுமி கடாட்சம் பொங்கும்.

எண்-7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 7 உடையவர்கள், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும். சகோதரர் உறவு பலப்படும். உங்களுக்கான பிரச்னைகளை அவர்கள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

எண்- 8

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 8 உடையவர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் மத்திம பலன்களே விளையும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் நற்பலன்கள் தருவதாகவும், அதன் பிறகு 2014 மே வரையிலும் சுமாரான பலன்களும் உண்டு. புதிய முயற்சிகளுக்கான திட்டங்களை இப்போதே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

எண்- 9

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் 9 உடையவர்களுக்கு, வளர்ச்சியும் வளமும் உண்டு என்றாலும் இனந்தெரியாத பயம் இருந்துகொண்டிருக்கும். எதிர்பார்த்தபடி எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும் மனத்தில் நிறைவு இருக்காது. வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு நலன் பயக்கும்.

- சந்தோஷம் தொடரும்...