Published:Updated:

சுவாதி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள் பரிகாரங்கள்! #Astrology

சுவாதி நட்சத்திரம்
சுவாதி நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரத்தைத் தொடர்ந்து சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள்

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சித்திரை நட்சத்திரத்தைத் தொடர்ந்து சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : மான் வாகனத்தில் வீற்றிருப்பவரும் புகை நிற மேனி உடையவருமான வாயு பகவான்.

வடிவம் : ஒளிரும் வைரம் போன்ற வடிவம்.

எழுத்துகள் : ரு, ரே, ரோ, த.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் பொதுப் பலன்கள்:

இந்த நட்சத்திரம், 'ஜோதி' என்று அழைக்கப்படுவதும் ராகு பகவானின் சக்தி வாய்ந்த இரண்டாவது நட்சத்திரம். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இல்லையென்று கையேந்தி வருபவர்களை வெறுங்கையுடன் அனுப்பாமல் கொடுத்து உதவுபவராகவும், நூல் பல விரும்பிக் கற்கும் அறிஞராகவும் எதையும் நிதானமாக அணுகி நுணுக்கமாகப் புரிந்துகொள்பவராகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

ஜாதக அலங்காரம், சகல ஜனங்களையும் வசீகரிக்கும் ஆற்றலும் உண்பதில் பிரியமும் தொடையில் மருவும் உள்ளவர் என்றும் கடவுள் வழிபாடு கொண்டவர் என்றும் அரசர்களிடத்தில் ஊழியம் செய்பவராகவும், நீதியாகப் பேசுபவராகவும் விளங்குவார்கள் என்று கூறுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப்படுவார்கள். இவர்களை அறியாமலேயே ஒரு தெய்வீக சக்தி இவர்களை வழிநடத்தும். இரக்க குணம் அதிகம் உள்ளவர்கள். அறிவுக் கூர்மை பெற்றிருப்பார்கள். ஒழுக்கம், உண்மை பேசுதல் உள்ளிட்ட நற்பண்புகளைக் கொண்டிருப்பார்கள். எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறும் வரை அயராமல் உழைப்பார்கள்.

துலாம் ராசியிலேயே அதிக ஒளி வாய்ந்த இளமையான நட்சத்திரமாக சுவாதி இருப்பதால் இளகிய மனமும் அழகும் இளமையும் கொண்டு. எல்லா வயதிலும் சுறுசுறுப்பாகக் காணப்படுவார்கள். நீண்ட விரல்களை உடையவர்களாகவும் கண்களால் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். புன்னகை பூத்த முகமும் வசீகரத் தோற்றத்தையும் உடையவர்களாக இருப்பார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கும் அரங்கத்தில் இவர்கள் மட்டும் பளிச்செனத் தெரிவார்கள்.

விளையாட்டு குணம் இருக்கும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற சொல்லுக்கேற்ப நீதி, நேர்மை உடையவர்களாக இருப்பார்கள். யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டாலும் இவர்களுக்கு சரியெனப்படுவதை மட்டும் செய்வார்கள். நீங்கள் செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிடுவார்கள். அதிக நட்பைப் பெற்றிருந்தாலும், அரிதாக சிலரைத்தான் உடன் வைத்துக் கொள்வார்கள்.

எப்போதும் தூய்மையை விரும்புவார்கள். ஆதலால் வீடாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும், சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்புக் காட்டுவார். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத இயல்பும் உற்றார் உறவினர்களை மதிக்கும் குணமும் என்றும் இவர்களிடம் உண்டு.

சங்கீதம், நாட்டியம், இலக்கியம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் மொத்த விற்பனையாளர்களாகவும் மார்க்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தோற்றத்தை வைத்து வயதைக் கணிக்க முடியாது. தோற்றம் அவ்வளவு இளமையாக இருக்கும்.

எது நல்லது, எது கெட்டது என்று உணர்ந்து அதன்படி செயல்படுவதில் அதிக வல்லவர்கள். மன வலிமையும் எளிமையான பேச்சும் பாகுபாடு பார்க்காமல் தர்மம் செய்யும் இளகிய மனமும் இவர்களிடம் உண்டு.

பிள்ளைகளின் நலனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்கள். பெரியவர்களையும் தெய்வத்தையும் வணங்கும் பக்தியுடையவர்கள் நீங்கள். எப்போதும் சுதந்திரமாக சுற்றித் திரிய அதிகம் விரும்புவார்கள். உங்கள் சுதந்திரத்தில் யாரேனும் தலையிட்டால் கொஞ்சம் கோபப்படுவார்கள். சகல சாஸ்திரங்களையும் கற்று வைத்திருப்பார்கள். முதலாளி, தொழிலாளி என்ற பேதம் இவர்களிடம் கிடையாது.

தொழிலாளிகளை எப்போதும் அன்பாக வழிநடத்துவார்கள். உங்களில் பலர், கலைத் துறையைச் சார்ந்தவர்களாகவும் பேராசிரியர்களாகவும் கெமிக்கல் இன்ஜினீயர்களாகவும் இருப்பார்கள். ஏரோனாட்டிக்ஸ், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தாலும், ‘கற்றது கைமண் அளவு’ என்று தன்னடக்கத்துடன் செயல்படுவார்கள். தெரியாததை அறிந்துகொள்ள கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்பதில் வல்லவர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகத்தான் இவர்களுக்கு அமையும். நேருக்கு நேராக யாரையும் பகைத்துக் கொள்ளாத இவர்கள், பல தரப்பினருக்கும் நண்பர்களாக இருப்பார்கள். மனித உரிமைகளையும் கடமைகளையும் எடுத்துரைத்து அனைவரையும் திகைக்கச் செய்வார்கள். ஆனாலும், 'நீங்கள் சொல்வதே சரி' என்று சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் குடும்பத்தில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் நிலவும்.

பிராணிகள், பறவைகளிடம் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். மலை, கடல், மரம், கொடிகளைப் பார்த்தால் அங்கேயே உட்கார்ந்து விடுவார்கள். இரவில் வெளியூர் பயணங்கள் செல்வதென்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மத்திய வயதைத் தாண்டியதும் ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டு, கோயில் கோயிலாகப் பயணம் செய்ய விரும்புவார்கள். 27 வயதிலிருந்து வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். 39, 41, 42, 50, 51 வயதுகளிலெல்லாம் எல்லா வகையான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

சுவாதி நட்சத்திர முதல் பாத பரிகாரம்:

காரைக்குடிக்கு மேற்கேயுள்ள கோவிலூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நெல்லைநாயகி உடனுறை ஸ்ரீ கொற்றவளீஸ்வரரை வணங்குதல் நலம்.

சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:

அவிநாசியில் அருள்பாலிக்கும் பெருங்கருணை நாயகி உடனுறை ஸ்ரீ அவிநாசியப்பரை வணங்குதல் நலம்.

சுவாதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்

திருநெல்வேலியில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் காந்திமதி சமேத நெல்லையப்பரை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்

அரக்கோணத்துக்கு அருகில் சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்குதல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு