ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

 மார்ச் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

 மேஷம்: ஃபீனிக்ஸ் பறவை போல ஓயாமல் போராடி உயிர்த்தெழும் குணம் கொண்டவர்கள் நீங்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால்... பணப்புழக்கம் அதிகரிக்கும். 24-ம் தேதி முதல் செவ்வாய் 12-ல் மறைவதால், உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படலாம். குரு, சூரியன் மற்றும் புதனும் 12-ல் மறைந்திருப்பதால், செலவுகளால் திணறுவீர்கள். 23-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 25-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அநாவசியப் பேச்சைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது.  

ரிஷபம்: தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினால், தயங்காமல் திருத்திக் கொள்பவர்கள் நீங்கள்.

##~##

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். ஆடை, ஆபரணம் சேரும். சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். 26-ம் தேதி முதல் 28-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

இழுபறியான வேலைகள் முடியும் வேளையிது.

மிதுனம்: சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களைக் காயப்படுத்தாதவர்கள் நீங்கள்.

புதனும், சூரியனும் 10-ல் அமர்ந்திருப்பதால்,  வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். குருவால் வேலைச்சுமை, அநாவசிய செலவுகள் வந்து போகும். 4-ம் வீட்டில் சனி இருப்பதால், அவ்வப்போது வீண் கவலை வரும். 28-ம் தேதி காலை 9 மணி முதல் 29-ம் தேதி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால், எதிலும் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சிக்கல்கள் தீரும் காலமிது.

கடகம்: கண்டம் தாண்டிப் போனாலும் கலாசாரத்தை மறக்காதவர்கள் நீங்கள்.

குரு வலுவாக இருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்.  8-ல் மறைந்திருக்கும் உங்கள் பிரபல யோகாதிபதி செவ்வாய், 24-ம் தேதி முதல் 9-ல் அமர்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்னை தீரும்.  விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல் நீங்கும்.

தடைகள் உடைபடும் தருணமிது.

சிம்மம்: அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் நீங்கள்.

6-ல் அமர்ந்து அலைச்சல், செலவுகளைத் தந்து கொண்டிருக்கும் சுக்கிரன், 23-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால், பணவரவு திருப்தி தரும். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். 24-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால், திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். சூரியன், குருவுடன் நிற்பதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

பயணங்களின்போது கவனம் தேவைப்படும் நேரமிது.       

கன்னி: சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்தையும் ரசித்து, ருசிப்பவர்கள் நீங்கள்.

உங்கள் ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால், தடைப்பட்ட காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகள், தேர்வை நல்ல முறையில் எழுதுவார்கள். புது வீடு வாங்குவீர்கள். 24-ம் தேதி முதல் 6-ல் சுக்கிரன் மறைவதால், உடல் உபாதை வந்து நீங்கும். 24-ம் தேதி முதல் செவ்வாய் 7-ல் அமர்வதால், சகோதர வகையில் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

உங்கள் பலவீனத்தை உணரும் தருணமிது.

துலாம்: விரக்தியடைந்து வருபவர்களை கரையேற்றுபவர்கள் நீங்கள்.

சூரியன் 6-ல் நிற்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். 6-ல் குருவும், புதனும் மறைந்திருப்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவு, உறவினர் பகை வந்து போகும். 24-ம் தேதி முதல் செவ்வாய் 6-ல் நுழைவதால், மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.

வேலைச்சுமை அதிகரிக்கும் நேரமிது.    

விருச்சிகம்: எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப்ப வர்கள் நீங்கள்.

குரு வலுவாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவர் பாசமழை பொழிவார். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். 5-ல் சூரியன் நிற்பதால்... அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... களைப்பு, தூக்கமின்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

சாதித்துக் காட்டும் வேளையிது.

தனுசு: வியர்வை சிந்தும் தொழிலாளிக்கு வசதியான வாழ்க்கை கிடைக்கப் போராடுபவர்கள் நீங்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கணவரின் வருமானம் உயரும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் கூடும். தாய்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. 16-ம் தேதி முதல் 17-ம் தேதி மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... கவலை, உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

புதிய முயற்சிகள் வெற்றி பெறும் காலமிது.

மகரம்: பணத்துக்கு மயங்காத நீங்கள், கொண்ட கொள்கையிலிருந்து மாறமாட்டீர்கள்.

சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.  24-ம் தேதி முதல் செவ்வாயும் 3-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. உடல் நலக் கோளாறு நீங்கும். 17-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 19-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், நாவடக்கம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

துணிச்சலான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

கும்பம்: சுற்றம் சூழ வாழ்வதை விரும்புபவர்கள் நீங்கள்.

ராகு வலுவாக இருப்பதால்... அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. 12-ல் மறைந்திருக்கும் யோகாதிபதி சுக்கிரன், 23-ம் தேதி முதல் ராசிக்குள் அமர்வதால், வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். 19-ம் தேதி மாலை 5 மணி முதல் 21-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், நிதானித்து செயல்படுங்கள். 2-ல் நிற்கும் சூரியனாலும், 5-ல் நிற்கும் கேதுவாலும் உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை கூடும்.

இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் வேளையிது.        

மீனம்: குளத்து நீரைத் தூய்மைப்படுத்தும் மீனைப் போல, குழம்பி வருபவர்களின் துயர் துடைப்பவர்கள் நீங்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ராசிக்குள் குருவும், சூரியனும் நிற்பதால்... வீண் டென்ஷன் வந்து விலகும். பணத்தை சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். 21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி இரவு 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், காரிய தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவு எடுங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் தருணமிது.