Published:Updated:

வாழ்வே வரம்-13

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

வாழ்வே வரம்-13

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

ன்றைய இளைஞர்களிடம், 'உனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும்?’ என்று கேட்டால், 'அவள் அழகானவளா, அன்பானவளா, அறிவானவளா, குணவதியா இருக்கணும்’ என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆனால், எல்லோருக்கும் அப்படி யான பூரண வாழ்க்கைத் துணை அமைந்துவிடுகிறதா என்றால், இல்லை. இதனால்தான், 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றார்கள்.

பெரும்பாலான இளைஞர்கள் இன்றைக்கு நல்ல படிப்பு படித்து, நல்ல வேலையிலும் அமர்ந்து, கைநிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள இவை உதவும் என்றாலும், சந்தோஷமான வாழ்க்கை நிரந்தரமாகத் தொடரவேண்டும் என்றால், நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். பொதுவாக, ஒருவரது ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரனே, வாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்பதைத் தீர்மானிக்கிறார். அவர் பலமாக இருந்தால்தான் நல்ல மனைவியோ, நல்ல கணவனோ அமைவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்வே வரம்-13

திருமணம், நம் வாழ்வின் முக்கியமான கட்டம் என்பதால், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய, ஒருவரது ஜாதகம் நன்கு அலசி ஆராயப்படுகிறது. பெண் வீட்டார் தங்களது பெண்ணுக்குத் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, நல்ல பையனாக, கைநிறையச் சம்பாதிக்கக்கூடியவனாக இருந்தால் போதும் என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறார்கள். பையன் தரப்பிலோ, 'எங்கள் மகனுக்கு மனைவியாக வரக்கூடிய பெண் அழகானவளாக, அறிவானவளாக, குணவதியாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் ஜாதகத்தைத் தேர்வு செய்து தாருங்கள்’ என்று கேட்கிறார்கள்.

நம் ஆசைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஓர் ஆணின் ஜாதகத்தில் எப்படியான ஜாதக அமைப்பு இருக்கிறதோ, அதற்கு ஏற்பத்தான் மனைவி வாய்ப்பாள். ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான பாகை(டிகிரி)யில் ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்தால், அவனுக்கு நல்ல வழிகாட்டக்கூடிய பெண் மனைவியாக அமைவாள். சுக்கிரன், யோகாதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல மனைவி அமையும் யோகம் உண்டு.

* கணவன்- மனைவிக்குள் பிரச்னைகள் எழுவது தவிர்க்க முடியாதது. அந்த மாதிரியான நேரங்களில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

* ஒரு குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துதல்;

* நெருக்கடி நேரங்களிலும் சரியான முடிவு எடுத்தல்;

* குடும்ப உறுப்பினர்களுடன் போட்டி போடாமல் இருத்தல்;

* எதற்கெடுத்தாலும் எதிர்விவாதம் செய்யாதிருத்தல்;

* பிள்ளைகளை பேணி வளர்த்தல்;

- இப்படித்தான் ஒரு நல்ல மனைவியின் இலக்கணங்கள் வரையறுக்கப்படுகின்றன. இது ஆணுக்கும் பொருந்தும்!

ஓர் ஆணின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7-வது இடம் மனைவி ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த வீட்டுக்குரிய கிரகம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, இந்தக் கிரகம் 2, 4, 5, 9 ஆகிய வீடுகளுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பெண், இல்வாழ்க்கைத் துணைவியாக அமைவாள். 'கல்யாணத்துக்குப் பிறகு, அவன் எங்கேயோ போயிட்டான்பா! மணியான குழந்தை, சொந்தமா வீடு, கார், சொத்துனு லைஃப்ல நல்லபடியா செட்டில் ஆயிட்டான்பா! எல்லாம், அவன் மனைவி வந்த நேரம்!’ என்று யாரேனும் சொல்லிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே? அந்த யோகம்தான் இது.

இப்படிப்பட்ட ஆண்களின் வாழ்க்கையை திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்கு பின்பு என்று பிரித்துக்கொள்ளலாம். திருமணத்துக்கு முன்பு மிகச் சாதாரணமானவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். மனைவி வந்த நேரம், அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இப்படிப்பட்டவர்களில் சிலர், தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, மனைவியின் கையால் குத்துவிளக்கேற்றி தொடங்கிய சொந்தத் தொழில் அமோகமாக வளரும். திருமணம் ஆன ஒருசில ஆண்டுகளிலேயே ஓஹோவென்று வந்துவிடுவார்கள்.

ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் (சப்தமாதிபதி) சுபத் தன்மை பெற்ற குருவின் பார்வை பெற்றால், அவருக்கு மனைவியாக வாய்க்கக்கூடிய பெண் கற்பு நெறி, தெய்வ பக்தி, உண்மை பேசும் குணம், பெரியோரை அனுசரித்துச் செல்லுதல் ஆகிய நற்குணங்களைக் கொண்டவளாக இருப்பாள். லக்னாதிபதியும் வலுவடைந்து, 7-ஆம் வீட்டுக்குரிய கிரகமும் பாவக் கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இல்லாமல் இருந்தால், அழகு, அன்பு, அறிவு, அந்தஸ்து, நற்குணம் கொண்ட  மனைவி அமைவாள்.

மேலே சொன்ன அமைப்புகள் எல்லாம், நல்ல மனைவி அமைவாள் என்கிற நற்செய்தியைச் சொல்லக்கூடியவை. சிலரின் திருமண வாழ்க்கை, திருமணத்துக்குப் பிறகு, முன்பு இருந்ததைவிட மோசமாகிவிடும். இதையும் அவரின் ஜாதக அமைப்பே தீர்மானிக்கிறது. ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் 6, 8 ஆகிய வீடுகள் மற்றும் பாதகாதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ, திருமணத்துக்குப் பிறகு பிரச்னைக்குரிய வாழ்க்கையே அமையும். நிம்மதி பறிபோகும். மேலும், திடீரென்று கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாவார்கள். வீட்டுக்குள் நுழைந்தாலே, மனைவியால் ஏதாவது ஒருவழியில் பிரச்னை வரும். இவர்களுக்கு வாய்க்கும் மனைவி உண்மையைத் திரித்துப் பேசுதல், வஞ்சக சிந்தனை, முன்கோபம், எடுத்தெறிந்து பேசுதல் முதலான மோசமான குணங்களைக் கொண்டவளாக இருப்பாள்.

வாழ்வே வரம்-13

ஒருவருக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் என்றால், அதற்கான வரம் அவரது ஜாதகத்தில் நல்ல அமைப்புகளாகப் பதிவாகி இருக்கும்.

1992-ஆம் ஆண்டு, என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார் ஒருவர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தனக்கு வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களின் ஜாதகங்களை என் முன்பு வைத்தார். அவற்றிலிருந்து நல்ல ஜாதகத்தைத் தேர்வு செய்து தருமாறு கூறினார். மனைவியால் யோகம் கிடைக்கும் அமைப்பு அந்த நபரின் ஜாதகத்தில் இருந்தது. அதனால், அந்த ஜாதகங்களில் இருந்து ஒரு ஜாதகத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தது. 'இதைவிட, நல்ல பண வசதியுள்ள பெண்ணின் ஜாதகத்தைத் தேர்வு செய்து தரலாமே’ என்று வந்தவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், 'இன்னிக்கு ஆபீஸுக்கு நடந்து போகும் நீங்கள், அந்தப் பெண் மனைவியாக வந்தால், காரில் போவீர்கள். அவ்வளவு அதிர்ஷ்டமான ஜாதகம் அது’ என்றேன்.

அவரும் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். நான் தேர்வு செய்த ஜாதகரோடு அவருக்குத் திருமணம் நடந்தது. நான் நினைத்தபடியே அவரின் வாழ்க்கையில் உடனடியாக அதிர்ஷ்டம் தேடிவந்தது. சாதாரண நிலையில் இருந்த அவர் இன்று ஒரு டி.வி. சேனலுக்கு உரிமையாளர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்படியான அதிர்ஷ்டம் தரும் மனைவி அமைய, ஓர் ஆணின் பெற்றோர் சில நல்ல விஷயங்களைச் செய்வது நல்லது.

* யாரேனும் உதவி செய்தால்தான் திருமணமே நடக்கும் என்கிற நிலைமையில் உள்ள ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்வது; அல்லது, திருமணச் செலவின் குறிப்பிட்ட பகுதியை மனமுவந்து ஏற்றுக்கொள்வது. குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யம் வாங்கித் தருவது.

* உறவுகள் யாருமே இல்லாத பெண்களின் திருமணத்துக்குத் தங்களால் முடிந்த உதவி செய்வது.

* கன்னிப்பெண்களுக்கு வெள்ளியால் ஆன பொருள் தானம் செய்வது;

- இப்படிப்பட்ட நல உதவிகளோடு, சஷ்டி திதியன்று திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபட, அதிர்ஷ்டம் அள்ளித்தரும் பெண் மனைவியாக அமைவாள் என்பது திண்ணம்.

- சந்தோஷம் பெருகும்...

தொகுப்பு: எம்.ஜெயமுருகானந்தம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism