
##~## |
'பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். தமிழ் மூதாட்டி ஒளவையும் 'அரவம் ஆடேல்’ என்கிறார். ஜோதிட ரீதியாகவும் இந்த பாம்பு பயம் தலைவிரித்து ஆடுவது உண்டு. அதற்குக் காரணம் ராகு, கேது எனும் சர்ப்பக் கிரகங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராகு- கேதுவின் நிழலால் ஏற்படும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்றால் அனைவரும் அஞ்சுகின்றனர். குரு, சுக்கிரன், சனி உள்ளிட்ட பல பெரிய கோள்களை எல்லாம் ஆட்டிப் படைப்பவர்கள் இந்த ராகுவும், கேதுவும்தான். வலியவனை எளியவனாக்குவதும், நல்லவனைப் பொல்லாதவனாக்குவதும், தரமில்லாதவர்களைத் திறப்படுத்துவதும் இவர்கள் வேலையே. ஆற்றலை- சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் சாயா கிரகங்களான இந்த ராகுவும், கேதுவும்தான்.
இவர்கள் எந்தக் கிரகத்துடன் சேர்கிறார்களோ, எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ, எந்தெந்தக் கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ, அதற்குத் தகுந்தாற்போன்று... அதேநேரம் தங்களுக்கென விதிக்கப்பட்ட பலன்களைத் தவறாமல் தருவதில் இவர்களுக்கு இணை யாரும் இல்லை.
காலப் பிரகாசிகை, சுக்ர நீதி போன்ற பழம்பெரும் நூல்கள் ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் எனக் கூறுகின்றன. ஒருவரின் தாய்வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக ராகு வருகிறார். 'அவங்க அம்மாவழித் தாத்தா மாதிரியே பின்னாடி கையைக் கட்டிக்கிட்டு நடந்து போகுது பார் இந்தப் பேரப்பிள்ளை’ என்று சொல்லும் அளவுக்கு ராகு ஆதிக்கத்தில் பிறந்த பிள்ளைகள் இருப்பார்கள். கேது - தந்தை வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக வருகிறார்.
கேது ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடை, உடை, பாவனையில் அப்பா வழித் தாத்தாவைப் போல நடந்துகொள்வர்.
ராகு- கேது குறித்து முழுமையாக அறிந்துகொண்டால், தோஷத்துக்கு மட்டுமல்ல; பல தருணங்களில் பூரண சந்தோஷத்துக்கும் இந்தப் பாம்பு கிரகங்களே காரணகர்த்தாக்களாகத் திகழ்வது புரியும்.

சுகபோக யோகம் தரும் ராகு!
நாலும் தெரிந்த மனிதரென்று அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கவர்களை நாம் சொல்வது உண்டு. அப்படிப்பட்ட ஏட்டறிவு, எழுத்தறிவு, பகுத்தறிவு, பட்டறிவு என அனைத்து வகை அறிவையும் தருபவர் ராகு. மேலும், உலகிலுள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத் தருபவரும் ராகுபகவானே.
ஒருவர் அரைகுறைப் படிப்பாளியே என்றாலும், அனுபவ அறிவால் மெத்தப் படித்த மேதாவிகளையும் அவர் தோற்கடிக்கிறார் எனில், அதற்குக் காரணமும் ராகுபகவானே! ராகுவின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தால் சமய- சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் சாதுர்யமாகப் பேச வைப்பார். நெருக்கடியான நேரங்களில்கூட சாதித்துவிடுவோம், வெற்றி பெற்றிவிடுவோம் என்ற அசாத்தியமான தன்னம்பிக்கையைத் தருபவரும் ராகுவே!
இலக்கை நிர்ணயித்துவிட்டால் அதை அடைய பல தில்லுமுல்லுகளைச் செய்ய வைப்பவரும் இவர்தான். நிழல் உலக தாதாக்களின் தொடர்பைத் தருபவரும் இவர்தான். நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமல் தனக்கென ஒரு நியாயம், தான் வைத்ததுதான் சட்டம் எனத் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொள்ள வைப்பவரும் இவரே!
துறைமுகங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனங்கள், மதுபான உற்பத்திக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் (கிளப்), நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நவீன விடுதிகள்,
அ முதல் ஃ வரை அனைத்துப் பொருள்களும் கிடைக்கக்கூடிய 24 மணி நேர அங்காடிகள் ஆகியவற்றைத் தனது ஆளுகையில் வைத்திருப்பவர் ராகு. ஷேர், ரேஸ், லாட்டரி மூலம் பிட்சாதிபதியையும் லட்சாதிபதியாக்குவதும் ராகுதான்!
பிரம்ம ரகசியத்தையும் அறியச்செய்யும் கேது!
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்று உயிரும் உடலும் வாழ்வும் நீர்க்குமிழி போன்று நிலையற்றது என்பதைச் சில நிகழ்வுகளால், நிமிடத்தில் உணர வைப்பவர் கேது பகவான். பூர்வ ஜன்மம், நிகழ் ஜன்மம், ஏழேழு ஜன்மம் என எல்லா ஜன்மங்களிலும் செய்த பாவங்களுக்கும் பரிகாரம் தேடித் தருபவர் இவரே!
மகுடம் முதல் மனைவி, பிள்ளைகள் வரை அனைத்தையும் இழந்து சுடலையில் நிறுத்தப்பட்டும் உண்மையையே பேசிய உத்தமன் அரிச்சந்திரனின் உள்ளத்திலும், உதட்டிலும் ஒட்டிக்கொண்டிருந்தவர் இவர்தான். வேதங்கள், மந்திரங்களை ஜபிப்பதுடன், அவற்றின் பிரம்ம ரகசியம் அறிந்து அன்றாட வாழ்வில் அதைப் பின்பற்ற வைப்பவரும் இவர்தான்.
மத போதகர்கள், இறைத் தூதர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் இவரின் ஆதிக்கத்துடன் திகழ்வார்கள். அதேநேரம் லஞ்ச லாவண்யம், சுயநலமில்லாத அரசியல் பிரமுகர்கள், வேதபாட சாலைகள் வைத்து நடத்துபவர்கள் ஆகியோரிடத்திலும் இவரின் ஆதிக்கம் உண்டு.
கடும் விரதமிருந்து வழி நடைப்பயணம் மேற்கொண்டு இறைவனைத் தரிசிக்கும் பக்தர்களின் மனப்பக்குவத்தில் இருப்பவரும் இவர்தான். வெயிலில் தவித்த வாய்க்கு நீர்-மோர் தருபவர்கள், அன்னதானம் செய்பவர்கள், கோயில், கல்விக்கூடங்களைக் கட்டித் தருபவர்களின் தாராள- தயாள குணத்தில் தங்கியிருப்பவரும் இவர்தான். ரத்த தானம் செய்வோர், கண் தானம், உறுப்பு தானம் செய்வோரின் கருணை உள்ளத்தில் வாழ்பவரும் இவர்தான். பணத்தைப் பறித்துப் பரதேசியாக்கி மெய்ஞ்ஞானத்தைத் தருவதும் கேதுவின் செயலாகும்.
சரி... சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் எந்தெந்த நிலைகளில் இருந்தால் தோஷம்? ஜாதகத்தில் இவர்கள் எவ்வாறு அமையப்பெற்றிருந்தால் சந்தோஷம்?!
- சந்தோஷம் தொடரும்...