கடன் தொல்லை தீர்க்கும் ருணவிமோசன வழிபாடு கே.குமார சிவாச்சாரியார்
##~## |
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று முக்கிய கடன்களைத் தீர்த்துதான் ஆக வேண்டும் என்கின்றன ஞானநூல்கள். அதாவது தெய்வங்களுக்கான வழிபாடுகள், முன்னோர் ஆராதனை, மகான்கள் மற்றும் ரிஷிகளைப் போற்றி வணங்குவது மற்றும் அதிதி உபசாரம் முதலான கடமைகளையே நமக்கான கடன்களாகச் சொல்லி, அவற்றை அனுசரிக்கும்படி வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
இவை தவிர, பொருளாகவும் செயலுதவியாகவும் மற்றவர்களிடம் பட்ட கடன்களையும் நாம் அடைத்தாக வேண்டும். 'இந்தப் பிறவியில் நாம் கடன் வாங்கிக்கொண்டு பிறரை ஏமாற்றினால் அடுத்த பிறவியில் கொடிய மிருகங்களுக்கு நடுவே, ஒரு சாதுவான பிராணியாக நின்று, அவற்றுக்கு உணவாகும் நிலை வரும்’ என எச்சரிக்கிறது கருட புராணம்.
எனவே, கடன் பெற்றவர்கள் 'கடனே’ என்று செயல்படாமல், பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் அந்தக் கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும்.

யார் யாரெல்லாம் கடன்தொல்லையால் அழுந்த நேரிடும்? கடன்பட நேரிட்டாலும் வெகுசீக்கிரம் அதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் என்னென்ன நிலையில் இருந்தால் நமக்கு சாதகம் அல்லது பாதகம்? இவை குறித்து விரிவாக அறிவோமா?!
ஜாதக அமைப்பின்படி குரு மகரத்தில் நீசமாகி விரயம் அடைந்தாலும், 6-ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவை சனி பார்த்தாலும் அடைக்கமுடியாதவாறு கடன் அழுத்தும்.
செவ்வாய் தசையில் சுய புக்தி, சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கும்போது, பெண்கள் மூலமாக 60% கடன் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
குரு தசை நடக்கும்போது கேது, செவ்வாய் மற்றும் ராகு புக்தியில் கடன் சுமை வரக்கூடும்.
சனி தசை- கேது புக்தியில், மகன் மூலமாகக் கடன் தொல்லை ஏற்படும்.
ராகு தசை நடக்கும்போது... சனி, சூரியன் மற்றும் செவ்வாய் புக்தியில் 30% கடன் தொல்லை, சுற்றி உள்ள நபர்களால் ஏற்படும்.

புதன் தசை நடக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். நாம் ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த நண்பர் அதை ஒழுங்காகக் கட்டாமல் விட்டுவிட, நாம் கட்டவேண்டிய நிலை ஏற்படும். கேது தசை- சந்திர புக்தியில் நகை மூலமாகக் கடன் வரும்.
சுக்கிர தசை- சூரிய புக்தியில் வங்கிக் கடனை அடைக்க இயலாத நிலை ஏற்படும். சனி புக்தியில் மனைவி, மகனுக்கான வைத்தியச் செலவுகளாலும், கேது புக்தியில் வண்டிகள், எருதுகள், பசுக்கள் வாங்குவதாலும் கடன் உண்டாகும். சிறிய கடன்கள் கூட அடைபடாமல், வட்டி அதிகமாகி வாட்டக்கூடும்.
குரு தசையில் (சுய புக்தியும்) அடுத்து வரும் 16 வருடங்களும், சுக்கிர தசை 20 வருடங்களும்... இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்கினால் சுக தசை காப்பாற்றும்; தப்பித்துக் கொள்ளலாம் என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சிலர் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பி அடைக்காமல், கடன் கொடுத்த நபர் தங்கள் வீட்டுப் பக்கமே வராமல் இருக்க, துர்தேவதை பூஜைகள்கூட செய்வது உண்டு. இதுவும் தவறான செயல்பாடு. வாங்கிய கடனை இன்முகத்தோடு அடைப்பதற்கு இறைவழிபாடு செய்ய வேண்டும்.
கடன் தீர்க்கும் ருணவிமோசன பூஜை...
வளர்பிறையில் வரும் செவ்வாய்க் கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி முடித்து, பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அங்கே, மணைப்பலகை ஒன்றை வைத்து, செந்நிற கோல மாவினால் 16 சங்குகள் வட்ட வடிவில் அமைவது போன்று கோலம் போட வேண்டும். சங்குகளின் மேல் நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்காணும் அங்காரக துதியைச் சொல்லவேண்டும்.
பின்னர், சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பித்து, புஷ்பாஞ்சலியுடன் கற்பூர ஆரத்திக் காட்டி வழிபட வேண்டும்.
ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி
ஓம் முருகனின் உருவே போற்றி
ஓம் மேஷராசிப் பிரியனே போற்றி
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி
ஓம் தென் முகத்தவனே போற்றி
ஓம் தேவியின் பிரியனே போற்றி

ஓம் பூமியின் புதல்வனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் ரணகாரனே போற்றி
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி
ஓம் மகீ சுதனே போற்றி
ஓம் நவநாயக உருவே போற்றி
பிறகு, கீழ்க்காணும் மந்திரத்தை 9 முறை கூறி, ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
ஓம் ரக்தமால்யாம் பரதரம் சக்திசூலகதாதரம்
சதுர்புஜம் மேஷவாகம் வரதாபய பாணினம்
ஓம் அங்காரக மகீபுத்ர பகவன் பக்தவத்ஸலக
நமோஸ்துதே மமசேஷம் ருணமாசு விமோசய!
இந்த வழிபாட்டை முறையாகச் செய்து வந்தால், வாங்கிய கடன்களை விரைவில் அடைக்க வழிபிறக்கும்.
- வழிபடுவோம்...
மைத்ர முகூர்த்தமும் கடனும்
மனித வாழ்க்கையில் சில தருணங்களில் தடங்கல்களும், போதாத காலங்களும் வரும் என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லிவைத்த பெரியோர்கள், அவ்வாறான பிரச்னைகளும் தடைகளும் விலகுவதற்கான வழிமுறை களையும் விளக்கியிருக்கிறார்கள்.
விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்னநிர்ணய முகூர்த்தம் என்று பிரித்து வழிபாடுகளைச் செய்யச் சொன்னார்கள். இவற்றில் யாருமே அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உண்டு. இந்த முகூர்த்தம், கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது.
கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகுசீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.
ராசிப்படியான பொது மைத்ர முகூர்த்த நேரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம் - வியாழன் காலை 9 - 10:30 மணி
ரிஷபம் - வெள்ளி 8 மணி முதல் 10:30 வரை
மிதுனம் - புதன் காலை 7:30 - 9
கடகம் - திங்கள் மாலை 4 :30 - 6
சிம்மம் - ஞாயிறு காலை 11 - 12:30
கன்னி - வெள்ளி மாலை 5 - 6:30
துலாம் - சனி காலை 10:30 - 12:00
விருச்சிகம் - வியாழன் மாலை 3 -5 :30
தனுசு - செவ்வாய் காலை 10:30 - 12
மகரம் - சனி காலை 8 - 10:30
கும்பம் - திங்கள் மாலை 3 - 5:30
மீனம் - வியாழன் காலை 3 -10:30
வியாபார விருத்திக்கு...
செய்யக்கூடிய வியாபாரம் செழிப்பாக நடைபெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், ஜாதக அமைப்பு சிறப்பாக இருந்தால்தான் வியாபாரம் ஓஹோவென்று இருக்கும்.
அப்படி, வியாபார அபிவிருத்திக்கு வழிவகுக்கும் கிரகநிலைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
* வியாபாரத்துக்கு காரகன் புதன். இவர், தன் சொந்த வீடுகளான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் வலுத்திருந்து, அந்த இடம் தொழில் ஸ்தானமானால், வியாபார விருத்தி நிச்சயம் உண்டு.
* தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் சுப கிரக சம்பந்தம் பெற்று, பத்தாம் வீட்டுக்கு அதிபதி வலுத்து இருந்தாலும் வியாபாரத்தில் விருத்தி காணலாம்.
* நான்கில் உள்ள கிரகங்கள், பத்தாம் இடத்தை நேர் ஏழாம் பார்வையாக பார்த்தாலும் தொழில் விருத்தி கிட்டும்.
* புதனும் குருவும், இரண்டாம் வீட்டோனும் வலுத்து, தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண் டிருந்தால், செய்யக்கூடிய தொழில் சிறப்பாக நடைபெறும்.
* சூரியனும் புதனும் ஒன்றுகூடி பலம் பெற்றிருந்தால் தொழில்நுட்பத்
திறமையால் சம்பந்தப்பட்ட ஜாதகர் வியாபாரத்தில் அமோக வளர்ச்சி காண்பார்.
* 2, 10-ஆம் இடத்து அதிபதிகள் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருந்தால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். பொருளாதார நிலையிலும் விசேஷமான வளர்ச்சி உண்டாகும்.
* லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் ஒன்றுகூடி பலம் பெற்று, 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் வியாபார அபிவிருத்தி நிச்சயம் உண்டு.
- ராம்திலக், சென்னை-91