Published:Updated:

பூரம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள் பரிகாரங்கள்! #Astrology

பூரம் நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட பரிகாரங்கள்!
பூரம் நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட பரிகாரங்கள்!

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவை தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவை தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மகம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை: சூரியனின் அம்சமும் புகை நிற மேனியை உடையவரும் சக்தி ஆயுதத்தை ஏந்தியவருமான அர்யமான்.

வடிவம் : கட்டில் கால்களைப் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் தொகுப்பு.

எழுத்துகள் : மோ, ட, டி, டு.

பூரம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :

இந்த நட்சத்திரத்தின் அதிபதி பெண்ணாதிக்கம் உள்ள சுக்கிரன். சூரியனின் ராசி. ‘பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்’ என்று ஒரு வாக்கு இருக்கிறது.

நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள்; ஏற்றுமதி இறக்குமதியால் ஆதாயம் பெறுபவர்கள்; கல்வியில் அக்கறையுள்ளவர்கள்; கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லக்கூடியவர்கள் எனக் கூறுகிறது நட்சத்திர மாலை.

ஜாதக அலங்காரம், ‘இங்கிதமான பேச்சையும் சிவந்த கண்களையும் உடையவர்கள், பகட்டான வாழ்வை விரும்புபவர்கள் என்று கூறுகிறது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம், ஓர் எதார்த்தம் எப்போதும் இருக்கும். ஆன்மிகத்தைத் தேடி அவ்வப்போது மனம் அலையும். காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரம் இருக்கும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டு இருப்பார்கள். கருணை மனம் கொண்டவர்கள். இனிமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் வெற்றிகொள்வார்கள். பின் விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன் படைத்தவர்கள். செல்வச் செழிப்புடன் வாழ ஆசைப்படும் இவர்கள், சற்று முன்கோபிகள்.

‘தத்துவங்களைக் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தாய், தந்தையரைப் பேணக் கூடியவர்கள்’ என்று காக்கேயர் நாடி என்ற நூல் கூறுகிறது. எப்போதும் பம்பரமாகச் சுழலக் கூடியவர்கள். எந்த வேலையையும் உடனே செய்து முடித்து விடுவார்கள். மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள்.

அறிவுக் கூர்மையும், பகைவரை வெல்லக்கூடிய திறமையும் பெற்றிருப்பார்கள். கடினமான உழைப்பால் சம்பாதித்துப் புகழ் பெறுவார்கள். ஆடை, அணிகலன் அணிவதில் ஆர்வம் அதிகமுள்ளவர்கள்.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

வாகனங்களை வேகமாக இயக்கக்கூடியவர்களாகவும் பயணப் பிரியர்களாகவும் இருப்பார்கள். 30 வயதுக்கு மேல் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வீடு, மனை, சொத்துகள் வாங்கும் எல்லா வளங்களையும் பெறுவீர்கள். பங்குச் சந்தையில் அதிக லாபம் அடைவார்கள்.

குறுக்கு வழியில் பணம் சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. செய்நன்றி மறக்காத குணம் பெற்றிருப்பார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள். நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

தானதர்மம் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள், பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிவார்கள். பரஸ்பர நட்பை வளர்த்துக் கொள்வார்கள். நல்ல வியாபாரியாகவும் பெரிய குடும்பஸ்தராகவும் அரசியல் ஆதாயம் பெறுபவராகவும் இருப்பார்கள்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

பூரம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:

சென்னை திருவான்மியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மருந்தீஸ்வரரை வணங்குதல் நலம்.

பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:

திருச்சிராப்பள்ளியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மட்டுவார் குழலியம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானேஸ்வரரை வணங்குதல் நலம்.

பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் பரிகாரம் :

திருநெல்வேலியில் தாமிர சபையில் வீற்றிருக்கும் ஸ்ரீகாந்திமதி அம்மை உடனுறை நெல்லையப்பரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம் பரிகாரம்:

பிள்ளையார்ப்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து தேய்பிறை சதுர்த்தசி திதியில் வணங்குதல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு