Published:Updated:

பூராடம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

பூராடம் நட்சத்திரக்காரர்கள்  ஆன்மிக ஜோதிட  பரிகாரங்கள்!
பூராடம் நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட பரிகாரங்கள்!

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். மூலம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : வாருணி என்ற ஜலதேவி.
வடிவம் : பிறை சந்திர வடிவமுடைய நான்கு நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள் :  பூ, த, ப, டா.
பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

சுக்கிரனின் அம்சமாக வருவது இந்த பூராட நட்சத்திரம். ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட உடலும் குறுகிய நெற்றியும் உள்ளவர்கள்; வாசனை திரவியங்கள் மீது விருப்பமுள்ளவர்கள்; ஆலோசனை அளிப்பவர்கள்; சுவையான உணவை விரும்பி உண்பவர்கள்; தாய்ப் பாசம் அதிகம் உள்ளவர்கள்; பொய் சொல்லாதவர்கள்; பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் என்று கூறுகிறது.
நட்சத்திர மாலை, தாமரை போன்ற அழகிய, மெல்லிய கரங்களைக் கொண்டிருப்பார்கள்; பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள்; உண்மையே பேசுவார்கள்; கல்வியின் மீது நாட்டம் உள்ளவர்கள் என்கிறது.

யவன ஜாதகம், பிரகாசமான  முகமுள்ளவர்;  ஜீவகாருண்யம் உள்ளவர்; துக்கத்துக்குக் கலங்காமல் அதையும் அனுபவிப்பவர் என்று விவரிக்கிறது. 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கனிவான் பார்வையால் அனைவரையும் காந்தமாக ஈர்ப்பார்கள். 'பூராடம் போராடும்' என்ற கூற்றுக்கு இணங்க எப்பாடு பட்டேனும் நினைத்ததை நடத்தி முடிப்பார்கள். பிரச்னை என்றால், மூலையில் முடங்காமல் தைரியமாக எதிர்கொள்வார்கள். மந்திரியாக இருந்தாலும், மண் சுமப்பவரானாலும் சரிசமமாகப் பழகுவார்கள். இவர்களது வாழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சம்பவங்களைவிட எதிர்பாராத திடீர் சம்பவங்கள்தான் இவர்கள் வாழ்வை திசை திருப்பும்.

சூது வாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு பார்த்து பராமரிப்பார்கள். இவர்கள் ஆவேசப்பட்டாலும் ஆத்திரப்பட்டாலும் அதிலும் ஒரு நளினம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறை காதால் கேட்டால் ,அதை அப்படியே கிரகித்துக்கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவர்கள்.

நீங்கள் அமைதியை மிகவும் விரும்புபவர்கள். பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையைக் கண்டால் மனதைப் பறிகொடுப்பார்கள். எல்லோரிடமும் மனம் விட்டு பேசுவார்கள். ஆரம்பத்தில் அனைவரையும் முழுமையாக நம்புவார்கள். அனுபவத்தால் பிறகு மாறுவார்கள். சிறுவயதிலேயே ஓவியத்தில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் உண்டு. கண் பார்த்ததை கையால் வரைவதில் வல்லவர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் இவர்கள், மற்றவர்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். வாகனத்தில் வேகமாக வலம் வருவதை விரும்புவார்கள். பொது நலச் சிந்தனை இவர்களுக்கு உண்டு. சக்திக்கு மீறியது எதுவாக இருந்தாலும் ஒதுக்கி விடுவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்.  உயர்வு, தாழ்வு பார்க்காமல் எல்லோரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோகம், தியானம் போன்ற மனவளக் கலையிலும் தற்காப்புக் கலையிலும் ஆர்வம் உள்ளவர். பள்ளிப் பருவத்தில் கூடா நட்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கணக்குப் பதிவியல், வணிகவியல், நிதி, மக்கள் தொடர்பு, பொது மேலாண்மை, துப்பறிதல், ஃபேஷன் டெக்னாலஜி, தொலைத் தொடர்பு, சுற்றுச் சூழல் ஆகிய துறைகளில் கல்வி கற்று முன்னேறுவார்கள்.

பொதுவாக இவர்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள். முழுஉரிமை, சலுகை தரும் நிறுவனத்தில் மட்டுமே தொடர்ந்து வேலை பார்ப்பார்கள். அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி கம்பெனியை முன்னேறச் செய்வார்கள். சிலர், வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்குவார்கள். அயல்நாடு செல்வார்கள். 37 வயதிலிருந்து நாடாளும் யோகம் தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அடைவார்கள்.

பூராடம் நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:

பூராடம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
தாரமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமியம்மை உடனுறை ஸ்ரீ கைலாசநாதரை வணங்குதல் நலம்.

பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூரணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாளை வணங்குதல் நலம்.

பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.

பூராடம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
திருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்தல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு