Published:Updated:

வாழ்வே வரம் - 9

இனி எல்லாம் சந்தோஷம்!'ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

வாழ்வே வரம் - 9
##~##

சின்னதாய் வீடு கட்டி, அங்கே கடன் பிரச்னையே இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்பவர்களும் உண்டு. மாளிகை போல வீடு கட்டி, கடன் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளோடு போராடுபவர்களும் உண்டு. ஆக, கடன் பிரச்னைக்கு ஏழை- பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வெல்லாம் கிடையவே கிடையாது. ஒருமுறை கடன் பட்டால், தொட்டுத் தொடரும் பாரம்பரியமாய் ஒட்டிக் கொண்டுவிடும். அதனால்தான், கடன் இல்லாத வாழ்க்கைக்காக எல்லோருமே ஆசைப்படுகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நமக்குத் தெரிந்த சிலரேகூட வாழ்க்கை முழுக்கக் கடனோடு கட்டிப் புரளுவதைப் பார்த்து, அவர்கள் மீது அடிக்கடி பரிதாபப் பார்வையை வீசியிருப்போம். அவர்களது வாழ்க்கை இப்படிப் போராட்டமாக இருக்கக் காரணம், அவர்களின் ஜாதகம் அவர்களுக்குச் சாதகமாக இல்லாமல் போனதே!

ஒருவர் தனது சக்திக்கு மீறிச் செலவு செய்யும்போதும், அடுத்தவர்களிடம் கடனாக பணமும் பொருளும் வாங்கும்போதும் கடனாளி ஆகிறார். இது, அவராக உருவாக்கிக்கொண்ட கடன். இன்னொரு கடனும் உண்டு. அது, பூர்வ ஜென்ம கடன்! இது, சம்பந்தப்பட்டவரின் மறு ஜென்மம்வரை தொடரக்கூடியது.

இது எப்படிச் சாத்தியம்? கடன் கொடுத்தவன் மறுபிறவியிலும் அதை வந்து கேட்பானா என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.

வாழ்வே வரம் - 9

ஜென்ம கடன் என்பது, நாம் நிறைவேற்றியிருக்க வேண்டிய கடமையாகும். இன்னும் விரிவாகச் சொன்னால், எல்லா பெற்றோருமே தங்கள் பிள்ளைகள்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள். இவர்களில் இன்னும் சிலர் அதீத அன்பாக- அக்கறையாக, தங்கள் பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்கள். பிள்ளைகளின் கண்ணில் தூசி விழுந்து கண் கலங்கினாலும்கூடத் துடிதுடித்துப் போவார்கள். இப்படிப்பட்ட பெற்றோரை, அவர்களது முதிய பருவத்தில் போஷிக்காமல், கண்டுகொள்ளாமல் புறக்கணித்தால், அது ஜென்ம கடனாகிவிடும். இந்தக் கடனை மறுபிறவியிலாவது அடைத்தாக வேண்டும்.

ஆக, ஒருவரிடம் பணம், பொருள் வாங்கி, அதை திருப்பித் தராமல்விடுவதுதான் கடன் என்று கிடையாது. அன்பு, பாசம், நம்பிக்கை - இவற்றில் எதை நாம் பிறரிடம் இருந்து பெற்றாலும், அதை அவர்களுக்குத் தராத பட்சத்தில், அதுவும் நம் கடன் பட்டியலில் சேர்ந்துவிடும்.

இன்னும் சிலர் தங்களின் நெருங்கிய நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பார்கள். இது, மிகப்பெரிய கடன்!

ஒருமுறை, அரசியல்வாதி ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். வந்தவரின் முகத்தில் சோகம் நிறைய அப்பியிருந்தது. காரணம் கேட்டபோது, தனது வளர்ப்புப் பிள்ளையை ஒரு கும்பல் கடத்திச் சென்று மிரட்டி, தன்னிடம் சில கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாகச் சொன்னார்.

ஏதாவது ஒரு வகையில் கடன் பட்டிருந்தால்தான் இப்படி நிகழும் என்பதால், அவர் செய்து வரும் இன்னபிற தொழில்கள் குறித்துக் கேட்டேன். சட்டத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் புறம்பான வகையில் அவர் பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார்.

''இந்த வகையில் நீங்கள் பட்ட கடன்தான், உங்கள் தத்துப் பிள்ளை கடத்தப்பட்டதற்கும், அதன் மூலம் உங்களுக்குப் பெருமளவு பண இழப்பு ஏற்பட்டதற்கும் காரணம்'' என்று அவருக்கு விளக்கம் சொன்னேன். கூடவே, ''யாரையும் எந்த வகையிலும் ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் உங்களின் வருங்கால இழப்புக்கான கடன் தொகை கூடிக்கொண்டே போகும்'' என்று எச்சரித்ததோடு, அந்த பாவக் கடனுக்காக சில பரிகாரங்களையும் சொல்லி அனுப்பினேன்.

வாழ்வே வரம் - 9

''இனி, அப்படியரு தவற்றைச் செய்யமாட்டேன். முன்பு செய்த அந்தத் தவற்றுக்காக இப்போது வருந்துகிறேன்'' என்று சொன்னவர், தெளிந்த முகத்தோடு விடைபெற்றுச் சென்றார்.

ஆக, வினைப்பயன் எதுவாக இருந்தாலும், அதை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். குறிப்பாக, இறைப் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எந்த மதமாக, ஜாதியாக இருந்தாலும், அவர்களை ஏமாற்றக்கூடாது. அது, மிகப் பெரிய பாவமாகிவிடும்.

பொதுவாக, கடன் ஒருவரது வாழ்க்கையில் வருவதும் போவதுமாக இருக்கும் என்றாலும், சிலர் ஆயுசு முழுக்கக் கடனாளியாகவே இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். அவர்கள் எந்த வியாபாரம் செய்தாலும், கூடிய விரைவில் இழுத்து மூடிவிடுவார்கள். வியாபாரம்தான் என்றில்லை; வீடு அல்லது மனை வாங்கப் போன இடத்தில், தாய்ப் பத்திரத்தை சரியாக கவனிக்காமல் விட்டு, வில்லங்கத்தில் சிக்கி, பெரும் பண இழப்பைச் சந்திப்பார்கள். இதில் மட்டும்தான் என்றில்லை; 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 15 ரூபாய் கொடுத்து வாங்கி வருவார்கள். அடுத்தவர்கள் செய்கிற மூளைச்சலவையில் எளிதில் மயங்கி, பண இழப்பைச் சந்திப்பவர்களில் இவர்கள்தான் முதலிடம்!

இப்படி, எங்கே தொட்டாலும் பண இழப்பை ஏற்படுத்துகிற நஷ்ட ஜாதக அமைப்பைக் கண்டறிந்து, உரிய பரிகாரங்கள் செய்துவந்தால், தொடர் பண இழப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் 2-ஆம் வீட்டுக்குரிய கிரகமான தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4-ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ, இந்த ஜாதக அமைப்புடன் பிறந்த எவர் ஒருவரின் ஜாதகமும் நஷ்ட ஜாதகம்தான்.

லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுவிழந்து, ஆனால் 6-க்கு உரியவன் வலுவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.

லக்னாதிபதியுடன் 6-க்கு உரியவன் இருந்தாலும், அந்த ஜாதகர் கடனாளியாகத்தான் இருப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் 6-ஆம் இடம் கடன், சத்ரு, நோய், விபத்து, வழக்கு ஸ்தானத்தைக் குறிக்கும். ஒருவர் கடனாளியாகத்தான் இருப்பாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள, இதைத் தெளிவாக அறிய வேண்டும்.

வாழ்வே வரம் - 9

நஷ்ட ஜாதகம் அமைப்பைக் கொண்டவர் எந்தெந்த வகையில் கடனாளி ஆவார் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6-க்கு உரியவனுடன் சூரியனோ, பிதுர் ஸ்தானாதிபதியோ சேர்ந்திருந்தால், தந்தையால் கடன் உண்டாகும். அதாவது, 'எங்க அப்பாவுக்கு திடீர்னு கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சு. சொத்து முழுவதையும் வீட்டையும் விற்று, வைத்தியம் பார்த்தே நாங்கள் கடனாளி ஆகிவிட்டோம்’ என்று யாரோ எப்போதோ நம்மிடம் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா... அப்படியரு நிலை ஏற்பட, இந்த ஜாதக அமைப்புதான் காரணம்.

6-க்கு உரியவனுடன் சந்திரனோ, 4-ஆம் வீட்டுக்கு உரியவனோ சேர்ந்திருந்தால், தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் கடன் ஏற்படும்.

6-க்கு உரியவனுடன் செவ்வாயோ சகோதர ஸ்தானாதிபதியோ சேர்ந்திருந்தால்- உடன் பிறந்தவர்களாலும், சுக்கிரனோ 7-க்கு உரிய கிரகமோ சேர்ந்திருந்தால்- மனைவியாலும், குரு 5-க்கு உரியவனுடன் சேர்ந்திருந்தால்- பிள்ளைகளாலும், 5 அல்லது 12-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்திருந்தால்- முன்ஜென்மக் கடனும் ஒருவருக்கு ஏற்படும்.

இதேபோல், 6-க்கு உரியவனுடன் சனி சேர்ந்திருந்தால் வேற்று மொழி, மதத்தினராலும், ராகு சேர்ந்திருந்தால், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் நண்பர்களாலும், கேது சேர்ந்திருந்தால் அரசியல் கட்சி, இயக்கங்கள், அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் ஒருவருக்குக் கடன் ஏற்படும்.

இப்படி, கடனே வாழ்க்கையாகிப் போன நஷ்ட ஜாதகக்காரர்கள் சில பரிகாரங்கள் செய்தால், இந்த அவஸ்தையான வாழ்வில் இருந்து விடுதலை பெறலாம். அவர்கள் செய்யவேண்டியது இதுதான்...

வாழ்வே வரம் - 9

 தானம்தான் மிகச் சிறந்த பரிகாரம். அது, உணவாகவோ, ஆடையாகவோ அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆசிரியராக இருப்பவர்கள் மற்றவர்களுக்குக் கல்வியை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ தருவது சிறந்த பரிகாரமாகும்.

வாழ்வே வரம் - 9

 பரிகார கோயில் என்று எடுத்துக்கொண்டால், சம்ஹார திருத்தலங்களுக்கு சென்று வழிபடலாம். குறிப்பாக, சஷ்டி தினங்களில்... 'திருச்சீரலைவாய்’ எனப் புராணங்கள் போற்றும் திருச்செந்தூர் திருத் தலத்துக்குச் சென்று ஸ்ரீமுருகப்பெருமானை வணங்கி வழிபடுவது நல்லது. முடிந்தால், வருடத்துக்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று, கந்தவேளை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

வாழ்வே வரம் - 9

 நம்மால் முடியும்போதெல்லாம் பசுவுக்கு உணவாக பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி ஆகியவற்றைத் தரலாம்.

- இந்தப் பரிகாரங்களைச் செய்தால், கடன் இல்லாத வாழ்க்கை சாத்தியம்தான்!

- சந்தோஷம் பெருகும்...

தொகுப்பு: எம்.ஜெயமுருகானந்தம்