Published:Updated:

மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக ரீதியான நடைமுறைகள் பரிகாரங்கள்!

மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைத் தொடர்ந்து, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

மிருகசீரிஷம்
நட்சத்திர தேவதை:  பத்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் சந்திரன்.
வடிவம் : மானின் தலை வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள்  : வே, வோ, கா, சீ

மிருகசீரிஷம் பொதுவான பலன்கள்: 

1, 2 ம் பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும், 3, 4 - ம் பாதங்கள் சுய முயற்சி கிரகமான புதனின் ராசியான மிதுனத்திலும் அடங்கும். ஆகவே, இந்த நட்சத்திரத்தில் முதல் இரண்டு பாதத்தில் பிறந்தால் ரிஷப ராசிக்காரர்களாகவும், மூன்று, நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால், மிதுன ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள். 

ரத்த பந்தங்களுக்குரிய கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், மொழி, இனப்பற்று அதிகம் உடையவர்கள். கடல் கடந்து கண்டம் விட்டு கண்டம் சென்றாலும், பிறந்த ஊரை அதிகம் நேசிப்பார்கள்.
நட்சத்திர மாலை என்னும் நூல், ‘திருந்திய நடக்க வல்லன்; தேசம் போய்த் திரிய வல்லன்; அருந்தவத்தோர்க்கு நல்லன்; ஆயுதம் பிடிக்க வல்லன்...’ என்று கூறுகிறது. அதாவது தன்னைத்தானே வழிநடத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் பயணப் பிரியராகவும் இருப்பார்கள் என கூறுகிறது. 

யவன ஜாதகம், ‘உத்ஸாஹி...’ என்கிறது. பிருஹத் ஜாதகம், ‘சபலச் சதுரரோபீரு...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் சபல புத்தி உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது.

இந்த நட்சத்திரம் செவ்வாயின் சாரம் பெற்ற நட்சத்திரம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் பொதுவான குணங்கள் சில இருக்கின்றன. அசாத்தியத் துணிவு உள்ளவர்களாக, எதற்கும் பயப்படாதவர்களாக இருப்பார்கள். திடமான நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

இவர்கள் அழகாகவும் வலிமையாகவும் இருப்பார்கள். விரிந்த நெற்றியும் பரந்த தோள்களும் இருக்கும். கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் கவிதை, கட்டுரைகள் எழுதுபவர்களாகவும் இருப்பார்கள். உயர்ந்த பண்பும் தாய், தந்தையிடம் அதிக பாசமும் இருக்கும்.

யார் சொல்லுக்கும் கட்டுப்படாதவர்கள். சுயசிந்தனையோடு தன்னிச்சையாக,  எடுத்த காரியத்தை முடிக்கும் தைரியமும்  இவர்களுக்கு உண்டு. அதேசமயம் மற்றவர்களிடம் வணக்கமுடையவர்களாக இருப்பார்கள்.

தவறைக் கண்டால் தயக்கமின்றித் தட்டிக் கேட்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும். சிறு வயதிலேயே ராகு திசை வருவதால், கல்வி தடைப்படும். அல்லது இளங்கலைப் பட்டம் ஒரு பாடப் பிரிவில் பெற்று முதுகலை, மற்றொரு பாடப் பிரிவில் பெற நேரிடும். தாவரவியல், விலங்கியல், அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகள் ஒன்றில் புகழ் பெறுவார்கள். 

உத்தியோகத்தில் நெறி முறை தவறாதிருப்பார்கள். உரிய வயதிலேயே திருமணம் முடியும். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பார்கள்.
கற்பூர புத்தி என்பதுபோல் எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, தலைமை தாங்கக்கூடிய தகுதி இவர்களுக்கு  எளிதில் கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாததால் கணவன், மனைவி ஒற்றுமை குறைவாக இருக்கும். அதனால் மனக்கசப்பு ஏற்படும்.

பெரும்பாலோர், வெளிநபர்களிடம் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு வீட்டில் மனைவி, மக்களிடம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வீட்டில் கறாராக நடந்துகொள்வார்கள். மனைவி வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். 

ஒரு சிலருக்குப் படிப்பு, பணம், பதவி போன்றவை குறைவாக இருந்தால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தான் நிறைவாக இருப்பதுபோல் நடந்து கொள்வார்கள். தங்களுடைய கருத்துகளை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும் திறமைசாலிகள் இவர்கள்.

வாகனங்களை வேகமாக இயக்குவதில் அதிக விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். கவனித்தால், சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டியை இயக்கிச் செல்பவர்கள் பெரும்பாலும் மிருகசீரிஷத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். வயிற்றுவலி, குடல் ஏற்ற இறக்கம், நீரிழிவு, வாதம் போன்ற நோய்கள் வந்து, நீங்கிவிடும். நீண்டகாலம் வாழ்வார்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் நான்கு பாதங்களில் பிறந்தவர்களுக்கான  பரிகாரங்கள்:
முதல் பாதம்: 
கும்பகோணம் அருகிலுள்ள, தந்தைக்குப் பாடம் சொன்ன தனயனான சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்: 
சென்னை, பல்லாவரத்துக்கு அருகிலுள்ள, திருநீர்மலை ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்: 
சென்னை, திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புதன்கிழமைகளில் வணங்குவது நல்லது.

நான்காம் பாதம்: 
சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி உடனுறை ஏரிகாத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்டராமனை வணங்குவது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு