கர வருட ராசிபலன்கள்
தொடர்கள்
Published:Updated:

கர வருட ராசிபலன்கள்

கர வருட ராசிபலன்கள்

கர வருட ராசிபலன்கள்
கர வருட ராசிபலன்கள்

அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்

புத்திக்கூர்மை மிகுந்தவர் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பதால், மனச் சோர்வு நீங்கும்; உற்சாகம் பெருகும். பண வரவு திருப்தி தரும். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் கர புத்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு.

வீட்டில் தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் ஆனி- ஆவணியில் கைகூடி வரும். மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு லோன் கிடைக்கும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல், சிறு சிறு விபத்துகளும் ஏற்படலாம். 9.5.11 முதல், ஜென்ம குரு வருவதால், உடல்நலம் பேணுவது அவசியம். வயிற்றுக் கோளாறு, தலைச் சுற்றல், மஞ்சள்காமாலை வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

15.5.11 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையின் உடல்நலம் பாதிக்கலாம்.வருடம் பிறக்கும்போது கேது 3-ல் நிற்பதால், சவால்களை சமாளிப்பீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர். 16.5.11 முதல், ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் வீண் சந்தேகம் வேண்டாம். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும்.

கர வருட ராசிபலன்கள்

சனி பகவான், 20.12.11 வரை 6-ஆம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் உதவுவர். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். நீண்டநாள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள்.

ஐப்பசி, கார்த்திகையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் வீட்டை விரிவுபடுத்தலாம். ஐப்பசி மாத மத்தியப் பகுதியில் இருந்து பங்குனி வரைக்கும், ராசிநாதன் செவ்வாய் 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் சாப்பிட வேண்டாம்.

மார்கழியில் அரசு விவகாரங்களில் கவனம் தேவை. தை, மாசி மாதங்கள் யோகம் தரும். திடீர் பண வரவு, புது வாகனம் அமையும். திருமணம் கைகூடும். அரசியல்வாதிகள், தலைமையை பகைத்துக்கொள்ள வேண்டாம். குடும்ப ரகசியங் களை வெளியில் சொல்லாதீர்கள்.

##~##
கன்னிப் பெண்களே, புதிய நண்பர்களிடத்தில் கவனமாக இருங்கள். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். மாதவிடாய்க்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.

கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை அளியுங்கள். மாணவர்கள், எதிலும் அலட்சியத்துடன் செயல்படாதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல கல்வி நிறுவனத்தில், நீங்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும்.

வியாபாரம்: ஏற்ற- இறக்கங்கள் உண்டு. வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களிடம் கனிவுடன் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கைகூடும். கணினிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: அலுவலகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றம் கிடைக்கலாம். மேலிடத்திலிருந்து நெருக்கடிகள் அதிகரிக்கும். கணினித் துறையினர், புதிய வாய்ப்புகளை பலமுறை யோசித்து ஏற்பது நல்லது.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், அலைச்சலையும் தகுந்த ஆதாயத்தையும் தந்து செல்லும்.

கர வருட ராசிபலன்கள்

கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்

திறமைசாலிகள் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பழைய கடன்கள் தீரும். குடும்ப வருமானம் உயரும். குரு பகவான் 8.5.11 வரை 11-ஆம் வீட்டில் நிற்பதால் ஓரளவு நிம்மதி, திடீர் பண வரவு உண்டு. 9.5.11 முதல், 12-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் விரயச் செலவுகளும் சுபச் செலவுகளும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது ராகு 8-ஆம் வீட்டிலும் கேது 2-ஆம் வீட்டிலும் நிற்பதால், தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம், பேச்சால் பிரச்னைகள் எழலாம். எனவே, நிதானித்துப் பேசுவது நல்லது. 16.5.11 முதல், கேது ராசிக்குள் நுழைவ தால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். உணவு முறையில் கவனம் தேவை. ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் வரக்கூடும். கணவன்- மனைவிக்கு இடையே சிலர் கலகம் மூட்டலாம். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை, வைகாசியில் அலைச்சல், சிறு சிறு ஏமாற்றம், காய்ச்சல்,சளித்தொந்தரவு ஏற்படலாம். அரசு காரியங்களில் அவசர முடிவு வேண்டாம். ஆனி,ஆவணி மாதங்களில் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைஅமைத்துத் தருவீர்கள்.அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும்பணி முழுமைஅடையும்.

கர வருட ராசிபலன்கள்

20.12.11 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை, உறவினரிடம் பகை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், வழக்கில் வெற்றி கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். சின்ன சொத்தை விற்று பெரிய சொத்து வாங்குவீர்கள். வெகுநாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தின் மத்தியப் பகுதி வரையி லான காலகட்டத்தில் பெற்றோரின் உடல்நிலை பாதிப்படையலாம். பிள்ளைகளால் அலைச்சல் வரும். கர்ப்பிணிகள் தொலைதூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் மன இறுக்கம் விலகும். எதிர்பார்த்த வகையில் பண வரவு உண்டு. சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

தை மாதத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பால்ய நண்பர்கள் உதவுவர். மாசியில், வேலை இல்லாத அன்பர்களுக்கு வேலை கிடைக்கும். பங்குனி மாதத்தில் வருமானம் உயரும். ஆபரணங்கள் சேரும். அரசியல்வாதிகள், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்; கட்சி மாற வேண்டாம்.  

வியாபாரம்: ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. புதியவர் களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். பங்குதாரர் களிடம் கோப வார்த்தைகள் வேண்டாம். தை, மாசி, பங்குனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என ஆதங்கம் ஏற்படலாம். ஆனாலும் சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு மேலதிகாரியுடன் வருத்தங்கள் எழலாம். மாசி, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும். ஆராய்ந்து ஏற்பது நல்லது. கலைத் துறையினர், எவரையும் விமர்சிக்கவேண்டாம்; வீண் வதந்திகள் வந்தாலும் பதற்றம் தேவையில்லை.

கன்னிப் பெண்கள், பெற்றோர் ஆலோசனையை ஏற்று செயல்படவும். மாணவர்கள், அதிகாலை படிப்பை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர் கல்வியில் வெற்றியுண்டு.

மொத்தத்தில் கர புத்தாண்டு, முற்பகுதியில் முன்னேற விடாமல் தடுத்தாலும் பிற்பகுதியில் மிகுந்த ஏற்றம் தந்து உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம்

டின உழைப்பாளி நீங்கள். உங்களுடைய ராசிநாதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் வேளையில் கர புத்தாண்டு பிறப்பதால் தொட்டது துலங்கும். பிரச்னைகள் நீங்கும். உழைப்புக்கேற்ற பலன் உண்டு. உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பண பலம் கூடும். குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

குரு பகவான் 9.5.11 முதல் 11-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் பணப் புழக்கம் திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இழுபறியான வேலைகள், சித்திரையில் முழுமை பெறும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் வாய்க்கும். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், இளைய சகோதரர் உதவுவார். 15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால், டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், வீண் பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், தம்பதிக்கு இடையே கசப்பு உணர்வு ஏற்படும். சிலருக்கு திருமணம் தள்ளிப்போகும்.

16.5.11 முதல், கேது ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் மேம்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் கூடிவரும். வைகாசி, ஆனி மாதங்களில் நெஞ்சு வலி, மூட்டு வலி, ரத்த சோகை, அசதி வந்து

போகும். உடன்பிறந்தவர்களுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். ஆவணி மாதம் அந்தஸ்து உயரும். சொத்து விஷயத்தில் அனுகூலம் உண்டு. ஆடி மாதத்தில், தந்தையுடன் வீண் வாக்குவாதம், அரசுடன் மோதல், விரயச்செலவுகள் ஏற்படலாம்.எனினும் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

கர வருட ராசிபலன்கள்

20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால் வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. சொத்து வாங்க நினைப்பவர்கள் தாய் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால் பூர்வீகச் சொத்துகளில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் கோபத்தைத் தவிர்க்கவும். 24.7.11 முதல் 9.9.11 வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால் வேலை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவர். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்- கெட்டவரை அறிந்துகொள்வீர்கள்.

புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தின் மத்தியப் பகுதி வரையிலும்... எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆடை- அணிகலன்கள் சேரும். உங்களால் வளர்ந்தவர்கள் இப்போது உதவுவர். கார்த்திகை மாதத்தின் மத்தியப் பகுதி வரையிலும் அண்டை- அயலாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களின் கனவு நனவாகும்; கல்யாணம் கைகூடும். மாணவர்களுக்கு, நினைவாற்றல் பெருகும். கெட்ட சகவாசம் விலகும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம்: பற்று- வரவு உயரும். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடு களால் போட்டியாளர்களை திக்குமுக்காடச் செய்வீர்கள். பாக்கிகள் எளிதில் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். கெமிக்கல், வாகன உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: மேலதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகள் தேடி வரும்.கலைஞர்களுக்கு, அரசால் கௌரவம் கிடைக்கும்.உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும்.

மொத்தத்தில் கர புத்தாண்டில், சனி பகவான் சில சங்கடங்களைத் தந்தாலும், குருவின் திருவருளால் எதிர்பாராத முன்னேற்றமும், அந்தஸ்தும் கிட்டும்.

கர வருட ராசிபலன்கள்

புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

பொறுமைசாலிகள் நீங்கள். உங்களது ராசிக்கு தன வீடான 2-ல், கர புத்தாண்டு பிறப்பதால், பேசியே காரியம் சாதிப்பீர்கள். அலட்சியப்போக்கு மாறும். 8.5.11 வரை 9-ஆம் வீட்டில் குரு இருப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். 9.5.11 முதல் குரு 10-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் வீண் பழி, கௌரவக் குறைவு, உத்தியோகத்தில் வேலைப்பளு, இடமாற்றம் வரக்கூடும். சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் கூடி வரும். வருமானம் உயரும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் செலவும், அலைச்சலால் உடல்நிலை பாதிப்பும் ஏற்படலாம்.

புத்தாண்டு பிறக்கும்போது கேது 12-ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ஆம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. 16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தைகளால் சரியாகும். 16.5.11 முதல் ராகு 5-ஆம் வீட்டுக்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். சொந்தபந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். சிலர் வீடு- இடமாற்றம் செய்வார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

20.12.11 வரை சனி பகவான் 3-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால் சொத்துச் சேர்க்கை, பெரிய பதவிகள் கைகூடும். பிரபலங்களது நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வெளிநாடு சென்று வருவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 21.12.11 முதல் சனி 4-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வாகனம் பழுதாகும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசு வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்த்துவிடுங்கள்.

கர வருட ராசிபலன்கள்

குடும்ப ரகசியங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

10.9.11 முதல் 3.11.11 வரை பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். நீங்களும் சோர்வாகக் காணப்படுவீர்கள். கார்த்திகை, தை, மாசி மாதங் களில் சில சவால்களைச் சந்திப்பீர்கள்.

கலைஞர்களே, சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர் கள், படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. கணிதம், மொழிப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை.

வியாபாரம்: வைகாசி, ஆவணி மாதங்களில் சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும் முயற்சிப்பீர்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். எவருக்கும் அதிக முன்பணம் தரவேண்டாம். மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். கூட்டுத்தொழிலில் பிணக்குகள் விலகும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகம்: உங்களைப் பற்றி அவதூறாக கடிதங்கள் வரக்கூடும். ஆடி மாதம், உங்களுக்கு ஆதரவான உயர் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படலாம். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பளம் உயரும்.

கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். புது வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவசரம் வேண்டாம்.

மொத்தத்தில் 'கர’ புத்தாண்டு, வெள்ளந்தியான உங்களுக்கு, சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்றாற்போல் பேசும் யுக்தியைக் கற்றுத் தருவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

கொடுக்கும் குணம் கொண்டவர் நீங்கள். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கர புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். கல்யாணத் தடைகள் நீங்கும். பழைய வாகனத்தை மாற்று வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீண் செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செயல்படுங்கள்.

கேது 11-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம் - தடுமாற்றங்கள் நீங்கும். ஆன்மிகவாதிகள் அறிமுகமாவர். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாருடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. குறிப்பாக மக நட்சத்திரக்காரர்கள், அவ்வப்போது சர்க்கரை, கொழுப்பு அளவைப் பரிசோதிப்பது நல்லது. 15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.

9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் திடீர் பண வரவு, யோகம், குடும்பத்தில் சந்தோஷம், குழந்தை பாக்கியம் எல்லாம் உண்டு. வீடு-மனை சேர்க்கையுண்டு.  சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தை, பங்குனி மாதங்களில் வி.ஐ.பி-கள் உதவுவர். தங்க நகைகள், புதிய சொத்துகள் சேரும்.

16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். தாயாருடன் மனஸ்தாபம் வெடிக்கும். 16.5.11 முதல் கேது 10-ஆம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், வேலைச்சுமை, அதிருப்தி வந்து நீங்கும்.

கர வருட ராசிபலன்கள்

4.11.11 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீடிப்பதால், சகோதரர்களுடன் சச்சரவுகள் வரும். வீடு- மனை தொடர்பான வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். கார்த்திகை, தை மாதங்களில் திடீர் திருப்பங்கள், பண வரவு உண்டு. வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். மார்கழியில் சிறு விபத்துகள் நிகழலாம். 20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால் கால் வலி, உடல் அசதி வந்து நீங்கும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 21.12.11 முதல் 3-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால் எதிலும் வெற்றியுண்டு. மதிப்பு கூடும். புது வீட்டில் குடி புகுவீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரம்: வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு. பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். பணியாட்கள், வேலையை கச்சிதமாக முடிப்பார்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். மார்கழி, மாசி மாதங்களில் போட்டிகள் அதிகரிக்கும். சிமென்ட், இரும்பு, கடல் உணவு, ரசாயன வகைகள் லாபம் தரும்.

உத்தியோகம்: வேலையில் ஆர்வம் பிறக்கும். ஆனி மாதம், வெளி நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்ப்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கார்த்திகை, தை மாதங்களில் பொறுப்புகள் தேடி வரும். கணினித் துறையினருக்கு வேலை அதிகமானாலும் ஊதிய உயர்வும் உண்டு.

கலைஞர்களுக்கு, பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கேற்ற கணவன் அமைவார். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கவேண்டாம். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். உயர் கல்வியில் வெற்றியுண்டு.

மொத்தத்தில் கர புத்தாண்டு, உடல் உபாதைகளைத் தந்தாலும்... பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

உத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம்

வெள்ளையுள்ளம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கர புத்தாண்டு பிறப்பதால் மனத் தெளிவு,  பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 7-ல் குரு நிற்பதால், குடும்பத்தில் நன்மைகள், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய விரய ராசியில் புத்தாண்டு பிறப்பதால், அவ்வப்போது கடன் வாங்கும் சூழல் அமையலாம். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், செலவுகள் அதிகரிக்கும். காரியத்தடை, அலைச்சல், டென்ஷன் இருக்கத்தான் செய்யும். ஆனால், குரு உங்களின் 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கமும் உண்டு. சொத்துச் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்களும் பணத்தைத் திருப்பித் தருவார்கள்.

வருடம் பிறக்கும்போது 6-ஆம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வாகன விபத்தும் வரக்கூடும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினரிடையே பகைமை ஏற்படலாம். கேது 10-ல் நிற்பதால்

வேலையில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவ தால் எதிலும் வெற்றியே. புதிய முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடனுதவியுடன் வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். கேது 9-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், உத்தியோகப் பிரச்னைகள் குறையும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வீட்டில் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

கர வருட ராசிபலன்கள்

20.12.11 வரை ஜென்மச்சனி தொடர்வதால் ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். லாகிரி வஸ்துகளைத் தவிர்ப்பது நல்லது. எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 21.12.11 முதல், சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் கூடும்; தாழ்வு மனப்பான்மை விலகும். திடீர் யோகம், பண வரவு எல்லாம் உண்டு. ஆன்மிக பயணத்தால் மன நிம்மதி கிட்டும்.

பிரபலங்களின் நட்பால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். கௌரவப் பதவி கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வழக்குகளில் தேக்க நிலை மாறும்.

கன்னிப் பெண்களுக்கு ஆவணி, கார்த்திகை மாதங்களில் கல்யாணம் கூடிவரும்.  மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

வியாபாரம்: ஆவணி, புரட்டாசி மாதங்கள் போராட்டமாக இருக்கும். ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய யுக்திகளால், பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வாடிக்கையாளர்களது எண்ணிக்கை உயரும். பணியாட்களிடம் கறாராக இருங்கள்.

மாசி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

உத்தியோகம்: சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் வேலைச்சுமை அதிகரிக்கும்.  ஆனி மற்றும் மாசி மாதத்தில் பணியில் உயர்வு உண்டு. உங்களைத் தரக் குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களுடைய சம்பள உயர்வுக்காகவும் போராடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு தேடி வரும்.

கணினித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

கலைஞர்களே, உங்களைக் குறித்து வீண் வதந்திகள் கிளம்பும். என்றாலும் சோதனைகளைக் கடந்து எல்லாவற்றிலும் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, செலவுகளாலும் பயணங்களாலும் உங்களை அலைக்கழித்தாலும், பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுப்பதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்

சாதிக்கத் துடிப்பவர் நீங்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன், பூர்வபுண்ணிய வீடான 5-ஆம் வீட்டிலும், ராகு 3-ஆம் வீட்டிலும் இருக்கும்போது கர வருடம் பிறப்பதால், சோர்வு மற்றும் தடைகள் விலகும். அடிப்படை வசதிகள் பெருகும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களுடைய லாப வீட்டில் கர புத்தாண்டு பிறப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

8.5.11 வரை குரு 6-ல் நின்று டென்ஷன், பணப் பற்றாக்குறை, விபத்து, குடும்பத்தில் பிரிவு என அலைக்கழிப்பார். 9.5.11 முதல், குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், அது முதல் விபரீத ராஜயோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். மனைவியின் உடல்நிலை

சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்காலத்துக்காக சேமிக்கத் துவங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் இப்போது தீர்வு கிடைக்கும். சிலருக்கு, தடைப்பட்டிருந்த கல்யாணம் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கர வருட ராசிபலன்கள்

15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், வீண் டென்ஷன், பேச்சில் கடுகடுப்பு அதிகரிக்கும். கேது 8-ல் நுழைவதால் விபத்து, திடீர் பயணங்கள் வரக்கூடும். ஆவணி மாதத்தில் கல்யாணம், சீமந்தம், புதுமனை புகுவிழா, காதணி விழா என வீட்டில் விசேஷங்கள் நடக்கும். வெளி

வட்டாரத்தில் மதிப்பு கூடும். எதிர்த்து பேசியவரும் வலிய வந்து நட்பு பாராட்டுவர்.வி.ஐ.பி-கள் நண்பராவார்கள்.

சித்திரை, வைகாசி மாதங்களில் சிறுசிறு விபத்து, செலவுகள், கணவன்- மனைவிக்குள் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். ஆனி, ஆடி மாதங்களில் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வருமானம் உயரும். திடீர் திருப்பங்களும் உண்டு. வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். சனி பகவான் 20.12.11 வரை 12-ல் விரயச் சனியாக தொடர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் ஏற்படலாம். 21.12.11 முதல் ஜென்ம சனியாக வருவதால் உடல்நலம் பாதிக்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதையும் தவிர்க்கவும். தடைப்பட்டிருந்த கட்டடப் பணிகளை முடித்து புது வீட்டில் குடி புகுவீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும்; புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். கன்னிப் பெண்களுக்கு, தை மாதம் கல்யாணம் கூடிவரும். பெற்றோரின் ஆலோசனைப்படி செயல் படுங்கள். மாணவர்களின் ஞாபகசக்தி கூடும். உயர் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேர்வீர்கள். சிலருக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு அமையும்.

வியாபாரம்: தள்ளிப்போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். பங்குனியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர், சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவார்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்.

உத்தியோகம்: பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். பங்குனியில் பதவி உயரும். எதிலும் நேர் வழியில் செல்வது நல்லது. வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். கணினித் துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் சம்பள உயர்வும் உண்டு.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, இதுவரை நிம்மதி இல்லாமல் தவித்த உங்களுக்கு, மிகுந்த வசதி வாய்ப்பு களையும், மன அமைதியையும் அள்ளித்தருவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை

விட்டுக்கொடுத்து வாழ்பவர் நீங்கள். உங்களுக்கு 10-வது ராசியில் கர ஆண்டு பிறக்கிறது. தேங்கிக்கிடந்த பணிகள் நிறைவடையும். வசதி- வாய்ப்புகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் வீட்டு வேலை விரைந்து முடியும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். 8.5.11 வரை குரு 5-ஆம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 9.5.11 முதல் குரு 6-ஆம் வீட்டில் நுழைவதால் டென்சன், பணப் பற்றாக்குறை ஏற்படலாம். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையப்பம் இட்டு வைக்கவேண்டாம்.  

ராகு 15.5.11 வரை 2-ல் நிற்பதால், பேச்சில் கடுமை வேண்டாம். இழுபறி வேலைகள் முடிவுக்கு வரும். கேது 8-ல் நிற்பதால் திடீர் பயணம், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால் தலைச்சுற்றல், வயிற்றுக் கோளாறு, முன்கோபம் அதிகரிக்கும். கேது 7-ல் நுழைவதால், ஓரளவு நிம்மதி பிறக்கும். வீண் அலைச்சல் குறையும். ஆனால் கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படலாம்.

சித்திரை மாதத்தில் திடீர் பண வரவு உண்டு. அணிகலன்கள் வாங்குவீர்கள். ஆனி மாதம் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடியில், தந்தையின் உடல் நிலை பாதிக்கப்படலாம். ஆவணியில் வழக்குகளில் வெற்றியுண்டு. ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி வரைக்கும் செவ்வாய் 10-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், பூர்வீகச் சொத்து குறித்த வழக்கு சாதகமாகும். புது வேலை தொடர்பாக நல்ல தகவல் வந்து சேரும். மகனுக்கு நல்ல வரன் அமையும்.

20.12.11 வரை 11-ல் சனி பகவான் நிற்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டு. அயல்நாட்டு பயணங்கள் திருப்தியாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை. எவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டாம். சிலரது சதியால் சொத்துகளை இழக்க நேரிடலாம். குடும்ப விஷயங்களை வெளியே சொல்லவேண்டாம்.

ஆவணி மாதத்தில் திடீர் பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலகிச் சென்ற உறவினரும் வலிய வந்து பேசுவர். புரட்டாசியில் புது வாகனம் அமையும். சேமிக்கத் துவங்கு வீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர் கள். அரசியல்வாதிகள், ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சிக்காரரை விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டிருந்த கல்யாணம் கைகூடி வரும்; ஆவணி, தை மாதங்களில் சிறப்பாக நடந்து முடியும். விடுபட்ட பாடத்தை எழுதி முடிப்பீர்கள். மாணவர்கள், சமயோசித புத்தியுடன் செயல்படுவது அவசியம். கெட்ட சகவாசத்தைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு பரிசு- பாராட்டு உண்டு.  

வியாபாரம்: சித்திரை, ஆவணி மாதங்களில் லாபம் உயரும். புதுப் புது வியாபார யுக்திகளை, சலுகைகளை நடைமுறைப்படுத்துவீர்கள். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.

புரட்டாசி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குனி மாதத்தில் தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்தியோகம்: உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வெகுநாட்களாக காத்திருந்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, 'தன் கையே தனக்குதவி’ என்பதை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்

வெள்ளையுள்ளம் கொண்டவர் நீங்கள். உங்களுடைய 9-வது ராசியில் கர புத்தாண்டு பிறப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். தடைகள்- தடுமாற்றங்கள் நீங்கும். முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். எல்லோருடனும் இணக்கமாகப் பேசுவீர்கள். 3-ஆம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில், கர வருடம் பிறப்பதால், பண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம், வருமானம் உயரும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

8.5.11 வரை குரு 4-ஆம் வீட்டில் இருப்பதால் டென்ஷன், வாகனச்செலவு வரக்கூடும். அம்மாவின் உடல்நிலை பாதிக்கும். 9.5.11 முதல் குரு 5-ல் நுழைவதால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வைகாசியில் உங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் வீடு களை கட்டும். சொத்து வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, நெஞ்சுவலி, முன்கோபம் அதிகரிக்கும். கேது 7-ல் நிற்பதால் தம்பதிக்கு இடையே பிரச்னைகள் வந்து நீங்கும். 16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் உடல் நலம் சீராகும். ஆனால் தூக்கம் கெடும். கேது 6-ல் நுழைவதால் திடீர் பண வரவு, யோகம் உண்டு. கடன் பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். எதிர் காலத்தை நினைத்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ஆவணியில் ஆடை- ஆபரணங்கள் சேரும். சகோதரியின் திருமணம் சிறப்பாக முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். 20.12.11 வரை 10-ல் சனி பகவான் நிற்பதால் வேலை அதிகரிக்கும். எனினும் விரைந்து முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும். 21.12.11 முதல், லாப வீடான 11-ல் சனி நுழைவதால் திடீர் யோகம், வருமான உயர்வு உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனம் வாங்குவீர்கள். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி வரைக்கும் செவ்வாய் 9-ஆம் வீட்டிலேயே தொடர்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். தந்தையாருடன் மன வருத்தம், அக்கம்பக்கத்தாரது அன்புத் தொல்லைகள் வந்துபோகும்.

கர வருட ராசிபலன்கள்

கன்னிப் பெண்களே, உங்களது முடிவுகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். எல்லா தோஷங்களும் நீங்கி சந்தோஷமாக திருமணம் முடியும். வயிற்று வலி, தலைச்சுற்றல் விலகும். மாணவர்கள், படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு- பாராட்டு பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கலைத் துறையினரின் கனவுகள் நனவாகும். பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீண் வதந்திகள் விலகும்.

வியாபாரம்: கடுமையான போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் சொந்த இடத்துக்கு கடையை மாற்ற முயற்சி செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக் கும். ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடனை முறையாகச் செலுத்துவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புரோக்கரேஜ், ஃபைனான்ஸ், தங்கம், மற்றும் உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்தியோகம்: திறமைகளை வெளிப்படுத்துவீர் கள். வைகாசி, ஆவணி மாதங்களில் எல்லாவற்றிலும் உயர்வு கிடைக்கும். ஐப்பசி, மாசி மாதங்களில் புதிய வாய்ப்புகள் கிட்டும். உங்களைக் குறைகூறும் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

அரசுப் பணியாளர்கள் பரபரப்புடன் காணப் படுவார்கள். வேலையை தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள். கணினித் துறையினருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, உங்களை வெற்றிக் கனியை சுவைக்க வைப்பதுடன், அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்

நீதிநெறி தவறாதவர் நீங்கள். யோகாதிபதி சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 2-ஆம் வீட்டில் நிற்கும்போது கர வருடம் பிறப்பதால், ஓரளவு பண வரவு உண்டு. ஆனால் 8-வது ராசியில் பிறப்பதால், அலைச்சலும் வீண் செலவுகளும் இருக்கும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இனிய  பேச்சால் இழுபறியான காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் வேலைச்சுமை, ஏமாற்றம், மன உளைச்சல், ரத்த அழுத்தம் வரக்கூடும்.

போராடி குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்விக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். ஆடை- அணிகலன்கள் சேரும். மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சித்திரை மாதத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வைகாசியில் பழைய உறவினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். 15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால் பயம், கோபம், தூக்கமின்மை, விரயச் செலவு, திடீர் பயணம் ஏற்படலாம். கேது 6-ல் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ஆம் வீட்டுக்கு வருவதால் உங்களின் தகுதி உயரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சொத்து வில்லங்கம் நீங்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5-ல் நிற்பதால் குழப்பம், நெருங்கிய உறவினர்களுக்குள் மனஸ்தாபம் வந்துபோகும். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். ஆனி மாதத்தின் முற்பகுதியில் நீண்ட கால ஆசைகள் பூர்த்தியாகும். ஆடி மாதம் கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

ஆவணியில் பணப் பற்றாக்குறை நீங்கும். புது வீடு-மனை வாங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனக் குழப்பங்களுக்குத் தீர்வு கிட்டும். புரட்டாசி மாதத்தில் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டாம்.

கர வருட ராசிபலன்கள்

கார்த்திகையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப் படுவர்; புதிய பொறுப்புகள் தேடி வரும். ஐப்பசி மாதத்தின் மத்தியப்பகுதி முதல், பங்குனி வரை செவ்வாய் 8-ஆம் வீட்டிலேயே தொடர்வதால் சகோதர வகையில் வருத்தங்கள், சொத்துப் பிரச்னைகள் வரக்கூடும். விபத்து, அறுவை சிகிச்சை, பணப் பற்றாக்குறை வந்து நீங்கும். சனி பகவான் 20.12.11 வரை 9-ஆம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. ஆனால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். 21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனி பகவான் உச்சமடைந்து 10-ஆம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால் எதிலும் வெற்றி கிட்டும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும்.

கலைத் துறையினரே, பெரிய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். கன்னிப் பெண்கள், தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் ஆனி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் முடியும். மாணவர்களுக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரம்: சித்திரை, ஆனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். லாபம் இரட்டிப்பாகும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பங்குதாரர்களுடனான பிரச்னை நீங்கும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. மாசி மற்றும் பங்குனியில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகம்: குறை கூறும் அதிகாரியும் ஆதரவாக மாறுவார். வேலை அதிகரிக்கும். சித்திரை, ஆனி மாதங்களில் பதவி - சம்பளம் உயரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் கிட்டும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த கர வருடம், வேலைச்சுமையால்  உங்களை வருந்தவைத்தாலும், அவ்வப்போது வெற்றியையும் வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதம்.

விரிவான சிந்தனையும், செயலும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் போதும் கர புத்தாண்டு பிறக்கிறது. எதிலும் வெற்றிதான். 8.5.11 வரை குரு 2-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். 9.5.11 முதல் குரு 3-ல் நுழைவதால் காரியத்தடை, டென்ஷன் அதிகரிக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். தம்பதிக்குள் அவ்வப்போது சச்சரவுகள் வந்து போகும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். உங்கள் ராசியை, சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கர வருடம் பிறப்பதால் மன இறுக்கம் குறையும்.

15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால் எதிலும் மகிழ்ச்சி பொங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புகழ், கௌரவம் கூடும். கேது 5-ல் நிற்பதால் பிள்ளைகளுடன் மன வருத்தங்கள் வந்து நீங்கும். டென்ஷன், கனவுத்தொல்லை வரக்கூடும். 16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச்சுமை இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. கேது 4-ல் நுழைவதால் புதிய முயற்சிகள் தடைப்பட்டு வெற்றியடையும். தாயாருக்கு மருத்துவச் செலவு வந்துபோகும். மின்சார, சமையலறை சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். பழைமையான புத்தகங்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய சித்திரை, வைகாசி மாதங்களில் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல், பங்குனி வரை செவ்வாய் 7-ஆம் வீட்டிலேயே தொடர்வதால் மனைவிக்கு அறுவைசிகிச்சை வரக்கூடும்.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டில் நல்லது நடக்கும். வாகனம் வாங்குவீர்கள். 20.12.11 வரை உங்கள் ராசிநாதனான சனி 8-ல் மறைந்து அஷ்டமத்துச் சனியாக நிற்பதால் சிறு விபத்துகள், மூட்டு வலி, நீரிழிவு நோய் மற்றும் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பயணங்களைத் தவிர்க்கவும். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக்கூடும்; கவனம் தேவை. ஆபரணங்களை இரவல் வாங்குவதோ கொடுப்பதோ வேண்டாம். ஜாமீன் போடுவதும் வேண்டாம்.

கர வருட ராசிபலன்கள்

21.12.11 முதல் ராசிநாதன் சனி பகவான் 9-ல் நுழைவதால் உடல்நலம் சீராகும். வீண் அலைச்சல் குறையும். தன்னம்பிக்கை பிறக்கும். ஆனால் தந்தையாருடன் சண்டை சச்சரவுகள், அவருக்கு உடல்நலக்குறைகள் வந்துபோகும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

கலைஞர்கள், சாதாரண வாய்ப்பையும் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். கன்னிப் பெண்கள், எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். நல்ல வேலை கிடைக்கும். கல்யாணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும். மாணவர்களுக்கு, படிப்பில் நாட்டம் பிறக்கும். கணிதத்தில் தடுமாற்றம் குறையும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

வியாபாரம்: புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடையை இடம் மாற்றுவீர்கள். தேங்கிய சரக்குகள் சித்திரை மாதத்தில் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் அமையும். சகோதர வகையிலான உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்: வேலை கூடும். முக்கிய ஆவணங் களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சித்திரையில் புது வேலைவாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். சட்டத்துக்குப் புறம்பாக  எவருக்கும் உதவ வேண்டாம். ஐப்பசியில் வெளிநாட்டு நிறுவனங்களால் ஆதாயம் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில் சாதித்துக் காட்டுவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் கர வருடம், முற்பகுதியில் ஓரளவு முன்னேற்றம்; மையப்பகுதியில் பணவரவு; இறுதிப் பகுதியில் அலைச்சலுடன், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

கர வருட ராசிபலன்கள்

பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

செய்நன்றி மறவாதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் பிறக்கும் கர வருடம், உங்களைத் தலைநிமிர வைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். 8.5.11 வரை ஜென்ம குரு இருப்பதால், உடல் நலம் பாதிக்கும். வீண் டென்ஷன் அதிகரிக்கும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் குரு நுழைவதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.

15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வு மனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். கேது 3-ஆம் வீட்டில் நுழைவதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால், கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சண்டை சச்சரவுகள் இருக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பழைய நண்பர்கள், உறவினர்களிடம் பகைமை வரக்கூடும். வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வங்கிகளுக்கு தவணை கட்ட முடியாமல் தர்மசங்கடத்தில் மூழ்க நேரும். 21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் இழப்பு, ஏமாற்றம் அதிகரிக்கும். வழக்குகளிலும் நிதானம் தேவை.

வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் திடீர் பண வரவு, திருமணம், வீடு, வாகன யோகம் யாவும் உண்டாகும். ஆடி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் தம்பதிக்குள் கருத்து மோதல்கள், விபத்து, வீண் விரயம் ஏற்படலாம். மார்கழி, தை மாதங்களில் செல்வாக்கு கூடும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பங்குனியில் புதிய வாகனம் அமையும். ஆபரணங்கள் சேரும்.

கர வருட ராசிபலன்கள்

ஐப்பசி மாத மத்தியில் இருந்து பங்குனி வரை செவ்வாய் 6-ஆம் வீட்டிலேயே தொடர்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். கைம்மாற்றுக் கடனை அடைப்பீர்கள். வீடு- மனை வாங்குவது- விற்பதில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். நீண்டகாலமாக செய்ய நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் சிறப்பாக முடியும். உயர்கல்வி குறித்த தடைகள் நீங்கும். வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.

மாணவ-மாணவிகள், அலட்சியத்தை கைவிடுங்கள். கடைசி நேரத்தில் படிக்கலாம் என்றில்லாமல், பாடங்களை தினமும் படித்து முடியுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில், போராடி இடம் பிடிப்பீர்கள்.

வியாபாரம்: மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறான முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளரை அதிகப்படுத்தப் போராட வேண்டி வரும். வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். ஏற்றுமதி- இறக்குமதி, கட்டடப்  பொருட்கள் மற்றும் ஹோட்டல் வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். அரசாங்கக் கெடுபிடிகள் குறையும்.

உத்தியோகம்: அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் நல்ல மாற்றம் வரும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. கணினித் துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். கலைஞர்களே, உங்களைப் பற்றிய கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் எல்லாம் நீங்கும்.

மொத்தத்தில் இந்த கர வருடம், ஒரு பக்கம்  உங்களை கோபப்பட்டு பேச வைத்தாலும், மறுபக்கம் பண வரவையும், செல்வாக்கையும் பெற்றுத்  தருவதாக அமையும்.