Published:Updated:

இனி எல்லாம் சந்தோஷம்!

வாழ்வே வரம்-12 'ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

##~##

 'இனி, அவருக்குக் கவலையே இல்லப்பா... இப்போ படிச்சு முடிச்ச அவரோட பையனுக்கு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிடுச்சாம். 75 ஆயிரம் சம்பளமாம். கார்கூட அவங்க ஆபீஸ்ல குடுத்து இருக்காங்களாம்..!’ - இப்படி உங்களுக்குத் தெரிந்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே? இப்படியரு அதிர்ஷ்டம் ஒருவருக்கு கிடைக்கவேண்டும் என்றால், அவரது ஜனன ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருக்கவேண்டும்.

சிலருக்குப் பண வசதி நிறைய இருக்கும். பிள்ளைகளை பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைப்பார்கள். ஆனால், பிள்ளைகளோ அவர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக படிக்க முடியாமல் திணறுவார்கள். இன்னும் சிலருக்கு படிப்புக்காக செலவு செய்யவே பணம் இருக்காது. அங்கே இங்கே என்று கடன் வாங்கியோ அல்லது அடுத்தவர்களின் உதவியிலோ பிள்ளைகள் படிப்பார்கள். படிப்பில் அவர்கள் 'நம்பர் ஒன்’ ஆக இருப்பார்கள். படித்து முடித்ததும், மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு சம்பளம் பெற்று திடீர் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுவார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருவரின் வாழ்வில் இப்படியெல்லாம் அற்புதம் நிகழுமா என்பதை அறிய வேண்டும் என்றால், அவரது ஜனன ஜாதகத்தைப் புரட்ட வேண்டும். அதில், கல்விக்குரிய, வித்தைக்காரகனான புதன் எப்படி இருக்கிறார் என்பதைத் தகுந்த ஜோதிடர் மூலம் அலசி ஆராய வேண்டும். அடுத்து, நினைவாற்றலுக்குக் காரணமான சந்திரனின் போக்கையும், 5-ஆம் வீட்டுக்குரிய கிரகத்தையும், அந்த வீட்டில் நிற்கும் கிரகத்தையும் பார்க்க வேண்டும். அறிந்துகொள்ளும் எல்லா விஷயங்களும் நம் மனத்தில் அப்படியே பதிந்திருக்கவும், தக்க இடத்தில் அவற்றைப் பயன்படுத்தவும் உதவி செய்யக்கூடிய கிரகம்தான் சந்திரன். இவற்றோடு, மேலும் சில கிரக அமைப்புகளையும் பார்க்கவேண்டும்.

இனி எல்லாம் சந்தோஷம்!

ஒருவரது ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 2-வதாக வரக்கூடிய இடம் ஆரம்ப கல்வியையும், 4-ஆம் இடம் உயர் கல்வியையும், 9-ஆம் இடம் மேல்நிலைக் கல்வியையும் குறிக்கக்கூடியது. 'எள் என்றால் எண்ணெயாக நிற்கிறானே...’ என்று சிலரைப் பார்த்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள்தானே? அப்படி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்களின் ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்தால்... அதில், முயற்சி ஸ்தானமான 3-ஆம் இடம் சிறப்பாக இருக்கும். இவர்கள் படிப்பு விஷயத்தில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். தங்களுக்குத் தந்த புத்தகத்தில் உள்ள விஷயங்களை மட்டும் கற்றுக்கொண்டு நின்றுவிடாமல், லைப்ரரிக்குச் சென்று இன்னும் அதிகப்படியான விஷயங்கள் அதில் என்னவெல்லாம் உள்ளன என்று தேடி அறிந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களே பிற்காலத்தில் பெயர், புகழோடு கைநிறைய சம்பளமும் பெறுபவர்களாகத் திகழ்வார்கள். இன்றைய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நல்ல கல்விக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்த சீட் கிடைக்காமல் போய்விடுகிறது. பிள்ளையின் ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாக இருந்தால்தான் பெற்றோர் ஆசைப்பட்ட கல்வி வரமாக அமையும். அதேபோல், ஒரு மாணவன் அல்லது மாணவியின் படிக்கும் காலத்தில், அவர்களுக்கு சனி திசையோ, ராகு திசையோ நடந்தால்... அவர்கள் எதிர்பாராதவிதமாக கோர்ஸ் மாறி படிக்க வேண்டிவரும். சில பாடங்களில் அரியர்ஸ் வரும். இப்படிப்பட்ட காலங்களில் அவர்கள் மனம் சோர்ந்துவிடாமல் கூடுதல் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். அப்போதுதான் தடைகளை கடந்துவர முடியும்.

என்னதான் ஒருவர் படித்தாலும், அது... எவ்வளவு பெரிய படிப்பாக இருந்தாலும், வாழ்க்கையை வளமாக்கி- வசந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்றால், பணம் வேண்டும் இல்லையா? அதாவது, கைநிறைய சம்பளம் பெறவேண்டும் இல்லையா? அப்படி, ஒருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ஆம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். சிலர் படித்தது ஒன்றாக இருக்கும்; பார்க்கும் வேலை இன்னொன்றாக இருக்கும். அதனால், உத்தியோக ஸ்தானத்தை அறிவது முக்கியம்.

இனி எல்லாம் சந்தோஷம்!

1990-ஆம் ஆண்டு என்னைப் பார்ப்பதற்காக மாயவரத்தில் இருந்து ஓர் இளைஞர் வந்திருந்தார். பி.காம் படித்ததாகக் கூறியவர், சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலையில் சேரும்பொருட்டு இன்டர்வியூவில் கலந்துகொள்ள வந்திருப்பதாகச் சொன்னார். அவரது ஜாதகத்தில் இருந்த உத்தியோக ஸ்தானத்துக்கும், அவர் படித்த பி.காம் படிப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. 'உங்கள் ஜாதகப்படி நீங்கள் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பு படித்தால் இதைவிட நல்ல வேலைக்குப் போகலாம். சம்பளமும் கைநிறைய வாங்கலாம்'' என்றேன். அவரோ, 'நான் பி.காம் முடிச்சு இரண்டரை வருஷம் ஆச்சு. இனி, எங்கே போய் கம்ப்யூட்டர் படிப்பது' என்றார், உற்சாகமின்றி!

அந்தக் காலகட்டத்தில்தான் கம்ப்யூட்டர் படிப்புகள் பிரபலமாக ஆரம்பித்து இருந்தன. ஆங்காங்கே கம்ப்யூட்டர் சென்டர்கள் தொடங்கப்பட்டு, அங்கே கல்வி கற்றுத் தரப்பட்டது. அவற்றை, ஜாதகம் பார்க்க வந்த இளைஞரிடம் சுட்டிக்காட்டிய நான், 'நீங்கள் இந்த கம்ப்யூட்டர் சென்டர்களில்கூட படிக்கலாமே?' என்றேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டு போனார். நான் சொன்னபடியே கம்ப்யூட்டர் கல்வி கற்றார். இன்று அவர் அமெரிக்காவில் மாதம் ரூ.15 லட்சம் சம்பளம் பெற்று பிரபல கம்பெனி ஒன்றில் உயர் அதிகாரியாக இருக்கிறார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்... இன்றுள்ள பெரும்பாலான பெற்றோர், தங்களது பிள்ளைகளை தங்கள் விருப்பப்படியே படிக்கவைக்கிறார்கள். தாங்கள் ஆசைப்பட்ட கல்வியை தங்களது பிள்ளைகள் கற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்கள், பிள்ளைகளின் உத்தியோக ஸ்தானத்தை அறிந்து, அதன்படி முடிவெடுப்பது நல்லது.

பொதுவாக புதனுடைய ராசிகளான மிதுனம், கன்னி; குருவுடைய ராசிகளான தனுசு, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் நிறைய படிப்பார்கள். இவர்கள், தங்கள் வாழ்க்கை முழுக்க கல்விக்காக ஏதாவது ஒருவகையில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள். அதேபோல், மேஷம், ரிஷபம், துலாம் ராசியினர் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்வார்கள்.

இந்த ஏழு ராசிக்காரர்கள்தான் படிப்பில் ஜொலிக்க முடியும் என்றில்லை. எல்லா ராசியினருக்குமே கல்வி நன்றாக வரும். அந்த கல்வியின் நிலை என்ன என்பதை ஜாதகத்தை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும்.

இப்போதுள்ள இளைஞர்கள் ஐ.டி. படிப்பைத்தான் அதிகம் தேர்வு செய்கிறார்கள். அப்படி, படித்தால்தான் லட்சக்கணக்கில் சம்பளம் பெறமுடியும் என்று நினைக்கிறார்கள்.

ஒருவர் இதுபோன்ற ஐ.டி. படிப்புகள் படிக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும்போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.

இனி எல்லாம் சந்தோஷம்!

அதாவது, கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைக்குத் தேர்வாகி மாதம் 75 ஆயிரம், 85 ஆயிரம், 1 லட்சம், ஒண்ணேகால் லட்சம் என்று, அவர்களின் சம்பளமும் நம்மை கிறுகிறுக்க வைக்கும்.

லட்சங்களில் சம்பளம் வாங்க லட்சியத்தோடு உழைத்தாலும், ஜனன ஜாதக கிரக நிலைகளே ஒருவர் பிற்காலத்தில் எப்படி வருவார் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஜாதகத்தை அலசி அவற்றைத் தெரிந்துகொள்வதோடு, சில நல்ல செயல்களையும் செய்து பாஸிடிவ் அதிர்வுகளை நம்மைச் சுற்றி உண்டாக்கிக்கொண்டால் லட்சியமும் நிறைவேறும்; லட்சமும் நம் பாக்கெட்டுக்கு வந்துசேரும். அதற்கு என்ன செய்யலாம்?

* உடன் படிக்கும் மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித்தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்வதை சின்ன வயதில் இருந்தே பழகிக்கொள்ள வேண்டும்.

* தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பணவசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

* நல்ல மதிப்பெண் எடுத்தும், நல்ல காலேஜில் சீட் கிடைத்தும், பணப்பற்றாக்குறை காரணமாக மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்படும் நாத்தனாரின் மகனையோ, கொழுந்தனாரின் மகளையோ நம்மால் முடிந்த பண உதவி செய்து படிக்கவைக்கலாம்.

* முக்கியமாக, தன் பிள்ளை மாத்திரமே நன்றாகப் படிக்கவேண்டும்; அடுத்தவன் பிள்ளை எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பது போன்ற பொறாமை எண்ணங்களை அடியோடு மனத்திலிருந்து அழித்துவிட வேண்டும்.

* கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.

- சந்தோஷம் பெருகும்...

தொகுப்பு: எம்.ஜெயமுருகானந்தம்