Published:Updated:

விசாகம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள் பரிகாரங்கள்! #Astrology

விசாகம் நட்சத்திரக்காரர்கள்
விசாகம் நட்சத்திரக்காரர்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சுவாதி நட்சத்திரத்தைத் தொடர்ந்து விசாகம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.


நட்சத்திர தேவதை: இருவர். இந்திரன், தேவ புரோகிதன் அக்னி.
வடிவம்: மண்பாண்டத்தைத் தயாரிக்க உதவும் சக்கர வடிவத்தில் ஐந்து நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள்: தி, து, தே, தோ.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கான பொதுவான பலன்கள்

குரு பகவானின் இரண்டாவது நட்சத்திரம் விசாகம். தமிழரின் தனிப்பெருங் கடவுளான ஸ்ரீமுருகப் பெருமானின் அவதார நட்சத்திரம். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புத்திமானாகவும் முன்கோபியாகவும் வலது பக்கத்தில் மரு மச்சம் உடையவராகவும், தான தர்மம் செய்பவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் நியாயத்தைப் பேசுபவராகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

ஜாதக அலங்காரம்,  இவர்கள்   நீதிமானாகவும் அரசர்களுக்கு இனியவராகவும் அடக்கமாகவும் இனிமையாகவும் பேசுபவராகவும் நான்கு வேதங்களை அறிந்தவராகவும் சற்றே முன்கோபம் இருந்தாலும் நற்குணவானாகவும் மக்களால் வணங்கப் படுபவனாகவும் இறை வழிபாட்டில் தீவிரமானவனாகவும் யானை, குதிரை மீதேறி சண்டையிடுவதில் வல்லவனாகவும் இருப்பார்கள் என்கிறது. 

பிருகத் ஜாதகம், சூட்சும புத்தி உடையவர், தயாள மனம் கொண்டவர், இந்திரியங்களை அடக்கி ஆளும் வல்லமை மிக்கவர் என்று கூறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வசீகரமான முகத்தையும் உடல் அமைப்பையும் பெற்றிருப்பார்கள். சிவந்த கண்களைப் பெற்றிருப்பார்கள். 

கொள்கை கோட்பாடுகளை நெருக்கடி நேரத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டால் மகேசன் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சட்டம், சமூக நீதி, விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என்று யாவும் அறிந்திருந்தும் வெகுளியாக இருப்பார்கள்! 

பல கோடி செல்வம் தந்தாலும், பொய் பேச மாட்டார்கள். தெளிவாகவும் அறிவுப்பூர்வமாக பேசுவார்கள். உண்மையை நியாயத்தை சொல்வார்கள். 

பெருமையும், புகழும் உடையவர்களாக வாழ்வார்கள். பெரியவர்களை மதிப்பார்கள். மதகுரு, சித்தர்களைக் கண்டால் பாதம் பணிவார்கள். தேவை அதிகரிக்கும்போதுதான் செல்வச் சேர்க்கையில் மனம் நாட்டம் கொள்ளும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அடிக்கடி நஷ்டத்தையும் மாற்றத்தையும் சந்திக்க வேண்டி வரும். 

பல துறைகளில் வருவாய் ஏற்பட்டு, பின்பு நின்றுவிட வாய்ப்பு உண்டு. கலை, கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் தீயவர்களுக்குத் தீயவராகவும் இருப்பார்கள் என்று காக்கேயர் நாடி கூறுகிறது. அடிக்கடி வேற்று மாநிலம், வேற்று நாடுகளுக்குச் சென்று வருவார்கள். 

பயணத்தை விரும்புவார்கள். பொதுவாக இவர்ங்களில் பலர், தவசிகளாகவும் ஞானிகளாகவும் இருப்பார்கள் என்று மணிகண்ட கேரள ஜோதிடம் கூறுகிறது. 

பெற்றோர்களை நேசிப்பவராகவும் மனைவி, மக்களைவிட உடன் பிறந்தவர்களுக்காக எதையும் தியாகம் செய்பவராகவும் திகழ்வார்கள். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆதலால், மேலோட்டமாகப் பத்து பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமணத்தை முடிக்காமல், ஜாதகத்தில் குரு, செவ்வாய், சுக்கிரனின் நிலையை நன்கு ஆராய்ந்து, அதன்பின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

உங்களுக்கு 23 வயதிலிருந்து எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியிலும் மேன்மை கிட்டும். விமானம் தொடர்பான கல்வி பயில்பவராகவும் கப்பல், சட்டம், வங்கி ஆகிய துறைகளில் பணி புரிபவராக இருப்பீர்.

சகல கலைகளையும் கற்று, மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். உறக்க சுகத்தை விரும்புவார்கள். உங்கள் உடல் நலத்தைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால், அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் பட்டம், பதவி, பணம் யாவும்  இவர்களைத் தேடி வரும். 

விசாகம்  நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:

விசாகம்  நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்

திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள எட்டிக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம். 

விசாகம்  நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம் பரிகாரம் 

ஓசூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரரை வணங்குதல் நலம். 

விசாகம்  நட்சத்திரம்  நான்காம் பாத பரிகாரம் 

திருவனந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஹரிலட்சுமி உடனுறை ஸ்ரீ அனந்தபத்மநாபனை ஏகாதசி திதியில் வணங்குதல் நலம். 

அடுத்த கட்டுரைக்கு