##~##

ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனி குல ஸம்பதாம்
பதவீ பூர்வ புண்ணியானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா

குழந்தைக்கு ஜாதகம் எழுதும்போது முதலில் எழுதும் தினசுத்திப் பாடல் இது. 'பதவீ பூர்வ புண்ணியானாம்’ என்ற வாசகம், நமது பூர்வஜென்மத்தில் செய்த புண்ணியத்தைக் குறிக்கிறது. பூர்வ ஜென்மத்தில் அதிக புண்ணியம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெறுவார்கள்.

பூர்வஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்கிறோமா என்பதை அவரவர் ஜாதகத்தின் மூலம் அறியலாம். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து (லக்னமே 1-ஆம் இடம் ஆகும்) எண்ண வரும் 5-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். அந்த வீட்டுக்கு அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி ஆவார். பூர்வ புண்ணியத்துக்குக் காரகன் குரு.

ஒருவரது ஜாதகத்தில் 5-ஆம் வீடும், 5-ஆம் வீட்டோனும், குருவும் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் அதிகம் புண்ணியம் செய்து, அந்தப் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக இந்த மண்ணுலகில் அவதரித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஒருவரது ஜாதகத்தில் 5-ஆம் இடமும், 5-ஆம் வீட்டோனும், குருவும் அதிபலம் பெற்றிருந்தால் குறிப்பிட்ட ஜாதகருக்கு உயர் பதவி வகிக்கும் யோகம் நிச்சயம் உண்டாகும். உதாரணமாக மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 5-ஆம் இடம் சிம்மம். இந்த ராசியின் அதிபதி சூரியன். இவர் சிம்மத்தில் ஆட்சியாகவோ, மேஷத்தில் உச்சமாகவோ இருந்தால் பலம் பெற்றவர் ஆவார்.

இந்த சூரியனுடன் குரு சேர்ந்திருந்தாலோ, சூரியனை குரு பார்த்தாலோ சிவராஜ யோகம் ஏற்பட்டு, சிவபெருமானின் அருளால் உயர்பதவி யோகம் உண்டாகும். குறிப்பிட்ட ஜாதகர் சிவ வழிபாடு செய்வதன் மூலம் மேலும் சிறப்புக்களைப் பெறமுடியும்.

பதவி உயர்வு தேடி வரும்!

செவ்வாய் சிம்மத்திலும், குரு மேஷத்திலும், சூரியன் தனுசிலும் ஒருவர் வீட்டில் மற்றவர் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாக இருந்தாலும் உயர் பதவி கிடைக்கும். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் ராஜயோகமும் ஸித்திக்கும். அரசாங்கத்தில் உயர் பொறுப்புள்ள அமைச்சர் பதவி கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் 1, 4, 7, 10-ஆம் இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். இவை விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும். 1, 5, 9-ஆம் இடங்கள் திரிகோண ஸ்தானங்கள் ஆகும். இவை லட்சுமி ஸ்தானங்கள் ஆகும். ஒரு கேந்திரத்துக்கு அதிபதியும், ஒரு திரிகோணத்துக்கு அதிபதியும் ஒன்றுசேர்ந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ இணைந்திருப்பது யோகமாகும். இதன் மூலமும் ஒருவருக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும்.

இதில் 10-ஆம் இடம் உயர் கேந்திர ஸ்தானம் ஆகும். 9-ஆம் இடம் உயர் திரிகோண ஸ்தானமாகும். ஒருவரது ஜாதகத்தில் 9-ஆம் வீட்டோனும், 10-ஆம் வீட்டோனும் ஒன்று கூடி வலுத்திருந்தால் தர்மகர்மாதிபதி என்ற உயர்ந்த, விசேஷமான யோகம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் உயர்பதவியை மிகச் சுலபமாகப் பெறுவர். சரித்திர புருஷராகவும் முடியும். அவரது புகழ் நீடித்து நிலைத்து என்றும் அழியாமல் இருக்கும்.

அரசியல் பதவி யாருக்கு வாய்க்கும்?

சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் ராஜ கிரகங்கள் ஆவார்கள்.  மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை கால புருஷனின் 1, 5, 9-ஆம் இடங்கள் ஆகும். குறிப்பிட்ட ராசிகளில் ராஜ கிரகங்கள் அதிபலம் பெற்றிருந்தால், அரசியலில் உயர்ந்த பதவி கிடைக்கும்.

குறிப்பாக மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு சிம்மத்தில் செவ்வாயோ, சூரியனோ, குருவோ பலம் பெற்று இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கும்.

எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான 5-ஆம் வீட்டோன், தன் உச்ச ராசியில் இருந்தாலும், 10-ஆம் வீட்டில் பலம் பெற்றிருந்தாலும் அரசியலில் உயர் பதவி கிடைக்கும்.  

உதாரணமாக மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் வீடு மீனம். இந்த மீனத்தில் 5-ஆம் வீட்டோன் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தால் உயர் பதவி யோகம் ஸித்திக்கும். மீன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் வீடு தனுசு. இதன் அதிபதி குரு. இவர் 5-ல் தனித்து இல்லாமல், ஆட்சி பெற்ற சந்திரனுடன் கூடியிருந்தால் உயர் பதவி நிச்சயம் கிடைக்கும். 10-ஆம் வீட்டோன் வலுத்து, 5-ஆம் வீட்டோனுடன் கூடி, குருவால் பார்க்கப்பட்டாலும் அரசியலில் உயர்பதவி கிட்டும்.

பதவி உயர்வு தேடி வரும்!

பதவி உயர்வு எப்போது?

பலம் மிகுந்த 10-ஆம் வீட்டோனது தசை- புக்தி காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும். உதாரணமாக கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு தொழில் ஸ்தானமான மேஷத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்க, அவரது தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

10-ஆம் வீட்டுக்கு நேர் 7-ஆம் வீடான 4-ஆம் இடத்தில், 4-ஆம் வீட்டோன் அமர்ந்திருக்க, அவருடன் சுபக் கிரகங்கள் கூடியிருந்தால்... 4-ஆம் வீட்டோனின் தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

4-ஆம் வீடு நாம் அமரும் நாற்காலியைக் குறிக்கும். அந்தப் பதவி அல்லது வேலை மிகச் சிறப்பாக அமைய,  4-ஆம் இடம் வலுத்திருக்க வேண்டும். 4-ஆம் வீட்டோனும், 10-ஆம் வீட்டோனும் இணைந்து 4-ல் அமர்ந்து, 10-ஆம் இடத்தைப் பார்க்கும் நிலை அமையப் பெற்ற ஜாதகருக்கு உயர்பதவி கிடைப்பதுடன், பதவிச் சிறப்பும் உண்டாகும். குறிப்பிட்ட ஜாதகரால் அந்தப் பதவிக்கே சிறப்பு உண்டாகும்.

குறிப்பாக, தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்புடைய சுப ஆதிபத்தியமுள்ள கிரகங்களின் தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

பதவியைப் பெறுவதற்கு உரிய வழிபாடுகள்...

மேஷ, ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சனி பகவான், சாஸ்தா மற்றும் ஆஞ்சநேயருக்கு ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

மிதுன, மீன லக்னத்தில் பிறந்தவர்கள் குருவுக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வதன் மூலம் உயர் பதவி கிடைக்கும்.

கடக, கும்ப லக்னக்காரர்கள் முருகப்பெருமானையும் செவ்வாயையும் தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும்.

சிம்ம லக்னக்காரர்கள் மகாலட்சுமியையும் சுக்கிரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் கிடைக்கப்பெறலாம். கன்னியா, தனுசு லக்னக்காரர்கள் புதனையும் திருமாலையும் வழிபட வேண்டும். துலாம், மகர லக்னக்காரர்கள் சந்திரனையும் பராசக்தியையும், விருச்சிக லக்னக்காரர்கள் சூரியனையும் ருத்திரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும்.

பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. பக்தி, ஞானம், தவம், வேள்வி, சத்குருவின் அருள், இறை அருள் ஆகியவற்றின் மூலம் எதையும் சுலபமாகப் பெறலாம்.  நினைத்ததை சாதிக்கலாம்.

முதலில் உயர்பதவியைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்துக்கொண்டு, அதையே எப்போதும் சிந்தித்து, அதற்கான முயற்சிகளில் விடாமல், தளர்ந்துவிடாமல் ஈடுபட்டால் வெற்றிக்கனி உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு