Published:Updated:

சதயம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

சதயம் நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட  பரிகாரங்கள்!
சதயம் நட்சத்திரக்காரர்கள் ஆன்மிக ஜோதிட பரிகாரங்கள்!

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். அவிட்டம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : வருணன்.
வடிவம் : கோள வடிவத்தில் தோன்றும் 100 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.
எழுத்துகள் :  கோ, ஸ, ஸீ, ஸு.


சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

ராகு பகவானின் மூன்றாவது நட்சத்திரம். நட்சத்திர மாலை,  இந்த நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள் வேதம், உபநிடதம் ஆகியவற்றை விரும்பிக் கற்பார்கள்; நேர்வழியில்தான் பணம் சம்பாதிப்பார்; தெய்வ பக்தி உள்ளவர்; வழக்குகளை ஆராய்ந்து நீதி சொல்பவர்; செல்வந்தர் என்கிறது. 

ஜாதக அலங்காரம், இவர்கள் ஒழுக்கம் அற்றவர்களையும் கோபமுள்ளவர்களையும் வெறுப்பார்கள்; கடுமையற்ற நோய் உள்ளவர்; அனைவருக்கும் பிரியமானவர்; பொய் சொல்லாதவர்; சமஸ்கிருதம், தமிழ் போன்ற மொழிகளில் பண்டிதர்; உடல் வலிமையானவர்; பெண்களுக்கு விருப்பமுள்ளவர்; நீர்நிலை விளையாட்டுகளை விரும்புபவர்; பகைவர்களை வெற்றி காண்பவர் என்கிறது. 
யவன ஜாதகம், இவர்கள் புத்திசாலி; சுகவாசி; அரசர், அந்தணர், பசு ஆகியவற்றை விரும்புபவர்; சத்தியத்தின் மீது நம்பிக்கை உடையவர் என்கிறது. 

கண்டம் விட்டு கண்டம் செல்பவராகவும், திறமைசாலிகளைச் சந்தித்து மகிழ்பவராகவும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பவராகவும் பிரச்னைகளைத் தீர்ப்பவராகவும் எதிரிகளை எளிதில் வெற்றிகொள்ளும் பராக்கிரமசாலியாகவும் திகழ்வார்கள். பூமியைப் போல் பொறுமையானவர்கள். எதிரியை இரண்டு முறை மன்னித்துப் பார்ப்பார்கள். மூன்றாவது முறை வீழ்த்திவிடுவார்கள்.
நந்தி வாக்கியம் என்ற நூல், நொறுக்குத் தீனி தின்பவர்; பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்; ஆலயம் எழுப்புவார்; பித்த தேகம் உடையவர்; உழைப்பாளி என்றும் கூறுகிறது. 

வசிஷ்ட சிந்தாமணி என்ற நூல், பாமரர், படித்தவர் என்ற பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்; மனிதாபிமானம் உடையவர் என்கிறது. துய்ய கேரளம் என்ற நூல், 'செலவாளி' என்கிறது. கேரளாச்சாரியம் என்ற நூல், சொத்தை விற்று செலவு செய்பவர் என்கிறது. 

எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். உடன்பிறந்தவர்கள் மீது பாசம் உள்ளவர். ஆனால், இவர்கள் வைக்கும் அளவுக்கு பாசத்தை அவர்கள் வைத்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். 

சுயசிந்தனையாளராகவும் நேர்மையாளராகவும் கற்றறிந்தவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்பவராகவும் இருப்பார்கள். சத்தியவான். சொன்ன சொல்லை உங்கள் தலையை அடகு வைத்தாவது நிறைவேற்றுவார்கள். 
18 வயது வரை எந்தக் குறிக்கோளும் இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்வார்கள். பிறகு பெரிய குறிக்கோளுடன் இருப்பார்கள். கப்பலில் பணியாற்றுவார்கள். இவர்களில் சிலர் பைலட், தொழிலதிபர், தொழிற் சங்கத் தலைவர் ஆகிய பணிகளில் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஸ்டீல், கார் தொழிற்சாலை, பனியன் கம்பெனி, சாயப் பட்டறை, ஓட்டல் ஆகியவற்றை வைத்து நடத்துவார்கள். 

ஆரம்பத்தில் தனியார் துறையில் வேலை பார்த்தாலும், கிட்டத்தட்ட 39 வயது முதல் சுயதொழில் செய்பவர்களாகவே உங்களில் பலர் இருப்பார்கள். 

கனரக வாகன வியாபாரம், மேம்பாலம் கட்டுவது, சாலை அமைத்தல், அனல் மின் நிலையம் கட்டுவது, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற பிரமாண்டப் பணிகளைச் செய்பவர்களாக இருப்பார்கள். 

மனைவிக்குக் கொஞ்சம் பயந்தவராகவும் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் தருபவராகவும் இருப்பார்கள். 51 வயது முதல் பெரிய பதவிகள் தேடி வரும். சமூக அந்தஸ்தும் அப்போது உயரும். 

சதயம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

சதயம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கோமதியம்மை உடனுறை ஸ்ரீ சங்கரலிங்கரை வணங்குதல் நலம்.

சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்: 
உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மங்களேஸ்வரியம்மை உடனுறை ஸ்ரீ மங்களநாதரை வணங்குதல் நலம். 

சதயம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்: 
தஞ்சாவூரில் அருள்புரியும் ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை ஸ்ரீ பிரகதீஸ்வரரையும் ஸ்ரீ கருவூர்தேவரையும் வணங்குதல் நலம். 

சதயம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்: 
தஞ்சாவூருக்கு வடக்கே உள்ள தென்குடித்திட்டையில் அருள்புரியும் உலக நாயகியம்மை உடனுறை வசிஷ்டேஸ்வரரையும் பசுபதீஸ்வரரையும் வணங்குதல் நலம்.

அடுத்த கட்டுரைக்கு