Published:Updated:

வாழ்வே வரம் - 7

இனி எல்லாம் சந்தோஷம்!ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

வாழ்வே வரம் - 7

இனி எல்லாம் சந்தோஷம்!ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

ருவரது குலம் செழித்தோங்கி திகழவேண்டும் எனில், அவருக்கு  கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும். ஆமாம், குலம் செழிக்கவைக்கும் கிரக மூர்த்தி கேதுபகவான். கேதுவை ஞானகாரகன் எனப் போற்றுகிறது ஜோதிடம்.

ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகனான கேது பகவான், ஆன்மகாரகனான சூரியனுடன் இணைந்தால், அந்த ஜாதகரின் வாழ்வை பிரகாசமாக விளங்கவைப்பார். அவரே வலுவான குருவுடன் இணைந்து காணப்பட்டால், விழிப்பு உணர்வைப் பெற்றுத் தருவார் என்கின்றன ஜோதிடம் குறித்த ஞானநூல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேது நிழல் கிரகம்தான். எனினும், நாம் எதிர்கொள்ள வேண்டிய துயரங்களை எல்லாம் வலுவிழக்கச் செய்து, வளமான வாழ்வை நிஜமாக்குபவர்.

வாழ்வே வரம் - 7

கேது, காலன், எண்ணுபவன், மஹா கேது, ருத்ர பிரியர், தூம்ர கேது, விவர்ணகன்,  நறுமணம் ஏற்பவர், வைக்கோல் புகையின் வண்ணம் கொண்டவர் என்றெல்லாம் கேதுவைச் சிறப்பிக்கும் ஞானநூல்கள், கேது பகவானை வழிபடுவதால் சகல பீடைகளும் விலகும்; செல்வம், தான்யம், பசுக்கள் ஆகிய போகங்கள் பெருகும் என்றும் அறிவுறுத்துகின்றன (கேது: கால: கலயிதா தூம்ரகேதுர்விவர்ணக:...).

சித்தர்களின் திருவருள் கைகூடும்...

லக்னம் அல்லது ராசியில் கேது பகவான் இருந்தால், அந்த ஜாதகருக்கான முன்னேற்றங்களில் சிற்சில தடைகள் உண்டு. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்று அவ்வப்போது கவலையும், ஏக்கமும் எழும். எனினும் சித்தர்கள், மகான்கள் ஆகியோரின் சந்திப்பு, அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும் பாக்கியம் உண்டு.  மேலும் அனுபவ அறிவால் சாதிக்கும் அன்பர்களாகத் திகழ்வார்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு இருக்கும். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, புனிதத் தலங்களைத் தரிசிப்பது ஆகியவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

சத்தியத்தால் சாதிக்கச் செய்யும் கேது...

இரண்டில் கேது அமையப்பெற்ற ஜாதகர்கள் உண்மையையே பேசுவார்கள். சத்தியமே நித்தியம் என்ற கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பல பிரச்னைகளையும் இவர்கள் சந்திக்க நேரிடும். எனினும், மனச்சாட்சிப்படி நடந்துகொண்டதற்காக பெருமிதம் அடையும் பண்பாளர்களாக விளங்குவார்கள். பெற்றோர் விருப்பப்படி ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தாலும், சுய விருப்பத்துக்கு ஏற்ப ஒரு பிரிவையும் படித்து, அதன் மூலமாக அதீத முன்னேற்றம் காணும் யோகம் உண்டு இவர்களுக்கு.

மூன்றில் கேது முடிசூட வைக்கும்!

3-ஆம் இட கேதுவைப் பற்றி இப்படியரு சொல்வழக்கு உண்டு. மூன்றில் கேது உள்ள ஜாதகர்கள், ஆளுமைத் திறனில் கெட்டிக்காரர்களாக விளங்குவர். நிர்வாகத் திறன், மற்றவர்களை மிகச்சரியாக வேலைவாங்குதல், செயல்களைத் திறம்பட முடித்தல் ஆகியன இவர்களது பிளஸ் பாயிண்டுகள். நீண்ட ஆயுளும், செல்வச்சேர்க்கையும் உண்டு. சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் இவர்களுக்கு நன்மைகளே செய்ய, அதை அனுபவிக்கும் பாக்கியசாலிகளாகத் திகழ்வார்கள் இந்த ஜாதகக்காரர்கள்.

வாழ்வே வரம் - 7

மருத்துவராகும் யோகம்...

ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது நடத்தை ஸ்தானம் ஆகும். ஒருவரது நடத்தையை- செயல்பாடுகளை விவரிக்கும் இடம் இது. இதில் கேது பகவான் இருக்கும் ஜாதகர்கள் சில தருணங்களில் சித்தம் போக்கு சிவம் போக்காகக் காணப்படுவார்கள். இந்த அன்பர்களில் சிலருக்கு மருத்துவராகும் யோகம் கிட்டும். இவர்களில் சிலர் படிப்பின் நிமித்தம் தாயாரைப் பிரிய நேரிடும். கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, உருவாக்குதல் ஆகியவற்றில் திறம்பட சாதிப்பார்கள். எதையும் மிகைப்படுத்தாமல், யதார்த்தவாதிகளாகத் திகழ்வார்கள்.  

முக்காலத்தையும் அறியும் ஆற்றல்!

ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது புத்தி ஸ்தானமாகும். இதில் ஞானகாரகனான கேது பகவான் இருந்தால், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் தொடர்பும், அவர்களால் முன்னேற்றமும் உண்டு. சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை எளிதில் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். பூர்வீக இடத்தை விட்டு, வாழ வந்த இடத்தில் மிகச் சிறப்பான உயர்வை அடைவார்கள். கேது பகவான் 5-ல் இருக்கப் பிறந்த ஜாதகர்களில் சிலருக்கு முக்காலமும் உணரும் வல்லமையும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

எதிரிகள் இல்லாத வாழ்வு... கடன் இல்லாத செல்வச் செழிப்பு...

ஆறாம் இடத்தில் கேது இருக்க பிறந்த அன்பர்களுக்கு எதிரிகள் எவரும் இல்லாத நிலை உருவாகும். அப்படியே பகைவர்கள் உருவானாலும், வெகு சீக்கிரம் இவர்களுக்கு நண்பர்களாகிவிடுவார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் வெற்றிதான்; தொட்டது துலங்கும் பாக்கியம் உண்டு. கடன் இல்லாத வாழ்க்கை இவர்களுக்கு வரப்பிரசாதம். இவர்களில் சிலருக்கு வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்கும் யோகமும் கிடைக்கும். ஷேர், லாட்டரி போன்ற விஷயங்களால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இவர்களுக்கு உண்டு.

- சந்தோஷம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism