தொடர்கள்
Published:Updated:

ஆரூடம் அறிவோம்:10

சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஆரூடம் அறிவோம்:10

ஞ்சாங்கத்தின் ஓர் அங்கமான 27 நட்சத்திரங்கள் பற்றி  சென்ற இதழில் பார்த்தோம். ஒரே நட்சத்திரத்தில் பிறந்த எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தில் சித்திரை மாதம் பிறந்த ஒருவனுக்கு சூரியன், ஜாதகக் கட்டத்தில் மேஷ ராசியில் இருப்பார். அஸ்வினி நட்சத்திரத்தில் வைகாசி மாதம் பிறந்தவரின் ஜாதகத்தில், சூரியன் ரிஷப ராசியில் இருப்பார்.

##~##

இப்படி, சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களில் சூரியன் வித்தியாசமான ராசியில் இருப்பார். இதில் 12 வகைகள் உருவாகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள். இதையும் இணைத்துப் பார்த்தால், ஒரே நட்சத்திரத்தில் 4ஜ்12=48 வகையான ஜாதகர்கள் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இவர்களின் குணாதிசயங்கள் மாறுபடும். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளும் மாறுபடும்.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு நவக்கிரக தேவதை அதிதேவதை ஆகிறார். அந்த கிரகத்தின் பலம் ஜாதகத்தில் எப்படி அமைகிறதோ, அதை அனுசரித்து ஜாதகரின் வாழ்க்கை அமைப்பு மாறுபடலாம். இதையும் சேர்த்துப் பார்த்தால், ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 4ஜ்12ஜ்9=432 வகை உண்டாகிறது. இப்படி இருக்க, ஒருவர் நட்சத்திரத்தைச் சொன்னதுமே, 'ஓ... பரணி நட்சத்திரமா! இவர் அப்படி இருப்பார், இப்படி ஆவார்...’ என்று சொல்வது ஜோசியம் அல்ல; வெறும் ஹேஷ்யம். அதாவது, ஊகம்! நட்சத்திரங்கள் பற்றிய விவரங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன. உதாரணத்துக்கு சில...

''பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.''

''மகத்தில் பிறந்தவன் ஜகத்தை ஆள்வான்.''

''சித்திரை அப்பன் தெருவிலே.''

''கேட்டையில் பிறந்தால் சேட்டனுக்கு ஆகாது.''

''ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.''

''மூலத்து மாமியார் மூலையிலே.''

''பூராடத்தின் கழுத்தில் நூலாடாது.''

இந்தப் பழமொழிகளின் கருத்துக்கு பிருஹத் ஜாதகத்திலோ, வராஹமிஹிரர் சாஸ்திரத்திலோ எந்த ஆதாரமும் இல்லை. தனிப்பட்ட ஒரு சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்துப் புனையப்பட்ட அடுக்குமொழிச் சொற்கள் இவை. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 432 வகை இருக்கும்போது, ஒரே ஒரு பழமொழியை ஆதாரமாக வைத்து, அந்த நட்சத்திரக்காரனுக்குப் பலன் சொல்வது சாஸ்திர விரோதமானது.

ஆரூடம் அறிவோம்:10

பொதுவாக, திருமண நேரத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, வெறும் பழமொழியை வைத்து பெண்ணை அல்லது ஆணைத் தேர்ந்தெடுப்பதோ, ஒதுக்குவதோ அறிவுடைமை ஆகாது. இந்தப் பழமொழிகள்மீது கொண்ட பற்றினாலும் நம்பிக்கையாலும் பல ஆண்கள், பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. உதாரணமாக, மூல நட்சத்திரத்தைச் சொல்லலாம்.

மூல நட்சத்திரப் பெண் அல்லது பையனுடன் திருமணம் செய்தால், மாமனாருக்கு ஆகாது என்ற தவறான நம்பிக்கை பலரை பாதித்திருக்கிறது. ஒருவன் வாழ்க்கை முடியும் சம்பவம், ஜோதிட ரீதியாக மூன்று அம்சங்களைப் பொருத்தது. அவன் ஆயுட் பலம், அவன் மனைவியின் மாங்கல்ய பலம், அவனது மகனின் பித்ரு கர்ம பலம் ஆகியவையே அவை. இவற்றை அனுசரித்தே ஒருவனின் மரணம் பற்றிக் குறிப்பிட முடியும். அப்படியிருக்க, மூல நட்சத்திரத்தில் மருமகள் வந்தால் மாமனார் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் ஏதாவது உண்மை இருக்க முடியுமா என சிந்தித்துப் பாருங்கள்.

சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்த ஜோதிடர்கள் திருமணத் துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகக் கட்டங்களின் அடிப்படையில் ஆண், பெண் இருவரது வாழ்க்கை எப்படி அமையும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா, குழந்தைச் செல்வங்கள் கிட்டுமா, உறவுகள் நீடிக்குமா என அனைத்தையும் ஆராய்ந்து, திருமணப் பொருத்தம் அறிந்து, திருமணங்களை முடிவு செய்வார்கள். பழமொழிகளின் அடிப்படையில் திருமணங் களைத் தவிர்ப்பது சாஸ்திரத்துக்கு உகந்தது அல்ல.

இந்த உண்மையை உறுதிப்படுத்த, மேலும் ஒரு கருத்தை இங்கே வைக்கிறேன்.

'பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்ற பழமொழியை நம்பி, பூராட நட்சத்திரப் பெண்களை ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால், பூராட நட்சத்திரப் பெண்கள் பலருக்குத் திருமணமாகி, அவர்கள் 60 ஆண்டுகள் அன்பும் அறனும் மிக்க இல்வாழ்க்கை நடத்தி, நல்ல குழந்தைச் செல்வங்களைப் பெற்று, சதாபிஷேகம் செய்துகொண்டு தீர்க்க ஆயுளுடனும், தீர்க்க சுமங்கலித்துவத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலரும் அறிந்ததே!

ஜோதிடர்கள் இந்த மாதிரி பழமொழிகளை நம்பாமல், சாஸ்திரத்தை நம்பி திருமணப் பொருத்தம் பார்த்துத் தருவதோடு, பெற்றோர்களுக்கும் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லவேண்டும்.

இனி, நட்சத்திரங்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு நவக்கிரக தேவதை அதிதேவதை யாகிறார். எனவே, 3 நட்சத்திரங்களுக்கு ஒரு நவக்கிரக தேவதை, அதிபதி ஆகிறார். அதன் விவரங்களைத் தெரிந்துகொள்வோமா?

நட்சத்திரங்கள்                                     நட்சத்திர அதிபதி

1. அசுவினி, மகம், மூலம்                                                   கேது

2. பரணி, பூரம், பூராடம்                                                    சுக்கிரன்

3. கிருத்திகை, உத்திரம், உத்திராடம்                       சூரியன்

4. ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்                   சந்திரன்

5. மிருகசீரிடம்,  சித்திரை, அவிட்டம்                       செவ்வாய்

6. திருவாதிரை,  சுவாதி, சதயம்                                     ராகு

7. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி                                   குரு

8. பூசம்,  அனுஷம், உத்திரட்டாதி                                   சனி

9. ஆயில்யம், கேட்டை, ரேவதி                                       புதன்

இந்த அட்டவணையில் அசுவினி - மகம் - மூலம் ஆகியவை நட்சத்திரங்களின் எண் வரிசையில் 1, 10, 19 ஆகிய நட்சத்திரங்களாகும். இவை ஜென்ம, அனுஜென்ம, திரிஜென்ம நட்சத்திரங்கள் எனப்படும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிறக்கும்போது நடக்கும் தசை கேதுவாகும்.

அதுபோல, பரணி - பூரம் - பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் எண்ணிக்கை வரிசையில் 2, 11, 20 ஆகும். இவையும் ஜன்ம, அனுஜென்ம, திரிஜென்ம நட்சத்திரங்கள் எனப்படும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிறக்கும்போது நடக்கும் முதல் தசை சுக்கிர தசை ஆகும். இதுபோலவே, அட்டவணைப்படி அமைந்துள்ள ஜென்ம, அனுஜென்ம, திரிஜென்ம நட்சத்திரங்களுக்கு அதற்குரிய நவக்கிரக தேவதையின் தசை முதல் தசையாகும்.

இந்த தசைகள் நடக்கும் காலப் பரிமாணம் வருமாறு:

கேது தசை - 7 வருடம்

சுக்கிர தசை               - 20 வருடம்

சூரிய தசை                  - 6 வருடம்

சந்திர தசை                - 10 வருடம்

செவ்வாய் தசை       - 7 வருடம்

ராகு தசை                    - 18 வருடம்

குரு தசை                     - 16 வருடம்

சனி தசை                     - 19 வருடம்

புதன் தசை                   - 17 வருடம்

ஆக மொத்தம், 120 வருடங்கள்.

ஒரு ஜாதகர் தீர்க்கஆயுளாக 120 வருடங்கள் வாழ்ந்தால், இந்த ஒன்பது தசைகளும் அவரது ஆயுட்காலத்தில் முழுமையாக நடக்கும் என்பது தாத்பர்யம். ஆனால், மனிதனின் சராசரி வாழ்நாள் 80 எனக் கொண்டால், அவன் வாழ்நாளில் 6 அல்லது 7 தசையின் காலம் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள அந்தந்த கிரகங்களின் பலம் அல்லது பலவீனத்தை அனுசரித்து, அந்தந்த தசையில் நடக்கும் பலாபலன்கள் அமையும். ராசிகளில் கிரகங்களின் உச்ச, நீச நிலை என்றால் என்ன? எந்தெந்த ராசியில் எந்தெந்த கிரகங்கள் உச்சமாக உள்ளன, அல்லது நீசமாக உள்ளன என்பது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்...