Published:Updated:

கேட்டை நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

கேட்டை நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட  பரிகாரங்கள்!
கேட்டை நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட பரிகாரங்கள்!

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அனுஷம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : தேவேந்திரன்.

வடிவம் : குண்டல வடிவத்தில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு.

எழுத்துகள் : நோ, யா, யீ, யூ.

கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள்:

புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது இந்தக் கேட்டை நட்சத்திரம். நட்சத்திர மாலை, வருங்காலத்தை உணர்பவராகவும் தான தருமங்கள் செய்பவராகவும் நட்பு வட்டம் அதிகமுள்ளவராகவும் விளங்குவார்கள் என்று கூறுகிறது.

ஜாதக அலங்காரம், தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு, அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, ஆகியவை உள்ளவராக இருப்பார்கள் என்று கூறுகிறது.

நீர்நிலைகளில் மூழ்கிக் குளிக்கப் பிரியமுள்ளவராகவும் மூத்தவர்களைக் காப்பாற்றுபவராகவும் நொறுக்குத் தீனி தின்பவராகவும் நாடாள்பவருக்கு நண்பராகவும் கண்டிப்பு காட்டுபவராகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

பிருகத் ஜாதகம், அதிக நண்பர்கள் அற்றவர், கிடைத்ததைக்கொண்டு திருப்தியடைபவர், பரோபகாரி என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குரு இல்லாமலேயே வில்வித்தையைக் கற்றுக்கொண்ட ஏகலைவனைப்போல யாருடைய உதவியும் இல்லாமல் சுயமுயற்சியால் எதிலும் முன்னேறுவார்கள். சிறு வயதிலேயே சொந்த பந்தங்களால் வஞ்சிக்கப்படுவார்கள்.

ஆரம்பத்தில் வெகுளியாக இருந்து, பின்னர் விவேகியாக மாறுவார்கள். செய்நன்றி மறவாதவர். சண்டை சச்சரவுகளை விரும்பாதவர். சமாதானத்துக்காகக் கடைசிவரை பாடுபடுவார்கள்.

தேவேந்திரன் அவதரித்தது இந்தக் கேட்டை நட்சத்திரம். நுண்ணறிவும் கல்வியும் பேச்சுத் திறனும் பெற்றிருப்பார்கள். மற்றவர்களின் மனநிலையை அறிந்து பேசும் திறமைசாலிகள். எந்தச் செயலை செய்தாலும் வேகமாகச் செய்து முடிக்கவேண்டுன்று எண்ணுவார்கள். புத்தகங்களைப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.

பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவார்கள். நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்வார்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், இவர்களிடம் நற்குணங்கள் ஏராளம் இருக்கும். முன்கோபி. ஆனாலும் மலர்ந்த முகமும், புன்னகையும் இருக்கும் இனிமையானவர். நண்பர்கள் அதிகமானாலும் யாராவது ஒருவரிடத்தில் மட்டும்தான் நெருக்கமாக இருப்பார்கள்.

சிற்றுண்டிப் பிரியர்கள். இவர்களுக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் குணம் உண்டு. செலவாளி. தந்திரசாலி. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கேற்ப இருப்பதை வைத்து நிம்மதி அடைவார்கள். கடலில் விளையக்கூடிய முத்து, பவளம் போன்றவற்றை விரும்பி அணிவார்கள். மந்திரிக்கு அந்தரங்க ஆலோசகராக இருப்பார்கள்.

தைரியசாலி. கர்வம் கொண்டவர். குடும்பம், உடன் பிறப்புகள், இவர்களுடைய இனம், உறவினர் ஆகிய ஒரு வட்டத்தைப் பற்றி மட்டும் பெருமையாகப் பேசுவார்கள். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உயர்ந்த இடத்தில் சினேகம் வைத்திருப்பார்கள். 22 வயது வரையில் நோயால் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். 24 வயதிலிருந்து ராஜயோகத்தைப் பெறுவார்கள். காதலித்துக் கல்யாணம் முடிப்பார்கள். 46 முதல் 56 வயது வரை மன திருப்தியான வாழ்க்கை அமையும்.

இவர்களில் பலர் கதாசிரியர், நூல் வெளியீட்டாளர், பத்திரிகை நிருபர், உளவாளி, மனோதத்துவ நிபுணர், நடிகர், கட்டட கான்ட்ராக்டர், அழகுக் கலை நிபுணர் என்று பன்முகப் பணியில் பிரதிபலிப்பார்கள். சிலர், புகைப்படம், கம்ப்யூட்டர் போன்ற தொழில்களிலும் எல்.ஐ.சி, அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனம் போன்ற நிறுவனங்களிலும் வேலை செய்வார்கள். எப்போதும் பகைவர் சூழ்ந்திருந்தாலும் அச்சமில்லாமல் இருப்பார்கள். உண்மை பேசும் அருங்குணம் உங்களிடம் உண்டு.எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற சூழ்நிலையை சிலசமயங்களில் சந்திக்க வேண்டி வரும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

கேட்டை நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:

விராலிமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மனை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:

உறையூரில் அருள்பொழியும் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாளை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு