Published:Updated:

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட- ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்!

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள்

சுவினி, பரணி நட்சத்திரங்களைத் தொடர்ந்து கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்!

நட்சத்திர தேவதை: இரண்டு முகங்களும் நான்கு கரங்களும் சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்.
வடிவம் : தீக்கொழுந்துகள் எரிவது போன்ற வடிவமுடைய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள்: ஆ, இ, ஊ, ஏ.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் :
இருபத்தேழு நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அரசாங்கப் பதவிகளுக்கும் அதிகாரத்துக்கும் உரிய கிரகமான சூரியனின் அம்சத்தில் பிறந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் 2, 3, 4 - ம் பாதங்களைக் கட்டடக் கலைக்கும், வாகனங்களுக்கும் அதிபதியான சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துகிறார்.
நட்சத்திர மாலை என்னும் நூல், நல்லது, கெட்டது அறிந்து நியாயத்தை நிலை நாட்டும் நீதிமான்களாகவும், குணவான்களாகவும், கல்வி மீது விருப்பம் உள்ளவர்களாகவும் விளங்குவீர்கள் என்கிறது.

‘தேஜஸ்வி...’ என்கிறது யவன ஜாதகப் பாடல். பார்ப்பதற்கு அழகாகவும், தேஜஸ் உடையவர்களாகவும், கம்பீரமாகவும் இருப்பீர்கள். 
பிருகத் ஜாதக நூல், 'மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்' என்று கூறுகிறது. 
ஜாதக அலங்கார நூல், ‘கொள்ளும் ரச வர்க்கத்தில் பிரியன்; அற்ப நித்திரையன்; கூறுஞ் செஞ்சொல்...’ என்கிறது. அதாவது இனிப்பை விரும்பி உண்பவன், ஆழ்ந்த உறக்கமில்லாதவன், அரசர்களுக்குப் பிரியமானவன்' என்று பொருள்.

கார்த்திகை நட்சத்திரம் முதலாம் பாதம் மேஷ ராசியிலும், 
2, 3, 4 - ம் பாதங்கள் ரிஷப ராசியிலும் வரும்.
மொத்தத்தில், கார்த்திகை நட்சத்திரக்காரர்களான நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்கள். சற்று உயரமும், நடுத்தர உடல் வாகும், பரந்த நெற்றியும் கொண்டவர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பீர்கள். தசை பலத்தைவிட எலும்பு பலம் உங்களுக்கு அதிகம். எதையும் வெளிப்படையாகப் பேசுவீர்கள். குழந்தைப் பருவத்தில் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து வீசும் அளவுக்கு அடிக்கடி கோபம் வரும். சூடான உணவில் மட்டுமே விருப்பம் இருக்கும். பழைய உணவுகளைத் தொடமாட்டீர்கள். பசியைக் கொஞ்சம்கூடப் பொறுக்க மாட்டீர்கள். 
பள்ளிப் பருவத்தில் கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களில் பலர், சாரணர் இயக்கத்தில் பங்கேற்பார்கள்.

காரசாரமான விவாதங்களில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர், சிறந்த வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் திகழ்வார்கள்.
சிலர் மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்குபவர்களாகவும், மக்களுக்கு சமூக சேவை செய்யக்கூடிய பெரிய பதவியை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலர் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. சித்தர்கள் மற்றும் அரசர்களில் சிலர் மேஷ ராசியில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
2, 3, 4-ம் பாத, ரிஷப ராசியில் பிறக்கும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மக்களை வழிநடத்திச் செல்பவர்களாக இருப்பார்கள். முழு சுதந்திரமுள்ள இடத்தில் வேலை கிடைக்கும். மற்றவர்கள் உங்களைக் கட்டுப்படுத்தினாலோ கட்டாயப் படுத்தினாலோ உத்தியோகத்தை உடனே உதறித் தள்ளிவிடுவீர்கள். அதனால் உங்களில் பலர், மத்திய வயதில் நிறுவனங்களை நிறுவி நடத்துவீர்கள். உணவு, கெமிக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள்.

காதல் விவகாரத்தில் ஒதுங்கியே நிற்பீர்கள். திருமண வாழ்க்கையிலோ கறாராக இருப்பீர்கள். பலர், மனைவியிடம்கூட விட்டுக் கொடுத்துப்போக மாட்டீர்கள். 
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அழுத்தமான, ஆழமான, கொள்கை உடையவர்களாக இருப்பீர்கள். பெரிய கனவுடன் பிள்ளைகளை வளர்ப்பீர்கள்.
அளவுக்கு அதிகமாக ஆடை, ஆபரணங்களை அடுக்கி வைப்பதில் ஆர்வம் இருக்காது. ஆடம்பரமாக இல்லாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். 
கனவு உலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. தன் சக்திக்கு முடிந்ததை செய்து முடிப்பதில் திறமையானவர்கள் நீங்கள்.
அதீதமான தெய்வ பக்தி உண்டு. ஆனால், தெய்வ பக்தியைக் காட்டிலும் தாய், தாய் நாடு, தாய் மொழியின் மீது அதிகப் பாசம் இருக்கும். 33 வயது முதல் உங்களுடைய வாழ்வில் ஏற்றம் உண்டாகும். முன்பின் சம்பந்தமில்லாதவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். மலேரியா, இதயநோய், ஒற்றைத் தலைவலி ஆகியவை வந்து நீங்கும். உங்களுக்கென ஒரு தனிப் பாதையை அமைத்துக்கொண்டு பயணிக்கும் நீங்கள், நீண்ட வாழ்வு வாழ்வீர்கள்.

நட்சத்திரத்தின் காரகத்துவங்கள்:
கார்த்திகை 1 - ம் பாதம்
ஆளும் உறுப்புகள்    :    தலை, கண்கள்
கார்த்திகை  2, 3, 4 பாதங்கள் : முகம், கழுத்து, தாடை.
பார்வை    : கீழ்நோக்கு.
நிறம்    : சிவப்பு.
இருப்பிடம்    : சூன்யப் பிரதேசம்.
கணம்    : ராக்ஷஸ கணம்.
குணம்    : மிச்ரம்.
பறவை    : மயில்.
மிருகம்    : பெண் ஆடு.
மரம்    : பாலுள்ள அத்திமரம்.
மலர்    : மல்லிகை.
நாடி    : வாம பார்சுவ நாடி.
ஆகுதி    : அன்னம்.
பஞ்சபூதம்    : நிலம்
நைவேத்தியம்    : தயிர் சாதம்.
தெய்வம்    : முருகன்.
அதிர்ஷ்டம் தருபவை: 
அதிர்ஷ்ட எண்கள்        : 1, 6, 9.
அதிர்ஷ்ட நிறங்கள்        : மெரூன், வெளிர் சாம்பல்.
அதிர்ஷ்ட திசை        : கிழக்கு.
அதிர்ஷ்டக் கிழமைகள்    : ஞாயிறு, வியாழன்.
அதிர்ஷ்ட ரத்தினம்        : ஸ்டார் ரூபி
அதிர்ஷ்ட உலோகம்    : தங்கம்
கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்:
கார்த்திகை முதல் பாதம் (மேஷ ராசி) பரிகாரம்: பழநி முருகனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

கார்த்திகை இரண்டாம் பாதம் (ரிஷப ராசி) பரிகாரம்: சென்னைக்கு மேற்கேயுள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீவண்டார் குழலியம்மை உடனுறை ஸ்ரீஊர்த்தாண்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குதல் நன்று.
கார்த்திகை மூன்றாம் பாதம் (ரிஷப ராசி) பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஏகாதசி திதியில் வணங்கினால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
கார்த்திகை நான்காம் பாதம்  (ரிஷப ராசி) பரிகாரம்: திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாழக்கிழமையில் வணங்குவது  நல்லது.
கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கினால், வெற்றிபெறும் செயல்கள்: சிலம்பாட்டம், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட, கடன் பைசல் செய்ய, சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட, பழைய வாகனம் விற்க மிகவும் ஏற்ற நட்சத்திரம்.

அடுத்த கட்டுரைக்கு