Published:Updated:

வாழ்வே வரம்-8

இனி எல்லாம் சந்தோஷம்!'ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

வாழ்வே வரம்-8

இனி எல்லாம் சந்தோஷம்!'ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

குலம் செழிக்க அருள்புரியும் சாயா கிரகமான கேது பகவான் லக்னம் துவங்கி 6-ஆம் இடம் வரை... ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் போது என்னென்ன பலன்களைத் தருவார் என்று பார்த்தோம். இனி, 7 முதல் 12-வது இடம் வரை, ஒவ்வொன்றிலும் கேது பகவான் அனுக்கிரகத்தால் விளையும் பலாபலன்களை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

சுபர் பார்க்க சுபம் தருவார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும். இதில் கேது பகவான் இருப்பது, திருமணத் தடையை ஏற்படுத்தும் என்பார்கள். அதே நேரம், 7-ல் இருக்கும் கேது பகவான் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெற்றார் எனில், அற்புதமான வாழ்க்கைத் துணை அமையும். அதாவது பக்தி, ஒழுக்கம், நன்னெறிகள், நுண்ணறிவு மிகுந்த வாழ்க்கைத் துணை அமையும் என்று ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

வாழ்வே வரம்-8

ஆக, 'ஏழில் கேது’ என்றதுமே 'தோஷம்’ என்று பயம்கொள்ளத் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்த்து வீண் கவலையால் வாடாமல், மற்ற கிரகங்களின் நிலைகளையும் ஆராய்ந்து தெளிவது அவசியம்.

காடு- மலை கடக்கவும் அஞ்சாத நெஞ்சத்தினர்...

எட்டாவது இடத்தையும் மாங்கல்யத்துக்கு உரியதாகவே சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எட்டில் கேது இருக்கப் பிறந்த ஜாதகர்கள் பெரும்பாலும் படபடப்பாகவும், ஒருவித பதற்றத்துடனும் காணப்படுவார்கள். இவர்கள் சிறு வயதில் நிறைய ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிட்டதால், மத்திம வயதில் எவரையும் எளிதில் நம்பாதவர்களாகத் திகழ்வார்கள்.

இவர்களை பிரயாணப் பிரியர்கள் எனலாம். புண்ணிய ஸ்தலங்களைத் தேடிச் சென்று தரிசிப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்படியான ஸ்தலங்கள் மலைகள் சூழவோ, வனத்தின் மத்தியிலோ இருந்தாலும், மலைக்காமல் சென்று தரிசித்துத் திரும்புவார்கள். இன்னும் சொல்லப்போனால், காடு-மலைகளைக் கடக்கவும் அஞ்சாத நெஞ்சத்தினர் இவர்கள். அதேபோன்று, கைம்மாறு கருதாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் இவர்களை மிஞ்ச முடியாது.

வாழ்வே வரம்-8

தகப்பன் சுவாமிகள்!

ஒன்பதில் கேது பகவான் இருக்கப் பிறந்த ஜாதகர்கள், தந்தைக்கே உபதேசம் செய்யும் சமர்த்தர்களாக விளங்கு வார்கள். தந்தையின் சொத்துக்களை எதிர்பார்க்காமல், சுயமாக முன்னேற விரும்புவார்கள். ஆன்மிக நூல்கள் வெளியிட உதவுவதிலும், பழைமையான ஓலைச்சுவடி களைப் புதுப்பிக்க அல்லது நூலாக்கம் செய்ய உதவி செய்வதிலும் மிகுதியான ஆர்வம் இருக்கும். அதேபோன்று, சித்த மருத்துவத்திலும் விருப்பம் உண்டு. புகழ்பெற்ற சித்த மருத்துவர்களில் பெரும்பாலானோர் 9-ல் கேது இருக்கப் பிறந்தவர்களே!

