ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

குரு பகவானின் பெயர்ச்சியால் ஆட்சி மாற்றம் நிகழுமா?

குரு பகவானின் பெயர்ச்சியால் ஆட்சி மாற்றம் நிகழுமா?

குரு பகவானின் பெயர்ச்சியால் ஆட்சி மாற்றம் நிகழுமா?

நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (8.5.2011/9.5.2011), சுக்லபட்சம் சஷ்டி திதியில், புனர்பூச நட்சத்திரம், சூலம் நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில், குரு ஹோரையில், சூரிய உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு, சரியான நேரம் பின்னிரவு மணி 1.12-க்கு உபய வீடான மீனத்தில் இருந்து சர வீடான மேஷத்துக்குள் நுழைகிறார் குரு பகவான்.

மெய்ஞ்ஞானம், வேதங்கள் மற்றும் உபநிடதங்களுக்கு உரிய கிரகமான குரு பகவான், 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். சட்டம் ஒழுங்குக்கு அதிபதியாக விளங்கும் அங்காரகனின் வீடான மேஷத்தில் குரு அமர்வதால், காவல்துறை நவீனமயமாகும். களையெடுப்பு அதிகமிருக்கும்.

##~##
குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகளின் ஆணை கடுமையாக இருக்கும். நீதிமன்றங்களின் தீர்ப்பால், அரசியல்வாதிகள் சிலரது எதிர்காலம் கேள்விக்குறியாகும். மண் வளம் பேணவும், ஆற்று மணலைப் பாதுகாக்கவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும் மலை, குன்று, ஓடைகளைப் பராமரிக்கவும் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

21.12.2011 முதல் 16.5.2012 வரை குருவின் மீது சனியின் பார்வை விழுவதாலும், 4.11.11 முதல் 23.6.2012 வரை செவ்வாய் சிம்மத்திலேயே அமர்வதாலும் விளை நிலங்கள் சுருங்கும். பூமி விலை உயரும். தரிசு, நத்தம், புறம்போக்கு நிலங்கள் அரசால் சீரமைக்கப்படும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்படைவார்கள். மொசைக், டைல்ஸ், கிரானைட், மார்பிள் ஆகியவற்றின் விலை குறையும். மரத்தின் விலை அதிகரிக்கும்.

காடுகளில் தீவிபத்து நிகழும். அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகும். அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும்.

எல்லையில் சீனாவின் குறுக்கீடு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான், சீனா உதவும். ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் வலுவற்ற ஆட்சிநிலை உருவாகும். கூட்டணி மாற்றங்களால் ஆட்சிக் கவிழ்ப்புகள் இருக்கும்.

7.9.11 முதல் 14.12.11 வரை குரு வக்கிரம் அடைவதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும். சகோதர ஒற்றுமை குறையும். ரத்தப் புற்று நோய், ஹீமோகுளோபின் குறைவு அதிகரிக்கும். புதுவகை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பறவைக் காய்ச்சல் மீண்டும் வர வாய்ப்புள்ளது.

இந்தியாவின் ஜாதகத்துக்கு எதிர்மறை வீட்டில் குரு அமர்வதால், அரசின் வெளிநாட்டு கடன் அதிகரிக்கும். வெளியிலிருக்கும் கறுப்புப் பணத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

மூத்த அரசியல் தலைவர்கள் பாதிக்கப்படுவார்கள். ரசாயன ஆலைகள் மற்றும் அணுமின் நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் வரும். தானிய உற்பத்தி குறையும். இந்தியாவின் ஏற்றுமதி திறன் குறையும்.

உலகெங்கும் ஜனநாயகம் தழைக்கும். ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு எதிராக மக்கள் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும்.

போலி ஆன்மிகவாதிகள் பிடிபடுவார்கள். மடாதிபதிகளின் சொத்தைப் பெற ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்கள். ஆண் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அங்கங்களுடன் குழந்தைகள் மற்றும் ஜீவராசிகளின் பிறப்புகள் இருக்கும். கல்வித் துறை நவீனமாகும். கல்விக் கட்டணங்களைச் சீரமைக்க கடுமையான சட்டம் வரும். வழக்கறிஞர்கள் பாதிப்படைவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உலக மக்களிடையே உரிமைக்காகப் போராடும் குணத்தையும், அடக்குமுறையை எதிர்க்கும் தைரியத்தையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: குரு பகவான் பூமி, சகோதரம் மற்றும் ரத்தத்துக்கு உரிய கிரகமான செவ்வாயின் வீட்டில் அமர்வதால், சொத்து சண்டையை சுமுகமாக முடித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களுடன் சமாதானமாக இருங்கள். முடிந்த வரையிலும் குறுக்கு வழியில் வரும் செல்வத்தைத் தவிர்க்கப்பாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள். குரு பகவானின் அருளாசி உங்கள் இல்லம் தேடி வரும்.