Published:Updated:

சித்திரை நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள் பரிகாரங்கள்! #Astrology

சித்திரை நட்சத்திரக்காரர்கள்
சித்திரை நட்சத்திரக்காரர்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவை தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அஸ்தம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : சுக்கிரனின் குமாரனும் அசுரர்களின் புரோகிதனுமான த்வஷ்டா. மற்றொருவர் விஸ்வகர்மா.

வடிவம் : முத்துப் போன்ற வடிவமுடைய ஒரே நட்சத்திரம். 

எழுத்துகள் : பே, போ, ரா, ரீ. 

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுப் பலன்கள்:

கட்டுப்பாட்டுக்கும் காவலுக்கும் உரிய கிரகமான அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் இது. இதில் முதல் இரண்டு பாதங்கள் புதனின் கன்னி ராசியிலும், மூன்று, நான்காம் பாதங்கள் சுக்கிரனின் துலா ராசியிலும் வருகின்றன.

நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தைரியசாலியாகவும் தானதர்மம் செய்பவராகவும் பெற்றவர்களைப் பேணுபவராகவும் சொல்வதை அழுத்தந்திருத்தமாகச் சொல்பவராகவும் பொறுமையற்றவராகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

ஜாதக அலங்காரம், வலுவான உடல் நிலை உடையவராகவும் விரிந்த மார்பையுடையவராகவும் அதி வேக நடை கொண்டவராகவும், பரிந்து பேசுபவராகவும் செலவு செய்யாதவராகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது..

இவர்களுக்குக் கோபம் மூக்கின் நுனியிலேயே இருக்கும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார்கள். இவர்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு அதை வலியுறுத்தவும் செய்வார்கள்.

விஸ்வகர்மா பிறந்த நட்சத்திரம் என்பதால், இவர்களிடத்தில் ஆக்கும் சக்தி அதிகமாக இருக்கும். உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். அதேநேரத்தில் வலிய வரும் சண்டையை விடாமல் பதிலடி தருவார்கள்.

மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமானைப் போன்றவர்கள். காலத்தால் கட்டுப்படுத்த முடியாத கற்பனையாற்றலும் புதிய சகாப்தத்தை உருவாக்கும் செயல் திறனும் படைகளை வழிநடத்திச் சென்று பகைவர்களை வெற்றி காணும் குணமும் இவர்களிடம் உண்டு.

உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தாலும், நீங்கள் நினைத்ததைத்தான் முடிப்பார்கள்.

வானியல் அறிவும் கடவுளைப் பற்றிய ஆழ்ந்த ஞானமும் உங்களுக்கு உண்டு. நீல விழியும், நீண்ட கால்களும் கரங்களும் பெற்றிருப்பார்கள். 23 வயது வரை கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். 24 வயதிலிருந்து வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக 40 வயதுக்குள் ஓர் அந்தஸ்துக்கு வந்துவிடுவார்கள். 45 வயதிலிருந்து ராஜ யோகம் உண்டாகும்.

இவர்கள் சார்ந்திருக்கக் கூடிய துறையில் சாதிக்கக் கூடிய வல்லமையும் முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய ஒரு சக்தியும் மக்களால் போற்றி புகழக் கூடிய ஓர் அந்தஸ்தும் நாடாளும் யோகமும் இவர்களுக்குக் கிடைக்கும்.

பரம்பரை கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஞான சக்தி பெற்றவர்கள் என்று நந்தி வாக்கியம் என்ற நூல் இவர்களைப் பற்றிக் கூறுகிறது. பாதி வாழ்க்கையை சுகபோகியாகவும் மீதி வாழக்கையை துறவறத்திலும் கழிப்பார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கல்வி மிதம்தான். பட்டப் படிப்பு படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இருக்காது.

திருமணம் சற்று காலதாமதமாகவே நடக்கும். அளவான குடும்பம் அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அலங்காரமான ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள். அங்காரகன் நன்கு அமைந்திருந்தால் அயல் நாட்டில் சம்பாதிப்பார்கள். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

சித்திரை நட்சத்திர முதல் பாத பரிகாரம்:

நாகப்பட்டினத்துக்கு அருகிலிருக்கும் சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிங்காரவேலரை கார்த்திகையில் வணங்குதல் நலம்.

சித்திரை நட்சத்திர இரண்டாம் பாத பரிகாரம்:

திருக்கண்ணபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ நீலமேகப் பெருமாளை வணங்குதல் நலம்.

சித்திரை நட்சத்திர மூன்றாம் பாத பரிகாரம்:

கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாளை வணங்குதல் நலம்.

சித்திரை நட்சத்திர நான்காம் பாத பரிகாரம்:

சிதம்பரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமானை அர்த்த ஜாம பூஜையின்போது வணங்குதல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு