ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்ஜோதிடம்

##~##

ஜூலை 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை

வீடு... விரிவடையும்!  

ராசி பலன்கள்

மேஷம்: தன்மானம் அதிகமுள்ளவர்களே! சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், உற்சாகமாக செயல்படுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டுவீர்கள். குரு 3-ல் தொடர்வதால், எளிதாக முடிய வேண்டிய சில விஷயங்களை இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி நண்பகல் 12.30 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 7-ல் ராகுவும், சனியும் நிற்பதால், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள்.

ஆடை... ஆபரணம்... புது வாகனம்!

ராசி பலன்கள்

ரிஷபம்: எந்நாளும் புதிதாக சிந்திப்பவர்களே! சூரியனும், செவ்வாயும் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சுயமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வாகனம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். 20-ம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் 22-ம் தேதி மாலை 3 மணி வரை வீண் கவலைகள் வந்து செல்லும். கேது 12-ல் மறைந்து கிடப்பதால், அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். வியாபாரத்தில் புது இடத் துக்கு கடையை மாற்றுவீர்கள். கமிஷன், ஷேர் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.      

காரியத்தடை விலகும்!

ராசி பலன்கள்

மிதுனம்: நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் விரைவில் முடியும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். சனியும், ராகுவும் 5-ல் நிற்பதால், சில சமயம் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சூரியனும், செவ்வாயும் 2-ல் நிற்பதால், யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். 22-ம் தேதி மாலை 3 மணி முதல் 24-ம் தேதி மாலை 6 மணி வரை எதிலும் மிகவும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் 'தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருப்பது நல்லது.

சுக்கிரன் சாதகம்... பணவரவு திருப்திகரம்!

ராசி பலன்கள்

கடகம்: அறிவியல் சிந்தனை அதிகமுள்ளவர்களே! ராசிக்குள் சூரியனும், செவ்வாயும் நிற்பதால், உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் ஆரோக்கியமான விவாதங்கள் அடிக்கடி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 26-ம் தேதி வரை மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை திறமையாக சமாளிப்பீர்கள். அதேசமயம், மற்றவர்களை நம்பி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், உயரதிகாரி உங்களை குறை கூறத்தான் செய்வார்.

புதிய பாதையில் வெற்றிப் பயணம்!

ராசி பலன்கள்

சிம்மம்: ராஜதந்திரத்துடன் நடந்து கொள்பவர்களே! குருவும், புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நல்லவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சூரியனும், செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். 27, 28 ஆகிய தேதிகளில் யாரையும், எதற்காகவும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.  

தொட்ட காரியம் துலங்கும்!  

ராசி பலன்கள்

கன்னி: கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களே! சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குரு 10-ல் தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிக்கலாம். 29, 30 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். சனியும், ராகுவும் 2-ல் தொடர்வதால், முன்கோபத்துடன் பேசி சொற்குற்றம், பொருட்குற்றத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.  

சொந்தங்கள் தேடி வரும்!

ராசி பலன்கள்

துலாம்: எல்லோரையும் எளிதில் நம்புபவர்களே! முக்கிய கிரகங்கள் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. விலகி இருந்த உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ராசிக்குள்ளேயே சனியும், ராகுவும் தொடர்வதால்... உடல் நலக் கோளாறுகள் வந்து போகும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. வியாபாரம் தழைத்தோங்கும். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

உற்சாகம் தரும் உடன்பிறப்புகள்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: நாட்டுப்பற்று, மொழிப்பற்று அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமானாலும், சுக்கிரனுடன் நிற்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கேது வலுவாக இருப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், பணப்பற்றாக்குறை ஏற்படும். குரு 8-ல் மறைந்திருப்பதால், மறைமுக விமர்சனம், வீண் பகை வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதி கரிக்கும். உத்யோகத்தில் நீங்கள் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

அயல்நாட்டில் இருந்து அனுகூலம்!

ராசி பலன்கள்

தனுசு: பயணப் பிரியர்களே! குருவும், புதனும் 7-ம் வீட்டில் நீடிப்பதால், உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், தோழிகளால் அனுகூலம் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். 8-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால்... முன்கோபம், உடல் உபாதை வந்து நீங்கும். பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

எதிர்பார்த்த பணவரவு... எதிர்பாராத செலவினங்கள்!

ராசி பலன்கள்

மகரம்: பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் அதிகமாக நேசிப்பவர்களே! சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோருடைய பாராட்டையும் பெறும். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேர்ந்தாலும், எதிர்பாராத விதமாக செலவினங்களும் இருக்கும். சூரியனும், செவ்வாயும் 7-ல் நிற்பதால்... உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். உறவினர் வகையில் நிறைய செலவுகள் வரக்கூடும். பூர்விக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உறவினர், தோழிகளில் சிலர் அடிக்கடி உதவி கேட்டு தொந்தரவு செய்வார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள்.

பகை விலகி... பாசம் பொங்கும்!

ராசி பலன்கள்

கும்பம்: மகிழ்ச்சி, துக்கம் எதையும் அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ளாதவர்களே! சூரியனும், செவ்வாயும் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வருமானம் உயரும். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். 18-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் வீட்டில் நுழைவதால், தோற்றப் பொலிவு கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்களுக்கு சிறந்த தொழில் யுக்திகளைக் கற்றுத்தருவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

பொறுமை தேவைப்படும் நேரம்!

ராசி பலன்கள்

மீனம்: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்களே! புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், ஓரளவு நிம்மதி கிட்டும். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். என்றாலும், 18-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் நுழைவதால்... சூரியனும், செவ்வாயும் 5-ம் வீட்டில் நுழைவதால், மன இறுக்கம், உடல் உபாதை, வாகனப் பழுது வந்து செல்லும். வாழ்க்கைத் துணைவரிடம் மிகவும் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள், ஏமாற்றங்கள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.