Published:Updated:

ஆரூடம் அறிவோம்- 5

ஜோதிட புராணம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஆரூடம் அறிவோம்- 5

ஜோதிட புராணம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

முனிவர் ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தைக் கற்பித்துக்கொண்டிருந்தார். அன்றைய தினம் அவர்கள் எடுத்துக்கொண்ட விஷயம் 'ஆயுள் பாவம்’ பற்றியது. சந்திராதரன் எனும் மாணவனின் ஜாதகத்தை வைத்து, அவனுடைய ஆயுள் எத்தனைக் காலம் என்பதைக் கணக்கிடும் பயிற்சியை எல்லாச் சீடர்களுக்கும் முனிவர் சொல்லிக் கொடுத்திருந்தார்.

ஆரூடம் அறிவோம்- 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஆராய்ந்ததில், சந்திராதரனின் ஆயுள் அன்று மாலை சூர்ய அஸ்தமனத்தில் முடிந்துவிடும் என்ற உண்மையை எல்லாச் சீடர்களும் கண்டறிந்தனர். முனிவருக்கும் சந்திராதரனுக்கும்கூட இந்த உண்மை புலனாகியது. அறிவும் ஆற்றலும் மிக்க சந்திராதரனை அத்தனைச் சிறிய வயதில் இழப்பதற்கு எவரும் தயாராக இல்லை. அவனைக் காப்பாற்றும்படி எல்லோரும் முனிவரிடம் வேண்டினர். அவரும் தனது தவ வலிமையால் சந்திராதரனை அழைத்துக்கொண்டு பிரம்மலோகம் சென்று, அவனது ஆயுளை அதிகப்படுத்தித் தரும்படி பிரம்மனிடம் முறையிட்டார்.

''நான் படைப்பவன். பிறக்கும் நாளைக் குறிக்கவே எனக்கு அதிகாரம் உண்டு. ஒருவன் இறக்கும் நாளை மாற்றி அமைக்க எனக்கு அதிகார மில்லை. ஆயுளைக் கட்டுப்படுத்துபவர் மகேஸ்வரன் எனும் ருத்ரன். அவர் மிருத்யுஞ்ஜயன். அவரால் மட்டுமே மரணத்தை மாற்ற முடியும். எனவே, சிவபெருமானிடம் சென்று முறையிடுங்கள்'' என்று கூறினார் பிரம்மதேவன்.

முனிவரும் சிவலோகம் சென்று சிவனை வேண்டினார். ''முனிவரே! உயிரினங்களின் ஆயுள் முடியும் நேரத்தைக் கணக்கிட்டு நிர்ணயித்துத் தரும் நானே, நான் உருவாக்கிய நியதியை மாற்றுவதோ மீறுவதோ தர்மம் அல்ல. எனவே, காக்கும் கடவுளான ஸ்ரீமந் நாராயணனிடம் சென்று வேண்டிப் பாருங்கள்'' என்றார்.

ஆரூடம் அறிவோம்- 5

முனிவரும் சீடனுடன் சென்று வைகுண்டநாதனைத் தரிசித்து, அவனைக் காப்பாற்றும்படி வேண்டினார். ஸ்ரீமந் நாராயணன் முனிவரை நோக்கி, ''தபஸ்வியே! உமது தவ பலத்தால் பிரம்மலோகமும், சிவலோகமும் சென்றுவிட்டுப் பிறகு என்னிடம் வந்திருக்கிறீர். இதை ஒருநாள் முன்னதாகவே நீர் செய்திருந்தால், ஏதாவது செய்ய வழி இருந்திருக்கும். இவன் மரணம் நிகழக்கூடிய நாள், நக்ஷத்திரம், திதி எல்லாமே வந்துவிட்டது. மும்மூர்த்திகளாலும் இனி எதுவும் செய்யமுடியாது. வேண்டுமானால், இவன் உயிரைக் கவரவிருக்கும் எமதர்மனிடமே சென்று முறையிட்டுப் பாருங்கள். அது ஒன்றுதான் இப்போது நீர் செய்யக்கூடியது!'' என்று சாமர்த்தியமாகக் கூறிவிட்டார்.

மூன்று லோகங்களுக்குச் சென்ற பின்பு, மிஞ்சி யிருந்த தவ பலத்தை வைத்துக்கொண்டு, சந்திராதரனையும் அழைத்துக்கொண்டு, எமதர்மன் முன்னால் போய் நின்றார் முனிவர். அவர் வேண்டுகோள் விடுக்கும் முன்பே எமதர்மன் பேசினான்... ''முனிவரே! இச்சிறுவனின் மரணத்துக்கு நீங்கள்தான் காரணம்'' என்றான். முனிவர் ஆச்சர்யமும் கோபமும் அடைந்து, 'ஏன் அவ்வாறு கூறுகிறாய்?’ என்று எமதர்மனைக் கேட்டார்.

''பூலோகத்தில் இருந்தபடியே, உம்முடைய தவ வலிமையால் 'தீர்க்காயுஷ்மான் பவது’ (நீண்ட ஆயுளோடு வாழ்வாய்) என்று நீர் வாழ்த்தியிருந்தால், அது பலித்திருக்கும். இவன் உயிரைக் கவர்ந்து கொண்டு வருவது எனக்குப் பிரச்னையாக இருந்திருக்கும். நீர் சென்ற மூன்று உலகத்துக்கும் நான் சென்று முறையிட்டு இருப்பேன். ஆனால் நீங்களோ, உங்களின் தவ பலத்தையெல்லாம் மூன்று உலகத்திற்கும் செல்வதில் வீணாக்கிவிட்டு, இப்போது கடைசியாக இவனை என்னுடைய உலகத்திலேயே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர். இவனைத் திரும்ப அழைத்துச் செல்லும் தவ வலிமையும் இப்போது உம்மிடம் இல்லை. எனது வேலையைச் சுலபமாக்கிவிட்டீர். இனி, நீர் செல்லலாம். இவன் ஆயுள் முடிந்தது. உமக்கு ஆயுள் முடிந்த பிறகு என்னிடம் வந்து சேர்வீர்!'' என்று கூறிவிட்டான். முனிவரும் வேறு வழியின்றி, சந்திராதரனை எமலோகத்தில் விட்டுவிட்டு ஆசிரமம் திரும்பினார்.

பெற்றோரையும் பெரியோரையும், தெய்வீக புருஷர்களையும் தபஸ்விகளையும் வணங்கும்போது அவர்கள் 'தீர்க்காயுஷ்மான் பவது’ என்று ஆசி கூறினால், அந்த நல்லாசியினால் நமது ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.

விதி வலியது. எனினும், பெரியோர்கள் மற்றும் மகான்களின் ஆசியும் அருளும் கிடைத்தால் பாதிப்புகள் குறையும் அல்லது விலகும் என்பதை விளக்கும் அற்புதமான கதை இது.

இந்து ஜோதிடம் வேத காலத்திலிருந்தே, அதாவது இன்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டத்தில் ஜோதிட சாஸ்திரம் வித்தியாசமான பரிமாணத்தில் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதை ஜோதிட சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது.

சுமார் 4,200 ஆண்டு களுக்கு முன்பே எகிப்தியர்கள் நாட்களைக் கணக்கிட்டு, நல்லது- கெட்டதை அறியும் பொருட்டு பஞ்சாங்கம் போன்ற நாட்காட்டியைப் (calendar) பயன்படுத்தியுள்ளனர். இதன்படி, ஓர் ஆண்டுக்கு 360 நாட்கள் என்றும், 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் ஒரு வருடம் என்றும் அவர்கள் கணித்திருந்தனர். எகிப்திய பிரமிடுகள், ஜோதிடம் மற்றும் வான சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதாக எகிப்திய சரித்திரம் கூறுகிறது.

சுமார் 2,200 ஆண்டு களுக்கு முன்பு (2000 BC) பாபிலோனிய ஜோதிடர்கள் 12 ராசிகளையும், அவற்றுக்கான அடையாளக் குறியீடுகளையும் வகுத்துத் தந்தனர். எகிப்தை ஆண்ட ராம்சே-உ என்ற மன்னன் இந்த சாஸ்திரத்தின் அடிப்படையில் தனது ராசியின் பலன்களைத் தெரிந்துகொண்ட பிறகே முக்கியமான முடிவுகளை எடுத்ததாக எகிப்து நாட்டுச் சரித்திரம் குறிப்பிடுகிறது. கி.மு. 600-களில் எகிப்து, பாபிலோனிலிருந்து ஜோதிடம் மற்றும் வான சாஸ்திரம் கிரேக்கம், ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. எகிப்தின் மெசபடோமியாவே ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்து அறிந்து உலகுக்குச் சொன்ன பெருமை பெறுகிறது.

சமேரியர்களால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 'ஜிகூரத்’ எனும் வான சாஸ்திர மையமே உலகின் முதல் வானவியல் ஆராய்ச்சிக்கூடம் என்கிறார்கள் சரித்திர ஆசிரியர்கள். விண்வெளியையும் கோள்களையும் ஆராய்ந்து அதனோடு மனித வாழ்க்கையை சம்பந்தப் படுத்திப் பேசப்பட்ட ஜோதிட சாஸ்திரமும் சமேரியர்களால் கண்டறியப்பட்டது. சூரியன், சந்திரன் மற்றும் 5 முக்கிய கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது சாஸ்திரம் அமைத்திருந்தது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகிய 7 கோள்களும் இதில் அடங்கும்.

நாம் இன்றைக்கு கணிதப்பாடத்தில் படிக்கும் பித்தகோரஸ் தேற்றத்தைக் (Pythagoras theorem) கண்டறிந்தவர் பித்தகோரஸ். இவர் ஜோதிடம், எண் ஜோதிடம், ஆரூடம் போன்றவற்றில் ஈடுபாடு செலுத்தி, அவற்றைப் பயன்படுத்தும் விதிமுறைகளையும் தொகுத்தார். இவர் வாழ்ந்த காலம் 535BC.

கி.பி. 460-களில் ஹிபோக்ரேட்ஸ் என்ற விஞ்ஞானி, மனித உடலின் பாகங்களையும் அவை செயல்படும் விதத்தையும், அவற்றில் ஏற்படும் நோயின் அறிகுறிகளையும், அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கண்டறியும் முறைகளை விளக்கினார்.

கி.மு. 330-ல் மாமன்னன் அலெக்ஸாண்ட ரும் ஜோதிட சாஸ்திரத்தை உலகெங்கும் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டான்.

கி.மு. 200-களில்தான் ஜோதிட சாஸ்திரம் ரோமானியர்களால் அறியப்பட்டது. இந்த சாஸ்திரத்தால் எதிர் காலத்தை அறியும் ஆர்வம் கொண்டு, ரோமானியர்களும் அவர்களின் பேரரசர்களும் இதைப் பயன்படுத்தினார்கள். ஜோதிட சாஸ்திரத்துக்கான ஓர் ஆராய்ச்சிக்கூடமும், அதனைக் கற்பிக்க ஒரு பள்ளிக்கூடமும் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. கிறிஸ்துவின் பிறப்பையே ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து ஏரோது மன்னனுக்குத் தெரிவித்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பால், நாகரிகம் அடைந்த மேலைநாடு களில் ஜோதிட சாஸ்திரத்தின் பெருமை உணரப்பட்டது என்பது தெரிகிறது.

கிறிஸ்துவுக்குப் பிறகு, கி.பி.400-ல் ஐரோப்பிய நாடுகளில் ஜோதிட சாஸ்திரம் பிரபலமடைந்தது. ஐரோப்பிய மன்னர்களைத் திருப்திப்படுத்த கிறிஸ்துவ தேவாலயங்களைச் சேர்ந்த ஒரு சிலர், ஜோதிட சாஸ்திர உண்மை களைப் பயன்படுத்தினாலும், பெரும்பாலான கிறிஸ்துவ தேவாலய குருமார்கள், 'ஜோதிட நம்பிக்கை கூடாது. அது நம்பத்தக்க சாஸ்திரம் அல்ல!’ என்ற செய்தியைப் பரப்பினர். இதனால், ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் கள் இதை ரகசியமாகப் பயிற்சி செய்தனர்.

கி.பி. 750-ல் கிரேக்க, ரோம் நாட்டு ஜோதிட முறைகளை மாற்றி வடிவமைத்தனர் இஸ்லாமிய அறிஞர்கள். கி.பி. 1250-ல் ஜோதிட சாஸ்திரம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஜோதிடர் 'கிடியெனாட்டி’ என்பவர். ஃபிரெடரிக்-2 என்ற பிரிட்டிஷ் மன்னன், மைக்கேல் ஸ்காட் என்ற ஜோதிடரைக் கலந்தாலோசித்து முடிவெடுத்ததாக பிரிட்டிஷ் சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி.1570-ல் நாஸ்ட்ரடாமஸ் என்பவர், எதிர்காலம் பற்றி ஜோதிட சாஸ்திர அடிப்படையில் எழுதி வைத்த குறிப்புகள் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின. எதிர்காலம் குறித்து அவர் எழுதிய எல்லாச் சம்பவங்களும் பெரும்பாலும் அப்படியே நிகழ்ந்துள்ளது. கி.பி. 1610-ல் கெல்லர், கலீலியோ ஆகிய விஞ்ஞானிகள், வான சாஸ்திரத்தையும் ஜோதிட சாஸ்திரத்தையும் ஆராய்ந்து எழுதி வைத்த குறிப்புகள் பெரிதும் பயன்மிக்கவை.

இப்படி, உலகம் முழுவதிலுமாக ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சியும் வளர்ச்சியும் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இவை யாவற்றுக்கும் ஆதாரமாகவும் அஸ்திவாரமாகவும் விளங்குவது இந்து தர்ம ஜோதிட சாஸ்திரமே என்பது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. ஜோதிடமும் வானசாஸ்திரமும் காலம் காலமாக ஒன்றையன்று சார்ந்தே வளர்ந்து வந்திருக்கின்றன. அதுபற்றிய உண்மைகளை அடுத்துப் பார்ப்போம்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism