Election bannerElection banner
Published:Updated:

உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்!

உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்!
உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-12 கே.குமார சிவாச்சாரியார்

##~##

வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில், ஸ்ரீலட்சுமிதேவியுடன் குபேரனையும் வழிபட்டால் வீட்டில் வறுமை அகலும்; பொருளாதாரம் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

ஜாதக ரீதியாக ஏழ்மையை, மிகுதியான கடன் சுமையை, பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்திக்கும் அன்பர்கள் யாவரும் செய்ய வேண்டிய மற்றுமொரு வழிபாடும் உண்டு. அது, நவநிதி சேவை வழிபாடு. இதை எந்தவொரு சுபநாளிலும் செய்து வளம் பெறலாம்.

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும். குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த வநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்.

ராவண சகோதரர்கள் கடும் தவம் செய்து அரிய பல வரங்கள் பெற்ற பிறகு, இலங்கையை ஆண்டுகொண்டிருந்த குபேரன் அங்கிருந்து விரட்டப்பட்டான். அவனது புஷ்பகவிமானமும் பறிமுதல் செய்யப்பட்டது. மிகவும் கலங்கிய குபேரன், புலஸ்திய முனிவரின் ஆலோசனைப்படி கவுதமி நதிக்கரைக்குச் சென்று, சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் செய்தான். அதன் பலனாக  உமையவளுடன் அவனுக்குக் காட்சி தந்த சிவனார், நவநிதிகளுக்கும் தலைவராகும்படி குபேரனுக்கு அருள்பாலித்தார்.

உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்!

அதுமட்டுமா? ஒளி வீசிக்கொண்டு விண்ணில் பறக்கும் சபையும், அதன் மையத்தில் பத்மாசனம் திகழ... மனைவியாகிய ரத்திதேவியுடன் அதில் அமரும் பாக்கியமும் பெற்றான் குபேரன். மேலும் சித்திர ரதம் எனும் சோலை, கற்பக மரம், அலகன் என்கிற அழகிய ஓடை ஆகியவை அவனுக்குச் சொந்தமாயின. திருமகள் கடாட்சம் மிகுந்திருக்க... அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மகரிஷிகள் ஆகியோர் உபதேவதைகளாக அவனுடன் வீற்றிருக்கின்றனர்.  

சங்கரரும், பூத கணங்களும், தோழர்கள், விபீஷணர், நந்திகேஸ்வரர், வெண்ணிற ரிஷபம் ஆகிய சிவகணங்கள் இருக்க, சிவபெருமான் அவனது சபைக்கு வரும்போது அவரை வரவேற்று வணங்குகிறான் குபேரன். அதனால் அவனுக்கு மகதைச்வரியமும் கூடுகிறது. மகேந்திரம், விந்தியம், இமயம், கயிலாயம் ஆகிய தெய்வாம்சம் பொருந்திய மலைகள் யாவும் குபேரனை வழிபடுகின்றன என்று குபேரனையும் சிவனருளால் அவன் பெற்ற மகிமைகளையும் விவரிக்கின்றன புராணங்கள்.

இப்படியாக உயர்ந்த அந்தஸ்தில் விளங்கும் குபேரனை, எளிமையான நவநிதி வழிபாடு மூலமாக பிரார்த்தனை செய்து, லட்சுமி கடாட்சம் பெறலாம்.

நவநிதி சேவை செய்யும் முறை:

குபேரனுக்கு உரிய இந்த வழிபாட்டினை சுபமுகூர்த்த திருநாட்களிலும் வெள்ளி, திங்கள் மற்றும் பௌர்ணமி தினங்களிலும் செய்யலாம்.

ஒன்பது கலசங்கள், நடுநாயகமாக  லட்சுமிதேவி- குபேரருக்குக் கலசம் என மொத்தம் 11 கலசங்கள் படத்தில் உள்ளது போன்று அமைக்க வேண்டும். பூஜைக்கு உரிய திரவியப் பொருட்களுடன், பால் பாயசம், வடை, தேங்காய், வாழைப்பழம், தாம்பூலம், துளசி மற்றும் வாசனை மலர்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் குபேர கலசம் அருகில் உள்ள சங்க நிதி - பதும நிதிகளை ஆவாகனம் செய்ய வேண்டும்.

சங்கநிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் சங்கநிதயே நம: சூர்ய வாசாய மாணிக்க ரத்னப்ரியாய கமல புஷ்ப வாசாய சங்கரூபே நிதிதேவாயநம: ஆவாகயாமி.

பதும நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் பத்மநிதயே சுக்ரரூபாய வைர ரத்ன கேசாய லக்ஷ்மி நேசாய பத்மரூபாய ப்ரம்மாய நம: ஆவாகயாமி.

இதையடுத்து மற்ற நிதிகளையும் உரிய மந்திரங்கள் கூறி, கலசங்களில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்!

மகாபத்ம நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் மகாபத்மநிதயே சந்தரரூபாய முத்வரத்ன கேசாய அல்ய ரூபே பார்வதீப்ரியாய நம: ஆவாகயாமி

சங்காக்ய நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் சங்காக்ய நிதயே மங்கள ரூபாய பவள, கேசாய சண்பக புஷ்பப்ரியாய ஸ்கந்த ப்ரியாய ஆவாகயாமி

மகராக்ய நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் மகராக்ய நிதயே விஷ்ணு ரூபாய, சுகந்த காந்தன ப்ரியாய, நாராயணப்ரியாய நம: ஆவாகயாமி

சுகச் சபநிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் சுகச்சப நிதயே குரு ரூபாய புஷ்பராக கேசாய ஸ்வேத புஷ்பப்ரியாய, ப்ரம்ம தேஜசாய நம: ஆவாகயாமி

முகுந்த நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் முகுந்த நிதயே மந்த ரூபாய, சாஸ்த்ரு ரூபிணே, நீலோத்பல புஷ்கராய தர்மாய நம: ஆவாகயாமி.

குந்தாக்ய நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் குந்தாக்ய நிதயே துர்க்கா ரூபாய கோமேதகப்ரியாய, மந்தார புஷ்ப வாகாய சக்தி அம்சாய நம: ஆவாகயாமி.

நீல நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் நீலநிதயே கணேஸ்வர ரூபாய, வைடூர்ய ப்ரியாய ரக்தவர்ண புஷ்ப நேத்ராய ஞானதேவாய நம: ஆவாகயாமி.

ஒன்பது நிதிகளையும் ஆவாஹனம் செய்தபிறகு, ''ஓம் நவநிதி தேவதாயை நம: சர்வராஜ உபசார பூஜாம் க்ருத்வா'' என்று கூறி, தூப- தீப நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

பின்னர், 'ஓம் ஸ்ரீம் வர்ரீம் க்ரீம் ஐம் ஓம் தனதான்யாய, க்லீம் நமோ குபேரராஜ யட்சேசாய தன விருத்திம் குரு குரு ஸ்வாகா’  என்று 108 தடவையும், ஸ்ரீமகாலட்சுமியைக் குறித்து. 'ஓம் ஸ்ரீம் நம; கமல வாசின்யை, தனவசீகராயை, தான்ய கர்யை, மகாலஷ்மியை நாராயண வரப்ரியாயை ஸ்ரீயை ஸ்வாகா’ என்று 108 தடவையும் ஜபித்து, வாசனை மலர்களைச் சமர்ப்பித்து, கலசங்களை வலம் வந்து, கீழே விழுந்து நமஸ்கரித்து வணங்க வேண்டும்.

கீழ்க்காணும் பாடலைப் பாடியும் வழிபடலாம். அப்போது, நம் கைகளால் சங்கு முத்திரை காட்டி ஜபம் செய்வதால், நம் கரங்களுக்கு செல்வச் சேர்க்கை ஏற்படும் என்கிறது பூஜை விதி.

நவநிதிசேவை - தமிழ்க் கோவை

ஓம் மகேஸ்வரன் நேசனும்
நாரணன் பத்தினியும், மகதைஸ்வர்யம் தந்து நிற்க
மகாதேவன் திருவருளால் மங்களமும் வந்துதிக்க
குருவருளும் முன் நின்று குலம் வாழக் காக்க
மருவான தரித்திரங்கள் மறைந்து ஓடிட
ஒரு காலும் பிரியாத நவநிதிகள் முன்நிற்க
சங்கநிதி பதுமநிதி சாட்சிபோன்று நிற்க
சங்காக்யம் மகாபத்மம் மகராக்யம் மகிழ
சுகச்சபமும் முகுந்த குந்தளமும் சிரிக்க
நீலவனும் நெருங்கி நேசமுடன் காக்க
நிதியருளால் எல்லாமும் ஏற்றமாய்ச் சேர
விதிதனையே மாற்றி அருள் நிதியும் குவிய
அகிலமதில் மானுடமும் அழகுடனே வாழ்க!

அனைவருக்கும் நவநிதிகள் தரிசனம் விரைவில் கிடைக்கட்டும்.

உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்!

நவநிதி சேவைக்கு ஆசார நியமங்கள்...

வீடு சுத்தமாக இருந்தால்தான் பொருள்நிலை உயர்த்திட அருளும் மகாலட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்குவாள்.

* காலையிலும் மாலை நேரத்திலும் வீட்டில் சோம்பலுடன் உறங்கிக்கொண்டிருத்தல் கூடாது.

* மாலையில் வீட்டு வாசற்படியில் தீபம் ஏற்றுவதைக் கடமையாகச் செய்ய வேண்டும்.

* வீட்டில் குழந்தைகள் அழாமல் இருக்கும்படி பெண்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். சூரிய உதயத்துக்கு முன் எழுந்து வாசலில் நீரிட்டுக் கோலமிடல் வேண்டும்.

* குடும்பத் தலைவன், தலைவி, கூச்சலிட்டுச் சண்டை போடாமல் இருத்தல் அவசியம். மனைவிக்குத் தெரியாமல் கணவனும் கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், ஒரு வேலையை மறை முகமாகச் செய்தல் வேண்டாம்.

* வீட்டில் வேத கோஷங்கள், கோபூஜை, தெய்வ அருட்பாடல் கள், தூபவாசனை என்கிற சுபச்சூழ்நிலையை நிலவிடச் செய்யவேண்டும்,

* நம் வீட்டுத் தோட்டத்தில் வில்வமரம், மருதாணி மரம், மாமரம் இருந்தால் அங்கே லக்ஷ்மி தேவி வந்து தங்குவதாக சம்பிரதாயம். எனவே, அந்த மரங்களை வளர்க்கலாம். மாடி வீடு பிளாட்டில் குடியிருப்போர் அவற்றின் இலைகளை வைத்துக் கொள்ளலாம்.

* வாரம் ஒரு முறை பசுவுக்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்து சுற்றி வந்து வணங்கலாம். பெரியோரிடம் அவமரியாதை பேச்சுக்களைத் தவிர்த்து, கனிவோடு உபசரணை செய்து, சுபநாள், திருமண நாள், பிறந்த நாளில் வாழ்த்துரை பெறலாம்.

* பித்ருக்களின் திதி நாளைக் குலவழக்கப்படி கொண்டாட வேண்டும்.

* வலம்புரிச் சங்கு, மகாமேரு, சாளக்ராமம், துளசி மாடம், ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீலக்ஷ்மி, குல தெய்வ படங்களைச் சுத்தமாக வைத்து தீபம் ஏற்றி பூஜிப்பது விசேஷம். அதிகாலையில் ஸ்ரீருத்ரம், லக்ஷ்மி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம், விஷ்ணு சகஸ்ரநாமம், பஞ்ச சூக்தம் படிப்பதும் கேட்பதும் சிறப்பு.

* அழுக்கான ஆடைகள், குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* வாரம் ஒரு தடவை, விஷ்ணு, சிவன், சக்தி ஆலயங்களுக்குச் சென்று தீபம் வைத்துப் பிறருக்கு இடையூறு இல்லாமல் வணங்கி வருதல் வேண்டும்.

* ஆடம்பரம் இல்லாத இல்லம், அடக்கமாகப் பேசுகிற பெண்மணி, கணவனை மதிக்கும் பெண்மணி இவர்களிடத்தில் நவமணிகளையும் ஐஸ்வர்யங்களையும் நவநிதிகள் வழிபாடு உடனே சேரச் செய்துவிடும் என்கிறது நம் பூஜா நியமங்கள்.

- வழிபடுவோம்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு