Published:Updated:

சாதகமாகட்டும் சார்வரி ஆண்டு... புத்தாண்டை வரவேற்க வீட்டிலேயே கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

விஷ்ணு
விஷ்ணு

உலகம் அசாதாரண சூழலில் இருக்கும் நிலையில் பிறந்திருக்கும் இந்த சார்வரி புத்தாண்டு எப்படி இருக்கும்?

நம் பாரத தேசத்தில் இரண்டு விதமான நாள்காட்டிகள் உண்டு. அவற்றில் ஒன்று சூரிய நாள்காட்டி. மற்றொன்று சந்திர நாள்காட்டி. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சூரிய நாள்காட்டியில் (சூர்யமானம்) புத்தாண்டின் தொடக்கமாகும். 

“மேடமென்னும் ராசியாம் அதனிற்கேளு

மேலான யசுவினி முதலாம்பாதம்

குலவியே கதிரவன்தான் வந்துதிக்க

வருச புருசன் அவதரிப்பானென்றே

பரிவுடன் உலகிற்கு நீ சாற்றே" என்று அகத்தியர் சொல்வதாக ஜோதிட சாத்திர நூல்கள் சொல்கின்றன. இந்த நாள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கேரளம், சிங்களம், பஞ்சாப், அசாம், ஒடிசா மக்களாலும் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ஒவ்வொன்றும் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடிகளைக் கொண்டது. ஆங்கில ஆண்டுகளில் இருப்பதைப் போன்ற லீப் மாதமோ லீப் வருடமோ தமிழ் ஆண்டுகளில் கிடையாது. மொத்தம் அறுபது விதமான ஆண்டுகளை வகுத்து அவற்றின் இயல்புகளையும் நம் முன்னோர் கணித்திருக்கிறார்கள். பிரபவ, விபவ என்று தொடங்கும் ஆண்டுகளில் 34 வது ஆண்டாக சார்வரி ஆண்டு வருகிறது.

வருடாதி வெண்பா

60 தமிழ் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் எப்படி இருக்கும் என்பது குறித்து இடைக்காடர் சித்தன் தன் வருடாதி வெண்பா என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலும் அந்தப் பலன்கள் தவறாமல் நடைபெறும் என்பது நம்பிக்கை. அப்படி அவர் எழுதியிருக்கும் சார்வரி ஆண்டுக்கான வெண்பா தற்போதைய சூழ்நிலையில் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே உள்ளது.  

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை

பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமன்றிச் சாவார் இயம்பு.

சிவபெருமான்
சிவபெருமான்

ஆனால், மனித சமூகத்தின் சிறப்பே துன்பங்கள் நேரும் காலத்தில் தன் புத்திக்கூர்மையால் வென்று வாகை சூடுவதுதான். பரிணாம வளர்ச்சியிலும் சரி ஆறாம் அறிவின் விரிவிலும் சரி மனிதன் உலகின் அனைத்து உயிர்களையும் விஞ்சி நிற்கக் காரணம் அவனது அறிவுப் பெருக்கம். 

ஜோதிட சாஸ்திரப்படி இந்த சார்வரி ஆண்டின் ராஜாவாக புத பகவான் விளங்குகிறார். எனவே நோய்கள், பஞ்சம் எனத் துன்பங்கள் சூழ்ந்தாலும் அனைத்தையும் மனிதன் தன் புத்திக் கூர்மையால் வென்று காட்டுவான் என்பதுதான் அறிஞர்கள் முன்வைக்கும் கணிப்பு.

நலம் தரும் மருந்து நீர்க் குளியல்

புத்தாண்டு தினத்தன்று மருந்து நீர் நீராடல் என்னும் வழக்கம் நம் மரபில் இருந்தது. இன்றும் சில பகுதிகளில் அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிரந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோரோசனை, மஞ்சள், திப்பிலி மற்றும் சுக்கு ஆகிய மூலிகைகள் கலந்த நீரில் நீராடுவதையே மருந்து நீராடல் என்று நம் மரபில் குறிப்பிட்டனர். இந்த மூலிகைகள் கலந்த நீர் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது. காலையில் எழுந்ததும் இந்த நீரில் நீராடுவது கட்டாயம் செய்ய வேண்டிய கடமையாக இருந்தது. ஆனால் நாகரிக உலகில் நாம் இந்த வழக்கத்தைக் கைவிட்டுவிட்டோம். ஆனால் அண்டை நாடான இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இன்னும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஏர் பூட்டி உழவு
ஏர் பூட்டி உழவு

கண் விழிக்க வேண்டிய விஷுக்கனி

அண்டை மாநிலமான கேரளத்தில் விஷுக்கனி காணுதல் என்னும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். வருடப் பிறப்புக்கு முதல் நாள் இரவில் பூஜையறையில் நிலைக் கண்ணாடி வைத்து தட்டில் பழங்கள், பணம், நகைகள் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை, வீட்டின் மூத்தவர் எழுந்து, சுவாமிக்கு அருகில் உள்ள பொருள்களைப் பார்த்த பிறகு, குளித்துவிட்டுக் குத்துவிளக்கு ஏற்றுவார். பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எழுந்துவந்து அதைக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதையே ‘விஷுக்கனி காணல்’ என்கிறார்கள். இதன்மூலம் புது வருடம் முழுவதும் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

குறைவில்லா விளைச்சலைத் தரும் ஏர் மங்களம்

கிராமங்களில் இந்த நாளில் ஏர்க் கலப்பையில் மாட்டினைப் பூட்டி வயலுக்கு அழைத்துப்போய் உழுது வருவார்கள். இதற்கே ஏர் ஓட்டம் அல்லது ஏர் மங்களம் என்று பெயர். ஆண்டின் முதல் நாளில் ஏரைப் பிடித்து உழுவது மிகவும் உன்னதமான செயலாகக் கருதப்பட்டது. ஆண்டு முழுவதும் நமக்குக் குறைவில்லாத விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புண்ணிய பலன்களைத் தரும் பஞ்சாங்க படனம்

முந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. குறைந்த பட்சம் புத்தாண்டு தினத்திலாவது பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு என்கிறார்கள். பஞ்சாங்கத்தை வைத்து இன்றைய நாளில் பூஜை செய்பவர்களும் உண்டு. இப்படி பூஜை செய்து பஞ்சாங்கம் படிப்பதன் மூலம் அந்த ஆண்டில் நற்பலன்களே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விஷ்ணு
விஷ்ணு

பெரியவர்களின் ஆசியை வழங்கும் கை விசேடம் 

நல்ல நாள்களின் சிறப்புகளில் ஒன்று மூத்தோரின் ஆசியைப் பெறுவது. குளித்து, தூய  ஆடை அணிந்து வீட்டிலேயே இறைவனை வணங்கிப் பிறகு வீட்டிலுள்ள பெரியவர்களை வணங்க வேண்டும். அப்போது பெரியவர்கள் ஆசி வழங்குவதோடு கூடவே அன்பளிப்புப் பணமும் தருவார்கள். அதற்கு கை விசேடம் அல்லது கை நீட்டம் என்று பெயர். இவ்வாறு வாங்கும் பணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதி அதைச் சேர்த்துவைக்கும் பழக்கமும் குழந்தைகளிடம் உண்டு.

வேப்பம் பூ பச்சடி தொடங்கி அறுசுவை உணவு

இந்த நாளில் முதன் முதலில் வேப்பம்பூ, உப்பு, மாங்காய், வெல்லம், புளி ஆகியவற்றைச் சேர்த்து செய்த வேப்பம்பூ பச்சடியைத்தான் உண்பார்கள். வேப்பம்பூ பச்சடியில் இருக்கும் மாறுபட்ட சுவைகளைப் போலவே வாழ்வில் ஏற்படும் இன்ப - துன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மாறுபட்ட அனுபவங்களை சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே இதன் தாத்பர்யம். இந்த நாளில் மரபான காய்கறிகளைக் கொண்டு செய்யும் உணவு வகைகளையே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சார்வரி ஆண்டு சாதகமாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

இன்று உலகம் இருக்கும் அசாதாரண சூழலில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு தினத்தில் நாம் கட்டாயம் 5 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒன்று : இறைவழிபாடு.

காலையில் எழுந்து நீராடி சுவாமி படத்துக்கு முன்பாக விளக்கேற்றி, கிடைத்த மலர்களைச் சாற்றி வழிபட வேண்டும். அப்போது தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகளைப் படிக்கலாம்.   

இரண்டு : நிவேதனம்

கிடைக்கும் பழங்கள் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து சுவாமிக்குப் படைக்க வேண்டும். கூடவே தவறாமல் வேப்பம்பூ பச்சடி செய்ய வேண்டும். வேப்பங்கொழுந்துகளும் நிறையக் கிடைக்கும் காலகட்டம் என்பதால் அதைக் கட்டாயம் உணவில் பயன்படுத்த வேண்டும்.

மூன்று : பெற்றோரின் ஆசி

பெற்றோர் மற்றும் மூத்தோரின் ஆசியே நம்மை வழிநடத்தும் சக்தி. தினமுமே பெற்றோர் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழக்கம் பெரும்பாலும் இன்று இல்லை. எனவே குறைந்தபட்சம் இந்த நல்ல நாளிலாவது பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். பெற்றோர் மனம் குளிர்ந்தால் அந்த இறைவனின் அருள் கட்டாயம் கிடைக்கும்.

குரு பகவான்
குரு பகவான்

நான்கு : விஷ்ணு வழிபாடு

நம் அறிவு கூர்மையாகச் செயல்பட புதபகவானின் அருள் வேண்டும். எனவே இந்த ஆண்டைக் கட்டாயம் விஷ்ணு வழிபாட்டோடு தொடங்க வேண்டும்.  பெருமாள் படத்துக்கு துளசி சாத்தி வழிபடுவது நல்லது. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது அதைக் கேட்பது மிகவும் பயனுள்ளது.

ஐந்து : குருவின் அருள் பெறல் 

குருபகவான் அதிசாரத்தில் இருக்கும் காலத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே குருவின் அருளைப் பெற்றுத்தரும் சில விஷயங்களைச் செய்யலாம்.

பூஜைகளில் சந்தனம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது, நெற்றியில் சந்தனம்  இட்டுக்கொள்ளவது, சந்தன மாலை வைத்திருப்பவர்கள் அதை அணிந்துகொள்வது ஆகியவற்றைச் செய்யலாம். தங்கம் குருவுக்கான உலோகம் என்பதால் சிறிய அளவில் தங்க நகை வைத்திருந்தாலும் அதைக் கட்டாயம் புத்தாண்டு தினத்தில் அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் மற்றும் வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும். இது மங்களமாகவும் கிருமி நாசினியாகவும் செயல்படும். மஞ்சள் மற்றும் சிவப்பு ஆடையிருந்தால் அதை அணிந்துகொண்டு வழிபாடு செய்யுங்கள். குருவின் காரகத்துவம் பெற்ற இந்தப் பொருள்களின் மூலம் குருபகவானின் பரிபூரண அனுக்கிரகம் நமக்குக் கிடைத்து, வரும் ஆண்டு நமக்குச் சாதகமான ஆண்டாக மாறும்.

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அடுத்த கட்டுரைக்கு