ஒன்பதில் கேது இருக்கப் பிறந்த அன்பர் களை, 'தனம் தங்காதவர்’ எனலாம். 'சுரக்கச் சுரக்க இறைக்கும் கிணறு’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்களே, அதுபோன்று இவர்கள் தங்களிடம் பொன்- பொருள் எவ்வளவு சேர்ந்தாலும் பிறருக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

பத்தில் கேது... பல விஷயங்கள் அறிந்தவன்!

10-ல் கேது இருக்கப் பிறந்த அன்பர்கள் தகவல் களஞ்சியமாக, பல்வேறு விஷயங் களை அறிந்தவர்களாகத் திகழ்வார்கள். தர்ம காரியங்களில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும். அன்னதானம், கோயில் திருப்பணி களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவுதல், உழவாரப் பணி செய்பவர்களுக்கு உதவி செய்வது, இலவச கண் சிகிச்சை முகாம் முதலான பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஆகியன இவர்களுக்கே உரித்தான ஸ்பெஷாலிட்டி! சுருங்கச் சொன்னால், விழா எடுப்பதில் அதீத விருப்பம் கொண்டவர்கள்.

பத்தாவது இடம் தொழில், உத்தியோக ஸ்தானம் ஆயிற்றே? 10-ல் கேது இருக்கப் பிறந்தவர்கள் ஓரிடத்தில் தொடர்ந்து வேலை பார்க்க இயலாத நிலை உருவாகும். ஆனாலும், சொந்தத் தொழிலில் புகழ்பெறும் வாய்ப்பு உண்டு. கன்சல்டன்ஸி, மனநல மருத்துவர்கள், யோகா, சித்தா, மெடிட்டேஷன் பயிற்சிகள் அளிப்பது... என இவர்களது புரபஷனல் அமையும்.

தொட்டது துலங்கும்!

11-வது இடம் லாபஸ்தானம். இதில் கேது பகவான் இருப்பது விசேஷம்! இப்படியான ஜாதக அமைப்புடன் பிறந்தவர்கள், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார் கள். அவர்கள் தொட்டது துலங்கும். வீடு, மனை, சொத்து எனக் குறைவில்லாத வாழ்க்கை அமையும். மூத்த சகோதரர்களால் இவர்களுக்கு நன்மை உண்டு.

வருங்காலத்தை உணரும் வல்லமை!

12-வது இடத்தை அயன- சயன ஸ்தானம் என்பார்கள். இந்த இடத்தில் ஞான காரகனான கேது பகவான் இருப்பது, மோட்சம் கைகூடச் செய்யும். இப்படியான ஜாதகர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது கருத்து. இவர்களுக்கு வருங்காலத்தை உணரும் சக்தி வாய்க்கும். அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.

'குருவி போலக் கொறித்து... கோழி போலத் தூங்கிக்கிட்டு’ என்பார்களே, அதுபோன்று 12-ல் கேது இருக்கப் பிறந்த ஜாதகர்களுக்குச் சாப்பாடும் தூக்கமும் குறைவுதான். ஆனாலும், வேலைகள் மிகுதியாக இருக்கும். சளைக்காத உழைப்பால் சாதிப்பார்கள்.

ஜாதகத்தில் கேது பகவான் இருக்கும் நிலைகளுக்கு ஏற்ப அவர் தரும் பலா பலன் களை விரிவாகப் பார்த்தோம். கேதுபகவானின் திருவருளைப் பெற செவ்வாய்க் கிழமைகளில், ஸ்ரீகேது பகவான் காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. விநாயகர் வழிபாடும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து, மோதகம் படைத்து, விநாயகர் அகவல் பாராயணம் செய்து, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், கேது பகவான் மகிழ்ச்சி அடைவார்.  காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசித்ரகுப்தரைத் தரிசித்து வழிபட்டு வருவதும் கேதுபகவானுக்கு ப்ரீத்தியானது.

ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்வது, கதாகாலட்சேபம், சமயச் சொற்பொழிவு முதலான ஆன்மிக காரியங்களுக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கு உதவி செய்வதாலும் கேதுபகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

- சந்தோஷம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism