Published:Updated:

மூலம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள்
மூலம் நட்சத்திரக்காரர்கள்

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கேட்டை நட்சத்திரத்தைத் தொடர்ந்து மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை :  அஷ்ட திக்கு பாலர்களில் வடமேற்குக்கு அதிபதியான நைருதி.
வடிவம் :   அங்குசம் போன்ற வடிவத்தில் ஆறு     நட்சத்திரக் கூட்டமைப்பு.
எழுத்துகள் : யே, யோ, பா, பீ.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  இல்லறம் மற்றும் வைதீகத்தில் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்பவர், தூக்கத்தில் விருப்பமுடையவர், ஒழுக்க சீலர், ஆயுதம், கருவி, உபகரணங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்பவர், மேன்மையான தவம் புரிபவர், தாய், தந்தையை வணங்குபவர் என்று கூறுகிறது.

நட்சத்திர மாலை, இவர்களை பலசாலி, அரசனுக்கு நண்பர், ஆயுதம் பிடிக்க வல்லவர், சுற்றத்தாரை மதிப்பவர், சந்திரனைப் போல அழகிய முகமுடையவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்று உரைக்கிறது.
யவன ஜாதகம், இவர்கள் தனவந்தர், சுகமுடையவர், போகத்தை அனுபவிப்பவர், தர்மம் அறிந்தவர், பந்துக்களைக் காப்பாற்றுபவர், கூடவே கர்வமும் உடையவர், பிறருக்கு இம்சை செய்யாதவர் என்று இயம்புகிறது.
பிருகத் ஜாதகம், இவர்கள் செல்வந்தர், ஸ்திர புத்தி உள்ளவர், அனைத்து விஷயங்களையும் அனுபவிப்பவர் என்றும் கூறுகிறது.

இவர்கள் பூமியைப் போல் பொறுமையானவர். அதர்மத்தைக் கண்டால் பூகம்பமாக வெடிப்பவர். நேர்மைக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டவர். அறநெறி தவறாதவர். கம்பீரமான தோற்றமும் தெய்வ பக்தியும் கொண்டவர். பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி கொண்டிருப்பார்கள்
பெற்றோர், உற்றார், உறவினர் என எல்லோரையும் மதிப்பவர். வேத விற்பன்னர், வித்வான், சாது ஆகியோரைக் கண்டால் கால் தொட்டு வணங்கி கை கட்டி நிற்பார்கள். முன்னோர், மூத்தோர் ஆகியோரின் வார்த்தைகளைத் தவறாமல் பின்பற்றுபவர். 
சிறுவயதிலேயே நல்ல உடல் வாகும், பேச்சுத் திறமையும் கொண்டிருப்பார்கள்.

கல்வியறிவுடன் அனுபவ அறிவும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். கல்வி கற்கும் வயதிலேயே சுக்கிர தசை வருவதால் வாகனம் உள்ளிட்ட பல வசதிகள் இயல்பாகவே இருக்கும். ஆனால், இவர்களில் சிலர் படிப்பில் அலட்சியமாக இருப்பார்கள். இடையில் கல்வி தடைப்படுவதும் உண்டு. ஆசிரியர்களிடம் எதிர்க் கேள்வி கேட்பது இவர்களுக்குக் கை வந்த கலை. இவர்களில் பலர், விளையாட்டில் மாநில அளவில் பதக்கங்கள் பெறுவார்கள்.

மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இவர்களில் பலர் ராணுவம், காவல் ஆகிய துறைகளில் சவாலான பெரிய பதவிகளில் இருப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். வேலை செய்யும் நிறுவனத்துக்கு விசுவாசமாக அயராது உழைப்பார்கள். மூத்த அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே  சிறந்த பாலமாக இருப்பார்கள். தன்மானத்துக்கு பங்கம் ஏற்பட்டால்,  அந்த நிமிடமே பதவியைத் துச்சமாக எண்ணி, ராஜினாமா செய்வார்கள். 

இவர்களில் பலர் 40 வயதிலிருந்து சுயதொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகளைத் திட்டமிட்டுப் படிக்க வைப்பார்கள். 

51 வயதிலிருந்து அதிகார உத்தியோகத்தில் அமர்வார்கள். ஓய்வுபெற்ற பின்பும் ஓயாமல் உழைப்பார்கள். பைல்ஸ், நுரையீரல், கல்லீரல் பாதிப்பு வந்து நீங்கும். இவர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் முரட்டுத் தனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே நல்லது. இவர்களில் பலர் வயதான காலத்தில் துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள்.

கோயில்களைவிட சித்த பீடங்களையும் தியான மண்டபங்களையும் தேடிப் போவார்கள். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய நான்கு பாத பரிகாரங்கள்:

மூலம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
நாமக்கலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை, ஸ்ரீ நரசிம்மரையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வணங்குதல் நலம்.

மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்
திருநீர்மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அணிமாமலர் மங்கை உடனுறை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூலம் நட்சத்திரம்மூன்றாம் பாத பரிகாரம்
திருவதிகையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரரை வணங்குதல் நலம்.

மூலம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
சமயபுரத்தில் ஆட்சி செய்யும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்குதல் நலம்.