Published:Updated:

இனி எல்லாம் சந்தோஷம்!

வாழ்வே வரம்-10 ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

இனி எல்லாம் சந்தோஷம்!

வாழ்வே வரம்-10 ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

'பூப்பெய்துதல் எனும் புனிதம்’

தடைகளும் பரிகாரங்களும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரமானாலும் செடியானாலும், அது பூத்துக்குலுங்கி காய்த்துக் கனியும்போதுதான் அது முழுமை பெறுகிறது. மனித இனமும் அப்படியே! மனித இனம் பல்கிப்பெருக வேண்டும் என்றால், வம்ச விருத்தி ஏற்பட வேண்டும். அதில் பெண்ணின் பங்கு மிக முக்கியமானது. அதற்கு அவள் பூப்பெய்த வேண்டும். அந்த நிகழ்வைச் சந்தித்த பெண்தான், ஒரு குழந்தையைத் தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து வளர்த்தெடுத்துப் பிரசவிக்க முடியும். தாய்மைக்குப் பெண்ணைத் தயார்படுத்தும் அந்த இயற்கை நிகழ்வானது சில நேரங்களில் மிக அரிதாக, சில பெண்களுக்கு உரிய காலத்தில் நிகழாமலே போய்விடுகிறது. அதற்கான காரணத்தை, சம்பந்தப்பட்டவரது ஜாதகத்தைக் கணித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அட, இதுக்கும் கூடவா ஜாதகம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் உண்மை!

நம் ஒவ்வொருவரின் உடல் இயக்கங்களுக்கும், ரத்த ஓட்டத்துக்கும் காரணமான கிரகம் சந்திரன். ரத்தத்துக்கான அதிபதி செவ்வாய். இவை இரண்டும் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால்தான் அவரது ரத்தத்தில் அதன் சிவப்பு நிறத்துக்குக் காரணமான ஹீமோகுளோபின் மற்றும் லிம்போசைட்டுகள் (ரத்தத் தட்டுகள்), வெள்ளையணுக்கள் சரியான அளவில் இருக்கும்.

இனி எல்லாம் சந்தோஷம்!

பெரும்பாலும், நம் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிகழ்ந்தால், சிறிது நேரத்திலேயே ரத்தம் உறைந்து, கசிவு நின்றுவிடும். அரிதாக சிலருக்கு, காயம்பட்ட இடத்தில் ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும். அதைத் தடுத்து நிறுத்தப் படாதபாடு படவேண்டியது இருக்கும். இந்தக் குறைபாட்டுக்கு மட்டுமின்றி, ஆர்.எச். காரணி என்ன, ரத்த குரூப் என்ன என்பதையும் ஒருவரது ஜாதகத்தில் உள்ள செவ்வாயே நிர்ணயம் செய்கிறது.

ஆக, சந்திரனும் செவ்வாயும் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பான இடத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு. அவரவர் ராசி, லக்னத்தைப் பொறுத்து இது கொஞ்சம் மாறுபடலாம்.

பெண்களின் பருவத்தை முன் குமரிப் பருவம், பின் குமரிப் பருவம் என்று பிரிப்பார்கள். முன் குமரிப் பருவம் என்பது, அந்தப் பெண் பூப்பெய்தலுக்கு முன்புள்ள பருவம். பின் குமரிப் பருவம் என்பது, பூப்பெய்திய பிறகான பருவம்.

ஒரு பெண் பூப்பெய்தல் நிகழ்வைச் சந்திக்க காரணமான கிரகம் செவ்வாய் என்பதால், அது அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் சிறப்பான இடத்தில் இருப்பது அவசியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ராசியையோ, லக்னாதிபதியையோ, ராசிநாதனையோ செவ்வாய்

பார்த்தால்தான், அந்தப் பெண் பூப்பெய்துவாள். இதே செவ்வாய்தான் ஹார்மோன்களுக்கும் அதிபதி.

சில வருடங்களுக்கு முன்பு, தனது 19 வயது மகளை அழைத்து வந்திருந்தார் ஒரு பெண்மணி. 'என் மகள் இன்னமும் வயதுக்கு வரவில்லை. நீங்கள்தான் இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்ல வேண்டும்; மலராத என் மகளின் வாழ்வு மலர வேண்டும்’ என்று கண்ணீர்விட்டார்.

அவரது மகளின் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணித்தேன். அவளின் ஜாதகத்தில் செவ்வாய், சூரியன், சனி, ராகு ஆகிய நால்வரும் ஒரே கட்டத்தில் இருந்தார்கள். சந்திரனோ கேதுவோடு சேர்ந்து பலவீனமாகியிருந்தார். செவ்வாயும், பாவ மற்றும் எதிர்மறை கிரகங்களான சனி, ராகு இவர்களோடு சேர்ந்திருந்தார். இப்படி, ரத்தக் கிரகமான செவ்வாயும், ரத்த ஓட்டத்துக்குக் காரணமான சந்திரனும், கழிவை வெளியேற்றும் கிரகமான சனியும் கெட்டுப்போய் இருந்ததால்தான், அந்தப் பெண் 19 வயதாகியும் பூப்பெய்தவில்லை.

இனி எல்லாம் சந்தோஷம்!

முன்வினைப் பயனும் இதற்குக் காரணமாகலாம் என்பதால், அந்தப் பெண்மணி வாழ்க்கைப்பட்ட குடும்பத்தின் முந்தைய தலைமுறையினர் பற்றி விசாரித்தேன். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவலை அவர் தயங்கித் தயங்கி சொன்னார். அவர் சொன்னதை இங்கே சுருக்கமாகச் சொல்கிறேன்.

வயதுக்கு வராத பெண்ணின் முப்பாட்டனார் காலத்தில் நடந்த சம்பவம் அது. அந்த ஊரிலேயே அவர்தான் ஊர்ப் பெரிய மனிதர், நாட்டாமை எல்லாமே! பதவி, பணம், அதிகாரம் எல்லாம் அவரிடம் குவிந்து கிடந்ததால், தான் ஆசைப்பட்ட பெண்களைத் தனது படுக்கையறைக்கே அழைத்து வந்து வலையில் வீழ்த்தியிருக்கிறார். மற்ற வீட்டுப் பெண்களை இப்படி நாசம் செய்தார் என்றால், சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கும் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியிருக்கிறார்.  பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது எனத் தடை விதித்தல், அடிமை போல் நடத்துதல், பெண் சிசுக் கொலை என, பெண்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் செய்ய முடியுமோ, அவை அத்தனையும் செய்திருக்கிறார். அவர் அன்று செய்த அந்தப் பாவம்தான், அவரின் தலைமுறையில் வந்த பெண்களின் வாழ்வில் விளையாடி இருக்கிறது.

என்னிடம் அழைத்துவரப்பட்ட பெண்ணுக்குப் பூப்பெய்தவில்லை என்னும் குறை இருந்தால், அந்தக் குடும்பத்தில் இருந்த மற்ற உறுப்பினர்களின் பெண்களுக்கும் வேறு மாதிரியான பிரச்னைகள் இருந்தன. திருமணமே ஆகாதிருத்தல், அப்படியே திருமணம் ஆனாலும் விவாகரத்து ஆகியிருத்தல், மணமுடித்த சில ஆண்டுகளிலேயே கணவனை இழத்தல் என அவர்களும் நிம்மதியில்லாத வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

என்னிடம் தன் மகளை அழைத்துவந்த பெண்மணி சொன்ன ஒரு தகவலை இங்கே பகிர்ந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் மகள் உரிய காலத்தில் பூப்பெய்து இருக்கிறாள். ஏதோ ஒரு முக்கிய நிகழ்ச்சி நாளன்று மாதவிலக்கைத் தள்ளிப்போட எண்ணி, மாத்திரை சாப்பிட்டு இருக்கிறாள். அவள் எதிர்பார்த்தது போலவே தள்ளிப் போனது மாதவிலக்கு. ஆனால், அதன்பிறகு அவளுக்கு மாதவிலக்கு நிகழவேயில்லை.  

தீராத சந்தர்ப்பங்களில் மிக மிக அவசியமாக இருந்தால் மட்டுமே இப்படிச் செயற்கை முறையில் மாத்திரை மூலம் மாதவிலக்கைத் தள்ளிப்போடலாமே தவிர, அதையே வழக்கமாக்கிக்கொள்ளக் கூடாது; இதனால், உடலியல் ரீதியாகப் பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியது வரும் என்பது மருத்துவ உண்மை.

சரி, அந்தப் பெண்மணி விஷயத்துக்கு வருகிறேன். அவளின் முன்னோர் பெண்களுக்கு எதிராகச் செய்த பாவமே அவரின் மகள் பூப்பெய்த முடியாத நிலைக்குப் பிரதான காரணம் என்பதால், அவரின் திருப்திக்காகச் சில பரிகாரங்கள் சொல்லி அனுப்பினேன். ஆனால், அந்தப் பெண் 24 வயதாகியும் இன்னமும் பூப்பெய்தவில்லை என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். விதி வலியது என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே? அது, இதுதான்!

பொதுவாக லக்னத்தையோ, ராசியையோ, லக்னாதிபதியையோ, ராசிநாதனையோ குரு பார்த்தால், ஒரு பெண் உரிய வயதில் பூப்பெய்துவாள். ஒரு பெண் எந்த வயதில், எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில் வயதுக்கு வருவாள், முதன்முதலில் அதை அறிவது யார், அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் என்ன நிறத்தில் ஆடை அணிந்திருப்பாள் என்பன உள்ளிட்ட விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது 'ருது மாலை’ என்கிற ஓலைச் சுவடி நூல்.

- சந்தோஷம் பெருகும்...

தொகுப்பு: எம்.ஜெயமுருகானந்தம்

இனி எல்லாம் சந்தோஷம்!

திருமண வரம் தரும் மகாமந்திரம்!

செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற காரணங்களாலும், ஜாதகத்தில் மண பாக்கியத்துக்கான கிரக பலன்கள் குன்றியிருந் தாலும் திருமணத் தடையைச் சந்திக்க நேரிடும். இப்படியான தோஷங்களும் தடைகளும் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடவும், மனத்துக்கினிய கணவன் வாய்க்கவும் கன்னிப் பெண்கள் கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு பலன் பெறலாம்.

காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:

கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கு எல்லாம் இருப்பிடமானவளும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான அம்பிகையே தேவீ! எனக்கு, நந்தகோபருடைய புத்திரரான கிருஷ்ணனைக் கணவனாகச் செய்வாயாக! உன்னை நமஸ்கரிக்கிறேன்.

- கண்ணனையே கணவனாக அடைய அருள்செய்யும்படி அம்பிகையை வேண்டுகிறது இந்த மந்திரம். அனுதினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி மனதார அம்பிகையை வழிபட, நல்ல கணவர் வாய்ப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism