Published:Updated:

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள் பரிகாரங்கள்! #Astrology

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. உத்திரம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : ஏழு வண்ணமுடைய குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் சூரிய பகவான்.

வடிவம் : உள்ளங்கை வடிவமுடைய ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள் : பூ, ஷ, ந, ட

அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள்:

சந்திரனின் ஆதிக்கத்தில் இரண்டாவது நட்சத்திரம் இது. நினைவாற்றலுக்கும் கற்பனைக்கும் உரிய கிரகமான சந்திரனின் ஆதிக்கத்திலும், சுயமுயற்சி, தன்மானம் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

ஜாதக அலங்காரம், அடிக்கடி பசி உடையவனாகவும், மக்கள் வணங்கும்படியாகவும், வீரம், அழகு, கடின சுபாவம், நல்ல புத்தி ஆகியவை உடையவராகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

நட்சத்திர மாலை என்னும் நூலில், கள்ளங்கபடமில்லாத வெகுளியாகவும் வியாபாரியாகவும் கடின உழைப்பாளியாகவும் வலிமையானவனாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

அழகிய வட்ட முகத்துடன், சராசரி உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிறந்த நகைச்சுவையாளராகவும் பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருப்பார்கள்.

மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள். எந்த முடிவானாலும் ஒருமுறையாவது அவருடன் கலந்தாலோசிக்காமல் செய்ய மாட்டார்கள். கொள்கையில் கொஞ்சம் அழுத்தமானவர்களாக இருப்பார்கள்.

பிற மதத்தினரை மதிக்கும் மத நல்லிணக்கம் இவர்களிடம் உண்டு. வேத சாஸ்திர அறிவு பெற்றிருப்பார்கள். பிறருக்கு எளிதில் உதவுவார்கள். அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

செல்வச் செழிப்புடன் வாழும் இவர்களில் பலர் சித்தர், பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் ஆகியோரைப் போற்றுபவர்களாகவும் பரிமளப் பிரியர்களாகவும் இருப்பார்கள். வெளியூர்ப் பயணங்கள் என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம்.

சிறுவயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்புகள் பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பவர்களாகவும் ஆழ்ந்த சிந்தனையுடையவர்களாகவும் இருப்பார்கள். உங்களை நம்பி வந்தவர்களைக் காப்பாற்றும் இரக்க சுபாவம் உடைய இவர்கள் பாவ புண்ணியம் பார்த்து காரியங்களைச் செய்வார்.

அளவான குடும்பத்தைப் பெற்றிருப்பார்கள். கமிஷன், கட்டட கான்ட்ராக்ட், ஏஜென்சி, வாகனம், உணவு வகைகளால் அதிகம் சம்பாதிப்பார்கள்.

இசை ஆர்வம் மிக்கவர்களாக இருக்கும் இவர்கள், எப்போதும், எந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாலும் பாட்டு பாடிக்கொண்டோ, பாடலைக் கேட்டுக் கொண்டோ அந்த வேலையைச் செய்வார்கள். அவ்வப்போது அயல்நாடு சென்று வருவார்கள்.

சில நேரங்களில் முன் கோபம் உடையவர்களாகவும் கடுஞ் சொற்களைக் கூறுபவர்களாகவும் இருப்பார்கள்.

27 முதல் 33 வயதுக்குள்ளேயே பலர் பிரசித்தி பெற்று விளங்குவார்கள். 50 வயதுக்குப் பிறகு அனைத்து வசதி வாய்ப்புகளும் இவர்களை வந்து சேரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்த்துடன் வாழ்வார்கள்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்குரிய பரிகாரம்:

அஸ்தம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்

ஈரோடுக்கு அருகிலுள்ள கொடுமுடியில் வீற்றிருக்கும் சௌந்தரநாயகி உடனுறை மகுடேஸ்வரரை வணங்குதல் நலம்.

அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்

மயிலாடுதுறையில் உள்ள திருஇந்தளூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பரிமளரங்கநாயகி, ஸ்ரீ சந்திர சாபவிமோசனவல்லி உடனுறை ஸ்ரீ பரிமளரங்கநாதரை வணங்குதல் நலம்.

அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்

திருநாங்கூர், திருக்காவளம்பாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மடவரல்மங்கை மற்றும் ஸ்ரீ செங்கமலநாச்சியார் உடனுறை ஸ்ரீ கோபாலகிருஷ்ணனை வணங்குதல் நலம்.

அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்

திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் நாச்சியார் உடனுறை ஸ்ரீ உரகமெல்லணையானை வணங்குதல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு