Published:Updated:

ஜோதிட புராணம்

ஆரூடம் அறிவோம்:13 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்

ஆரூடம் அறிவோம்:13 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களின் காரகத் தன்மைகள் குறித்து, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். தொடர்ந்து... குரு, சுக்கிரன், சனி, ராகு- கேதுக்களின் காரகத்துவம் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

குரு: பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்கள் குருவுக்கு உண்டு. தெய்வீக அறிவுக்கும் ஞானத்துக்கும் அதிபதி இவர். 'குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும்’ என்ற பழமொழி, குருவின் பெருமையை விளக்குகிறது. 12 ராசிகளில் தனுசு, மீன ராசிகளில் ஆட்சியாகவும், கடக ராசியில் உச்சமாகவும் இருக்கிறார் குரு. வடக்கு திசை, குரு அமர்ந்திருக்கும் திசை. பிரம்மன் இவரின் அதிதேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவபெருமானின் அம்ஸாவதாரமான தக்ஷிணாமூர்த்தியே குரு பகவானுக்கு அதிதேவதை என்றும் கூறலாம். தக்ஷிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் பூஜித்தால், குரு அனுக்ரஹம் உண்டாகும். புத்திரபாக்கியம், திருமண பாக்கியம், ஞானம், யோக சாஸ்திர வல்லமை, அஷ்டமாஸித்திகள், புத்திக்கூர்மை, தார்மீக சிந்தனை, ஆசார்யஸ்தானம், ஒழுக்கம், புகழ், பெருமை ஆகியவற்றுக்கு குருவே காரகன். குருபலம் வரும்போதுதான் ஓர் ஆண் அல்லது பெண்ணுக்குத் திருமண பாக்கியம் ஏற்படும். எனவே, திருமண வயதில் திருமணங்களை நிச்சயிக்கும்போது, ஜாதகப்படி குருபலம் வந்துவிட்டதா என்று பார்த்து முடிவு செய்வார்கள்.

குரு ஒருவரது ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்து, அவர் நல்லவரா கெட்டவரா என்றுகூடச் சொல்லமுடியும். மனித உடலில் சதையாகவும் தசையாகவும் அமைந்துள்ள பகுதிகளைக் காப்பவர் குரு. ஒருவரது தோற்றப்பொலிவும் அழகும் குரு பலத்தால் ஏற்படுகிறது என்றும் சொல்லலாம்.

குரு ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் சஞ்சரிப்பார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் பிரவேசிப்பதை குருப்பெயர்ச்சி என்கிறோம். ஒருவரது ராசிக்கு எத்தனையாவது வீட்டில் குரு இருக்கிறார் என்பதை வைத்து அவரின் ஜாதக பலன்கள் சொல்லப்படுகின்றன. குரு பகவானின் நட்சத்திரம் உத்திரம். அவரது கோத்திரம் ஆங்கீரஸ கோத்திரம். அவரது பத்தினி பெயர் தாரா தேவி. வாகனம் யானை. மஞ்சள் நிறம் அவருக்கு உகந்தது. புஷ்பராகம் அவருக்குரிய ரத்தினக்கல்.

ஜோதிட புராணம்

சுக்கிரன்: 64 கலைகளுக்கும் அதிபதி சுக்கிரன். அதிகாலை உதயமாகி வானில் ஒளிவீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுவர். கிழக்கு திசை இவருக்குரிய திசை. இந்திராணி அல்லது துர்கை இவருக்கு அதிதேவதை. இந்திரன் மருத்துவன். பிரத்யதி தேவதை. வைரம் இவருக்குரிய ரத்தினம். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். வெள்ளி உலோகமும், வெள்ளை வஸ்திரமும் இவருக்கு உகந்தவை. மனித வாழ்க்கையின் சுக போகங்களுக்கும் காதல், அன்பு, பாசம், ஆசை போன்ற உணர்வுகளுக்கும் சுக்கிரனே மூலகாரகன். சுக்கிரனை களத்திரகாரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, களத்திரகாரகன் சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்கிறாரா என்பதைப் பார்த்து முடிவு செய்வார்கள். ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். அந்த ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால், அவரது உச்ச, நீச நிலைகளை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.

இயல், இசை, நாடகம், நாட்டியம் முதலான கலைத்திறமை, சரீர சுகம், சயன சுகம், சிம்ஹாசன யோகம், அழகு, ஆரோக்கியம், இளமை, வீடு, வாகன வசதி, லட்சுமி கடாக்ஷம், புகழ், வெளிநாட்டுப் பயணம் ஆகிய சௌபாக்கியங்களுக்கு சுக்கிரனே காரகன். மனித உடலில் ஜனன உறுப்புகளைக் காப்பவன் சுக்கிரன். அதனால் புத்திர பாக்கியம் தரும் அனுக்ரஹதேவன் சுக்கிரனே! சுக்கிரனின் அனுக்ரஹத்தைப் பூரணமாகப் பெறவும், சுக்கிரனால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷத்தை நீக்கவும், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கேற்றி அம்பாளை வழிபடுவது நல்லது.

குருபகவான் தேவகுரு என்றால், சுக்கிரன் அசுர குரு. மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய வித்தைகளின் அதிபதி சுக்கிரன். இவரது நக்ஷத்திரம் பூசம். பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது பத்தினி சுகீர்த்தி. கருடன் இவரது வாகனம். மனித வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான விஷயங்களை ஆதிக்கம் செய்யும் சுக்கிரன் மாதா மாதம் ஒரு ராசியில் சஞ்சரிப்பதால், அவரவர் ஜாதகத்துக்கேற்ப இன்ப- துன்பங்கள் நிலைத்து நிற்காமல் மாறி மாறி வருகின்றன.

சனி: சனீஸ்வரன் என்றும், சனி பகவான் என்றும் போற்றப்படும் சனிக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்யும் இவர் ஆயுள்காரகன் எனப்படுகிறார். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரியகுமாரனே சனி. இவர் யமதர்மராஜனின் சகோதரன். நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனி பகவான்தான். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார். அதுபோல, ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து, துன்பங்களை அனுபவிக்க நேரிடும். மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால், இந்தப் பலன்கள் சாதகமாக மாறும். இவர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். ஒருவரது ஜன்ம ராசிக்கு முந்தைய ராசியில் இவர் சஞ்சரிக்கும்போது, அந்த ஜாதகருக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஜன்ம ராசிக்கு வந்து, அதன் பின்பு ஜன்ம ராசிக்கு அடுத்த ராசியில் சஞ்சரித்து முடியும் ஏழரை வருடங்கள் இது. இதனை மங்கு சனி, தங்கு சனி, பொங்குசனி என்று பிரித்துப் பலன் சொல்வார்கள். ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள நிலைப்படி அவரது ஆட்சி, உச்ச, நீசத் தன்மையை வைத்து ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும்.

சனீஸ்வரனுக்கு அதிதேவதை யமதர்மராஜா. எனவே, தர்மம் தவறாமல் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நியாய உணர்வுடனும் வாழ்பவர்களை சனீஸ்வர பகவான் அனுக்ரஹத்தோடு காப்பாற்றுவார். தர்மமும் ஒழுக்கமும் தவறியவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை. சனீஸ்வரனின் நக்ஷத்திரம் ரேவதி. இவர் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது பத்தினி பெயர் நீலாதேவி. காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. இவருக்கு உகந்த நிறம் கருநீலம். மனித உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர். அவயவக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, மூளைக் கோளாறு போன்றவற்றுக்கு சனியே காரகன். எள்ளும் நல்லெண்ணெயும் இவருக்கு உகந்தது.

ஜோதிட புராணம்

ராகு: பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்து, அதனால் அமுதம் தோன்றியபோது, அதனை தேவர்களுக்கு வழங்க பகவான் விஷ்ணு, மோகினி வடிவெடுத்து வந்தார். அப்போது, அசுரன் ஒருவன் தேவர்களுக்கு நடுவே நின்று, அமிர்தத்தைப் பெற்று அருந்தினான். சூரிய- சந்திரர்கள் அந்த அசுரனைக் காட்டிக் கொடுக்க... மோகினி அவன் தலையைக் கொய்துவிட்டாள். அமிர்தம் அருந்தியதால் அந்தத் தலை உயிர் பெற்றது. விஷ்ணுவின் அருளால் பாம்பின் உடலைப் பெற்று, ராகு என்ற பெயர் பெற்று, நவக்கிரகங்களில் ஒரு கிரகமானார். உடல் ஆரோக்கியம், ஞானம், பிதா-மகன் உறவு, அரசாங்க சேவகம் ஆகியவற்றுக்குக் காரகன் ராகு. சிறைவாசம், தண்டனை, அவமானம் போன்றவற்றை நிர்ணயிப்பவரும் இவரே! இவர் தென்மேற்கு திசைக்கு அதிபதி. காமதேனு எனும் பசு ராகுவின் அதிதேவதை. காளி இவரது அதிதேவதை; அல்லது, பிரத்யதி தேவதையாகச் சொல்வார்கள்.

ராகுவின் நக்ஷத்திரம் அஸ்வினி. இவருக்கு, ஸர்பி என்ற பெயர் உண்டு. இவரது பத்தினி ஸிம்ஹி. இவரது வாகனம் ஆடு. இவருக்குரிய ரத்தினம் கோமேதகம். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்.

கேது: இவர் ஞானகாரகன் எனப்படுவார். இவர் மோட்ச காரகனும் ஆவார். மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடலில் பாம்புத் தலையைப் பெற்றவர் இவர். விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் இவரே அதிபதி. தாய்வழிப் பாட்டனுக்குக் காரகன். இவரது அதிதேவதை சித்ரகுப்தன். பிரத்யதி தேவதை பிரம்மன். வடமேற்கு இவரின் திசை. வைடூரியம் இவரது ரத்தினம். இவருக்கு சிகி என்ற பெயர் உண்டு. ஆயில்யம் இவரது நக்ஷத்திரம். ஸிம்ஹம் இவரது வாகனம்.

ராகு, கேது இருவருமே சாயாகிரகம் எனப்படுவர். அப்பிரதக்ஷிணமாக சுழன்று, ஒன்றரை வருடங்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்கள். ஒருவருக்கொருவர் 7-வது இடத்தில் இருப்பார்கள். ஒருவரது ஜாதகத்தில் பிரதக்ஷிணமாகக் கட்டங்களைப் பார்க்கும்போது, ராகு, கேதுக்களுக்கு நடுவில் எல்லா கிரகங்களும் அடங்கியிருந்தால், அதனை சர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். ராகு, கேதுக்களின் க்ஷேத்திரமான ஸ்ரீகாளஹஸ்தியில் சரியான காலத்தில் நாகபூஜை செய்தால், சர்ப்பதோஷம் நீங்கும்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism