Published:Updated:

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்!

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

அசுவினி, பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம் நட்சத்திரங்களைத் தொடர்ந்து, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : புனர்வசு தேவி என்னும் பெயருடைய அதிதி.
வடிவம : 5 நட்சத்திரங்களைக் கொண்ட வில் வடிவ நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள் : கே, கோ, ஹ, ஹி.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :

உலகையே தன் புன்னகையாலும் தியாகத்தாலும் சத்தியத்தாலும் தன் வசப்படுத்திய ஸ்ரீராமபிரான் அவதரித்த புனர்பூச  நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், ஒழுக்கசீலர்கள். நட்சத்திர மாலை எனும் நூல், ‘நெய்யொடு பால் விரும்பும், நிரம்பிய கல்வி கற்கும், பொய்யுரையொன்றுஞ் சொல்லான் , புனர்பூச நாளினானே...’ என்கிறது. அதாவது பால், மோர், நெய் இவற்றை விரும்பி உண்பவர்களாகவும் எப்போதும் உண்மையையே பேசுபவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பொருள். 

ஜாதக அலங்காரம், ‘திருந்திய சொல் சாதுரியன்... விசால புயன், சிக்கனத்தான், பரிந்தருண புத்திமான், பொய் சொல்லான், பித்தமுளன், பலருக்கு நேயன்...’  அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்தமாகப் பேசுவார்கள்; பருத்த தோள்களை உடையவர்கள்; அதிக தூரம் நடப்பவர்கள் என்று பகர்கிறது.

 தனகாரகன், புத்திகாரகன், வேதவித்தகன் என்றெல்லாம் அழைக்கப்படும் குருவின் சாரம் பெற்றுள்ளது இந்த நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வார்கள். தெய்வீகம் நிறைந்திருக்கும். இரக்ககுணம் கொண்டிருப்பார்கள். ஆனால், எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். உலகமே மாறினாலும், இவர்கள் மாற மாட்டார்கள்.

தன்மானச் சிங்கங்கள். இலவசமாக எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டினி கிடக்க நேர்ந்தாலும், சத்தியம் பிறழ மாட்டார்கள். மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், செய்த உதவியை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அன்னதானம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள். வாக்கு சாதுரியத்தால் பல காரியங்களைச் சாதிப்பார்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே நல்லவரா, கெட்டவரா, அவருடைய நோக்கம் ஆகியவற்றை எடைபோட்டுவிடும் ஆற்றல்மிக்கவர்கள்.

முதல் மூன்று பாதம் மிதுன ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் வரும்.  கடக ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் உயரமாகவும், நண்டைப் போல் வேகமாக ஓடுபவர்களாகவும் இருப்பார்கள்; திட்டமிட்ட செயல்களை தக்கசமயத்தில் செய்து முடித்துவிடுவார்கள். மற்றவர்களை நம்பவே மாட்டார்கள். ஆதலால் எல்லாவற்றையும் தாங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். 

யாருக்கும் அஞ்சாமல் நேர்மையுடன் கம்பீரமாக வாழ்வார்கள். பித்த சரீரமாக இருப்பதால், எப்போதும் உடல் நலத்தில் ஏதாவது சின்னஞ்சிறு குறைகள் இருந்துகொண்டே இருக்கும். தேவை ஏற்பட்டால் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். மனைவி, மக்களின் உணர்வுகளையும் ஆசைகளையும் அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள்.

பெண் குழந்தைகள், பெண் தெய்வங்களை அதிகம் விரும்புவார்கள். கூட்டத்தில் இருந்தாலும், இவர்கள் மனம் தனியாக எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். வலியச் சென்று யாரிடமும் பேச மாட்டார்கள். பெற்றோருக்காகவும் உடன்பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள்.

ஏட்டறிவு, எழுத்தறிவு இவற்றைக் காட்டிலும் அனுபவ அறிவு இவர்களிடம் அதிகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களைவிட, தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள்தான். 37 வயதிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்காயுளுடன் வாழ்வார்கள்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

புனர்பூசம் நட்சத்திரம்  முதல் பாதம் பரிகாரம்:
விருத்தாசலம், மணவாள நல்லூரில் வீற்றிருக்கும்
கொளஞ்சியப்பரை உத்திர நட்சத்திர நாளில் வணங்குவது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரம் 2 -ம் பாதம் பரிகாரம்:
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானை  புனர்பூச நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.

புனர்பூசம் நட்சத்திரம்  3- ம் பாதம் பரிகாரம்:
மதுரை ஸ்ரீசொக்கநாதர், மீனாட்சியம்மையை புதன்கிழமையில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

புனர்பூசம் நட்சத்திரம் 4 - ம் பாதம் பரிகாரம்:
கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகையை திங்கட்கிழமையில் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 

அடுத்த கட்டுரைக்கு