கே.குமார சிவாச்சாரியார்

'எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’ என்பார்கள் கிராமப்புறங்களில். சின்னதாக இருந்தாலும் சொந்தமாக ஒரு வீடு அமைவது என்பது பூர்வஜென்மத்துப் புண்ணியம்.
நாளுக்கு நாள் எகிறும் வீட்டு வாடகை, எடுத்ததற்கெல்லாம் குற்றங்குறை சொல்லும் வீட்டுக்காரர், தண்ணீர் பிரச்னை, இதுபோன்ற காரணங்களால் அடிக்கடி வீடு மாறும் அவலம்... இவை எல்லாவற்றுக்குமான தீர்வு சொந்தமாக ஒரு வீடு!
ஆனால், விற்கும் விலைவாசியில் சொந்த வீடு சாத்தியம் ஆகுமா என்று பலரும் எண்ணலாம். ஜாதகத்தில் கீழ்க்காணும் நிலைகளில் கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் சாத்தியம்தான்.
யாருக்கெல்லாம் சொந்த வீடு யோகம் உண்டு?
##~## |

லக்னத்தில் புதன், குரு, சுக்கிரன் மூவரும் அமர்ந்து, சனி 7-ல் அமையப் பெற்றால் அழகான வீடு அமையும்.

சந்திரனும் குருவும் உச்சவீடுகளில் இருந்தாலும், சொந்த வீடுகளில் இருந்தாலும் அவற்றில் ஒன்று கேந்திர திரிகோண வீடுகளானால், ஜாதகர் சொந்த இல்லம் கட்டி அரசு ஆதரவோடு வாழ்வார்.

4-ஆம் அதிபதி, பாவக் கிரகங்களின் பார்வை இல்லாமல் ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால், பாட்டன் வழிச் சொத்துக்களில் வீடு கட்டி வாழ்வது உறுதி.

4-ஆம் வீட்டோன், 7-க்குடைய அதிபனின் சேர்க்கை ஏற்பட்டு, சுபக் கிரகங்கள் மூவரின் ஒரே பார்வை நிலைத்தால், ஆயுள் முழுக்கச் சொந்த வீட்டில் வாழும் யோகம் உண்டு.

4-ஆம் வீட்டோன் 5 அல்லது 9-ஆம் வீட்டுக்கு உடையவனுடன் சேர்ந்து, 11-ல் அமர்ந்தால் அழகான வீடு அமையும்.

திரிகோணங்களான 1, 5, 9, கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10-வது இடங்களில் 4-க்கு உடைய அதிபதி சேர்ந்திட, எந்தச் சிக்கலும் இன்றிச் சொந்த வீடு அமைந்துவிடும்.

4-ஆம் வீட்டின் அதிபனின் சாரம் பெற்றுள்ள தசை நடக்கும் போது அல்லது புக்தி நடப்பில் இருக்கும்போது, அந்தக் காலகட்டத்தில் சொந்தமாக மனை வாங்கிவிடலாம்.

4-ஆம் இடம் கடகமாகி, லக்னாதிபதி சந்திரன் பாவருடன் சேர்ந்திருக்க, செவ்வாய் பார்த்தால், வீடு கட்ட தடைகள் ஏற்படலாம்.
சிலருக்கு வீடு வாங்கத் தேவையான வசதியும் பணமும் இருந்தாலும், எதிர்பாராத சில தடைகளால் சொந்த வீடு என்பது வெறும் கனவாகவே இருந்துகொண்டிருக்கும். இத்தகைய அன்பர்களுக்கு, வாஸ்து க்ரஹ வஸ்ய பூஜை மிகுந்த பலன் தரும்.
வாஸ்து பகவான் ஆண்டுக்கு 8 முறை கண்விழிப்பார். அதில் 6 முறை வாஸ்து வசிய பூஜை செய்யலாம்.
வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்கள்:

சித்திரை- 10. காலை 8.54 முதல் 9:30 மணி வரை.
வைகாசி- 21. காலை 10:6 முதல் 10:42 மணி வரை.
ஆடி - 11. காலை 7:38 முதல் 8:14 மணி வரை.
ஆவணி - 6. பகல் 3:18 முதல் 3.54 மணி வரை.
ஐப்பசி - 11. காலை 7:42 முதல் 8:18 மணி வரை.
கார்த்திகை- 8. காலை 11:9 முதல் 11:45 மணி வரை.
தை- 12. காலை 10:50 முதல் 11:26 மணி வரை.
மாசி- 22. காலை 10:12 முதல் 10:48 மணி வரை.
இந்த நாட்களில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து இந்த பூஜையைச் செய்யலாம்.
முதலில் மஞ்சளால் விநாயகர் பிடித்து வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு, கை நிறைய மலர்களை எடுத்துக்கொண்டு, அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்து, 'மம ஸ்திர மங்கள கிருஹ யோக அவாப்த்யர்த்தம் வாஸ்து வசீகரண பூஜாம் க்ருத்வா’ என்று கூறுக. பின்னர்,
கஜானனம் சந்த்ர ஸமானவர்ணம்
ஸ்வதந்தபாசாங்குச லட்டுகானி
ஹஸ்தைர்ததானம்
கமலாஸனஸ்த்தம் விக்னேஸ்வரம்
நௌமி ஸதா ப்ரஸன்னம்’
என்ற ஸ்லோகம் சொல்லித் துதித்து, 16 நாமங்கள் சொல்லி ஸ்ரீகணபதியை வழிபட்டு, அவருக்கு நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி செய்து பூஜிக்கவேண்டும்.
பிள்ளையாரை வழிபட்ட பிறகு, ஸ்ரீவாஸ்து பகவான் படத்துக்கு சந்தன- குங்குமப் பொட்டு வைத்து, பூ சாற்ற வேண்டும். பின்னர், ஐந்து செங்கற்களை எடுத்துக்கொண்டு அவற்றை பால், தயிர் விட்டுக் கழுவி, படத்தில் உள்ளதுபோன்று செங்கற்கள் ஒவ்வொன்றிலும் மூன்று இடங்களில் மஞ்சள்- குங்குமம் வைத்து, பூ சமர்ப்பிக்கவேண்டும். பின்னர், கீழ்க்காணும் வாஸ்து காயத்ரீயை 5 முறை சொல்லி, தன்னையே சுற்றிக்கொண்டு மலர் போடவேண்டும்.
ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே
யோகராஜாய தீமஹி
தந்நோ வாஸ்து: ப்ரசோதயாத்
என்று கூறி, செங்கற்களையே வாஸ்து பகவானாக நினைத்து வணங்க வேண்டும். அடுத்ததாக, கீழ்க்காணும் வாஸ்து பகவானுக்கு உரிய விசேஷ நாமங்களை அர்ச்சனையாகச் செய்யலாம்.

ஓம் யோக தேவாய நம:
ஓம் பூமிகாரகாய நம:
ஓம் சக்தி தராய நம:
ஓம் சிவபுத்ராய நம:
ஓம் கிரஹ லக்ஷ்மி அனுக்ரஹாய நம:
ஓம் கிருஷ்ணாங்காய நம:
ஓம் சீக்ர வரப்ரதாய நம:
ஓம் சர்வகுண சம்பன்னாய நம:
ஓம் தோஷ நிவர்தகாய நம:
ஓம் பாக்ய விருத்தி கராய நம:
ஓம் விஷ்ணு பக்தாய நம: ஓம் வாஸ்து புருஷாய நம:
பிறகு தூப- தீப நிவேதனம், கற்பூர ஆரத்தியை, வாஸ்து பகவான் படத்துக்கும், ஐந்து கற்களுக்கும் ஆரத்தி செய்து முடித்து, மணைப் பலகை ஒன்றில் அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தை 32 முறை சொல்லி, தியானிக்க வேண்டும். பிறகு 5 பெண்களுக்கு தாம்பூலம் பூ வைத்துக் கொடுக்கவும்.
ஓம் வாஸ்து புருஷோ மகாகாயோ
க்ருஷ்ணாங்கோ ரக்தலோசன:
ரக்தாநநோ த்விபாலஹுச்ச
பப்ருவாஹ: பராங்கக:
ஸயாநம் நீலதிக் பாத்மை பாந்யோ
ந்யஸ்த மஸ்தக: ஸ்ரீவாஸ்தவே நம:
வாஸ்து நாட்களில் 32 முறை சொல்லும் இந்த மந்திரத்தை தினமும் 3 முறை சொல்லி வழிபடலாம். அத்துடன் அங்காரகனை வழிபடுவதும் விசேஷம்.
'ஓம் ஸ்யோனா ப்ருதிவி பவான்ருக்ஷரா நிவேசனீயச்சான சர்மசப்ரத:
- இந்த மந்திரத்தை 12 முறை சொல்லி, விழுந்து வணங்க வேண்டும்.
வாஸ்து வஸ்ய பூஜையால் கிடைக்கும் பலன்களில் சில:
பணம் இருந்தும் மனை வாங்குவதில் உண்டாகும் தடைகள் விலகும். மனை வாங்கிய பிறகு வீடுகட்ட முடியாமைக்கான தடைகள் அகலும். வீடு கட்டினாலும் குடிபுக முடியாமல் இருக்கும் சட்ட- சாஸ்திர தடைகள் அகலும் (இதற்கு வாஸ்து வசிய ஹோம முறை சேரும்).
வீடு கட்டிக் குடியேறியதும் வருகின்ற பூமி தொடர்பான வழக்குகள், வியாஜ்ஜியங்கள், வில்லங்கங்கள் பறந்தோடும். நம் பூமியில் வைக்கப்படுகிற ஏவல் யந்திரங்கள் சூன்ய முறைகள் செயல் இழந்துபோகும்.
- வழிபடுவோம்...