Election bannerElection banner
Published:Updated:

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

அனுஷம் நட்சத்திரக்காரர்கள்
அனுஷம் நட்சத்திரக்காரர்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள்

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விசாகம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

அனுஷம் நட்சத்திரம்

நட்சத்திர தேவதை : துவாதச ஆதித்தர்களில் ஒருவரும் சூரியனின் அம்சமான மித்ரன்.  
வடிவம் : கவிழ்ந்த தாமரை மலரைப் போன்ற வடிவமுடைய மூன்று நட்சத்திரத் தொகுப்பு.
எழுத்துகள் : ந, நி, நு, நே.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

சனி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர் கிரகமான செவ்வாயும் அமைதி கிரகமான சனியும் ஆள்கின்றன.   

ஜாதக அலங்காரம் எனும் நூல்,  இந்த நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள் குணவானாக,  தாம்பூலப் பிரியர்களாக, பக்தி உள்ளவர்களாக, அரசர்களால் பாராட்டப்படுபவர்களாக, பெண்களுக்கு இனியவர்களாக,  கூந்தல் அழகு, விசால மார்பு ஆகியவை உடையவர்களாக, பெற்றோரைக் காப்பாற்றுபவராக, அனைவராலும் பாராட்டப்படுபவராக இருப்பார்கள் என்று கூறுகிறது. பிருகத் ஜாதகம் எனும் நூல், செல்வந்தராகவும் வெளிநாட்டில் வசிப்பவராகவும் இடைவிடாது பயணம் செய்பவராகவும் விளங்குவார்கள் என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மாறுபட்ட மனநிலையைப் பெற்றிருப்பார்கள். தாய், தந்தையைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். தீராத தெய்வ பக்தியுடன் சமய நூலில் சொல்லப்பட்ட நெறிமுறைகளை வழுவாமல் பின்பற்றுவார்கள். எறும்புக்கும் தீங்கு நினைக்காதவர்கள். கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்கமாட்டார்கள்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றத்தைச் சுட்டிக்காட்டத் தவறமாட்டார்கள். பலருக்கும் சுமைதாங்கியாக விளங்கும் இவர்கள், தங்களுடைய சுக, துக்கங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். 

எந்நாளும் பயன்படும்  நற்காரியங்களைச் செய்வார்கள். இவர்களுக்கு இளகிய மனமும் தாராள குணமும் இருக்கும். அனைத்து உயிர்களின் மீதும் இரக்கப்பட்டு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வார்கள். இவர்கள் மிக அமைதியானவர்கள். பசி பொறுக்காதவர்கள். எல்லா விஷயங்களிலும் தேர்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகல் பார்க்காமல் உழைப்பார்கள். மன்னர்கள் மதிக்கும் அளவுக்கு அறிவாற்றலைப் பெற்றிருப்பார்கள். . 

கவர்ச்சியான தோற்றத்தால் பெண்கள் இவர்களை விரும்புவார்கள். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பணக்காரர்களாகவும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவுபவர்களாகவும் இருப்பார்கள். கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். கதை, காவியம், இசை, ஓவியம் போன்றவற்றில் விருப்பமுடையவர்கள்.

இவர்களில் பலர் நாட்டியப் பேரொளிகளாகவும் சிறந்த பாடகர்களாகவும் வசன கர்த்தாக்களாகவும் இருப்பார்கள். அகன்ற மார்பையும் திரண்ட தோள்களையும் பருத்த கால்களையும் பெற்றிருப்பார்கள். பல நற்குணங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் வாய்ப் பேச்சில் வித்தகர்கள். தெளிவாக, நல்ல கருத்துகளை மட்டுமே பேசுவார்கள். சிக்கனமாக இருப்பார்கள். இவர்களில் அனேகர் மருத்துவம், வங்கி, காவல், வாகனம், தீயணைப்பு, உளவு ஆகிய துறைகளில் பணியாற்றுவார்கள்.

ஒரு சிலர் கட்டடக் கலை, கான்ட்ராக்ட் போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். உணவு விஷயத்தில் ஒதுங்கி நிற்காமல், ஒரு கை பார்த்துவிடும் இவர்கள், தாம்பூலப் பிரியர். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இவர்கள் ஆழ்மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். யாருக்காகவும் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சிறுவயதில் அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்பட்டாலும்,  29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டு. குறிப்பாக, 40 முதல் 60 வயது வரை உள்ள காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம்.
பெரியவர்களிடத்தில் விசுவாசமும் மரியாதையும் உள்ளவராக இருப்பார்கள். பலராலும் பாராட்டப்படும் செயல்களைச் செய்வார்கள். பெரிய பதவிகளை வகிக்கக்கூடியவராக இருப்பார்கள். மதப் பற்று மிக்கவராகவும் கூச்ச சுபாவம் உடையவராகவும் இருப்பார்கள்.

வெளிநாடு சென்றால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருக்கும். அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்கள். மக்கள் செல்வாக்கால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு உண்டு. 
குடும்பத்தில் அன்பும், பாசமும் அதிகம் வைத்திருப்பதுடன் மனைவிக்கு மரியாதை கொடுப்பவராகவும் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்வார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள். ஆழ்ந்த சிந்தனை ஆற்றலுடையவர்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்ய விரும்புவார்கள். 

செல்வம், புகழ், செல்வாக்கு, பெருமை யாவும் இவர்களைத் தேடி வரும். அரசு விருதுகள் பல பெறுவார்கள். பெரியவர்களிடத்தில் விசுவாசம் உள்ளவராகவும் ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து எல்லோரிடத்திலும் நட்புறவாகவும் இருப்பார்கள். தொழிலாளர்களுக்காகப் போராடுபவராகவோ தொழிற் சங்கத்துக்குத் தலைமை தாங்குபவராகவோ இருப்பார்கள். 

அனுஷம் நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:

அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்
விருத்தாசலத்துக்கு அருகிலுள்ள ராஜேந்திரப் பட்டினத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீறாமுலையம்மன் உடனுறை திருக்குமரேசரை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
வரகுணமங்கை (நத்தம்) என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வரகுணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ விஜயாசனப் பெருமானை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்
திருச்சிறுப்புலியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீ சலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்
காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு